உலகக் கோப்பை தொடரின் துவக்க விழா இன்று, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் என, இரு இடங்களில் ஒரே நேரத்தில் தொடங்கியது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் 14 அணிகள் பங்கேற்கும் 11வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 14ம் தேதி சனிக்கிழமை துவங்குகிறது. மார்ச் 29ம் தேதி வரை, இத்தொடரில் மொத்தம் 49 போட்டிகள் நடக்கவுள்ளன. இதற்கான துவக்க விழா, இன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் ஆகிய இரு இடங்களில் ஒரே நேரத்தில் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு விழா துவங்கியது. மெல்போர்னில் திறந்தவெளி மைதானத்தில் நடந்த விழாவில், தொடரில் பங்கேற்கும் வீரர்கள், முன்னாள் வீரர்கள் கலந்து கொண்டனர். முதலில் வீரர்கள் அணிவகுப்பு அடுத்து துவக்கவிழா உரையை தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாப் பாடகிகள் ஜெசிகா மாவ்பாய், டினா அரினா உள்ளிட்டோருடன் சிம்பொனி இசைக் கலைஞர் சோங் லிம்மும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். நியூசிலாந்தில் நடந்த விழாவில் உள்ளூர் அணிகள், முன்னாள் ஜாம்பவான்கள் ரிச்சர்ட் ஹாட்லீ, ஸ்டீபன் பிளமிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நியூசிலாந்து பாடகி கினி பிளாக்மோர், ‘சோல் 3 மியோ’ குழுவினரின் இசை நிகழ்ச்சி அரங்கேறியது. முடிவில், கிறைஸ்ட்சர்ச் நகரம் இதுவரை கண்டிராத வகையில், வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்திய கலைக் குழுவினரின் சார்பில் நடைபெற்ற வண்ணமய இசை நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக பிரம்மாண்டமான பேட்ஸ்மேன் அரங்கில் தோன்றி வந்தது பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.
Popular Categories



