புது தில்லி: தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி தொடர்பாக, பல்வேறு கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்து, காங்கிரஸ் தலைவர்கள் வீண் சண்டையில் ஈடுபட வேண்டாம் என்று, காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கட்டளையிட்டுள்ளார். 70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்த நிலையில், காங்கிரஸ் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இது, அக்கட்சித் தலைவர்களிடையே வார்த்தை மோதல்களை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸின் மூத்த உறுப்பினரும் மூன்று முறை தில்லி முதல்வராகப் பொறுப்பு வகித்தவருமான ஷீலா தீட்சித்துக்குப் (76) பதிலாக அஜய் மக்கான் தில்லியில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். இந்தத் தோல்வி இருவருக்கும் இடையே கடும் வார்த்தைப் போரை ஏற்படுத்தியுள்ளது. அஜய் மக்கான் தலைமையிலான தேர்தல் பிரசாரம் பலவீனமானதாக இருந்ததாக குற்றம்சாட்டிய ஷீலா தீட்சித் அவரது தோல்வி பரிதாபமானது என்றார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் சாக்கோ இன்று சோனியா காந்தியை சந்தித்து தில்லி தேர்தல் தோல்வி குறித்து விளக்கம் அளித்தார். இந்த சந்திப்பின்போது, தேர்தல் தோல்வி தொடர்பான வீண் சண்டையை நிறுத்துமாறு மூத்த தலைவர்களுக்கு சோனியா கட்டளையிட்டுள்ளார்.
Popular Categories



