குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக வைச் சேர்ந்த ஒருவர் கோவில் கட்டினார். இந்தக் கோவிலில் மோடியின் மார்பளவு சிலை வைக்கப்பட்டது. வரும் 15ம் தேதி இதன் திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தார்கள். இந்நிலையில் இந்தக் கோவில் குறித்தும், முயற்சி குறித்தும் ஊடகங்கள் வாயிலாக அறிந்த மோடி, தனக்கு கோவில் கட்டப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளதாக டிவிட்டரில் தெரிவித்தார். இந்தச் செயலால் தான் கவலை அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்ததை அடுத்து கோவிலில் வைக்கப்பட்டுள்ள சிலை துணியால் மூடப்பட்டது. மேலும் கோவில் திறப்பு விழாவும் ரத்து செய்யப்பட்டது. மோடியின் சிலையைச் செய்ய ரூ.1.65 லட்சம் செலவானது. அதை 4 ஆண்டுகளாக செய்துள்ளனர். ஒடிஷாவில் இருந்து கலைஞர்களை குஜராத்துக்கு வரவழைத்து மோடியின் சிலையை செய்துள்ளனர். கோவிலைக் கட்டி முடிக்க 2 ஆண்டுகள் ஆகியுள்ளது. எனவே இந்த உழைப்பு வீண் போகக் கூடாது என்பதால், இந்தக் கோவிலில் பாரத மாதா படம் வைத்து வழிபடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மோடி சிலைக்கு பதிலாக பாரத மாதா படம்!: திறப்பு விழாவுக்கு முன்பே மூடு விழா!
Popular Categories



