மாயமான மலேசிய விமானம்: தேடும் பரப்பை விரிவுபடுத்த நடவடிக்கை

malaysian-airlines-mh370மலேசியன் ஏர்லைன்ஸ் விமானமான எம்.எச்.370 விமானம் காணாமல் போய், ஓர் ஆண்டுக்கு மேலாகியும் அதனைத் தேடும் பணி இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும், குறிப்பிடத்தக்க பலன் ஏதும் இல்லை. இந்தியப் பெருங்கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, ஓராண்டுக்கு முன்னர் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கும் மூன்று நாடுகள் , அடுத்த மாதத்துக்குள் இந்த முயற்சியில் வெற்றி கிடைக்காவிட்டால், தேடும் கடல் பரப்பை இரு மடங்கு விரிவாக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளன. முதலில் தேடும் எல்லையாக சுமார் 60,000 சதுர கி.மீ., பரப்பு நிர்ணயிக்கப்பட்டது. இந்தப் பரப்பில் மட்டும் தேடியுள்ள குழுவினர், இதுவரை மலேசிய விமானத்தைக் கண்டுபிடிக்க முடியாமல், விமானத்தின் சிதறிய பாகங்களோ அல்லது வேறு எந்த விதத் துப்புமோ கிடைக்காமல் தடுமாறி வருகின்றன. கோலாலம்பூரில் சீனா, ஆஸ்திரேலிய மற்றும் மலேசிய நாடுகளின் அமைச்சர்கள் சந்தித்துப் பேசிய பின்னர், இந்த விமானம் இந்த இடத்தில் பறந்திருக்கலாம் என்று அனுமானித்த வான்பாதையின் வழியாக, மேலும் 60,000 கிமீ பரப்பளவுள்ள கடல் பரப்பில் தேடுவதை விரிவாக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, அந்தமானை ஒட்டிய ஒரு சிறுதீவுப் பகுதியில் அந்த விமானம் பறந்ததைப் பார்த்ததாக, தீவு வாசிகள் கூறியிருந்தனர். ஆனாலும் அந்தப் பகுதியிலும் எந்தவிதத் துப்பும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. மாயமான விமானத்தின் கதி என்ன என்பது குறித்து கண்டுபிடிக்காமல் ஓயப் போவதில்லை என்று மூன்று நாடுகளும் முடிவு செய்துள்ளன.