மோடி – இந்தியாவின் தலைமை சீர்திருத்தவாதி: ஒபாமா புகழ்ந்ததற்கு மோடி நன்றி

வாஷிங்டன்: இந்தியாவின் தலைமை சீர்திருத்தவாதி மோடி என்று அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிட்டுள்ளதற்கு மோடி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்குமிகுந்த மனிதர்கள் பட்டியலில், பிரதமர் மோடி இடம் பிடித்துள்ளார். அதில் அவரை, ‘இந்தியாவின் தலைமை சீர்திருத்தவாதி’ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா எழுதி, மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘டைம்’ பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் செல்வாக்கு மிகுந்த மனிதர்களைத் தேர்வு செய்து வெளியிட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டுக்கான செல்வாக்கு மிகுந்த மனிதர்கள் பட்டியலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் ஒவ்வொரு தலைவரைப் பற்றியும், மற்றொரு தலைவர் குறிப்பு எழுதியுள்ளனர். அந்த வகையில் பாரதப் பிரதமர் மோடியைப் பற்றி ‘இந்தியாவின் தலைமை சீர்திருத்தவாதி’ என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பு எழுதியுள்ளார். அதில், சிறுவனாக இருந்தபோது, நரேந்திர மோடி தனது குடும்பத்துக்கு ஆதரவாக தந்தைக்கு டீ விற்பனை செய்ய உதவியுள்ளார். இன்றைக்கு அவர் உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர். அவரது வாழ்க்கை வறுமையில் இருந்து பிரதமர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் எழுச்சி, ஆற்றல், திறனைக் காட்டுகிறது. இந்தியாவில் வறுமையை நீக்குவது, கல்வி மேம்பாடு, பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் அதிகாரம் வழங்குதல், பருவ நிலை மாற்றத்துக்கு மத்தியிலும் இந்தியாவின் உண்மையான பொருளாதார வளத்தை சீர் தூக்குவதற்கு லட்சிய திட்டங்களை வைத்துள்ளார் மோடி. இந்தியாவைப் போன்று, அவர் நவீனத்தையும், பழமையையும் கடந்து செல்கிறார். யோகா பயிற்சி செய்கிற அவர், இந்திய மக்களுடன் டுவிட்டரில் தொடர்பு கொள்கிறார். டிஜிட்டல் இந்தியாவை அவர் கற்பனை செய்து பார்க்கிறார். அவர் வாஷிங்டன் வந்த போது, அவருடன் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் நினைவுச் சின்னத்துக்கு சென்றேன். நாங்கள் மார்ட்டின் லூதர் கிங், மகாத்மா காந்தி ஆகியோரின் போதனைகளை பிரதிபலித்தோம். எங்கள் நாடுகளில் உள்ள பன்முகத் தன்மையின் பின்னணி, மத நம்பிக்கை எப்படி போற்றிப் பாதுகாக்கத் தக்க வலிமை வாய்ந்தவை என்பதை இருவருமே விவாதித்தோம். மேலும், 100 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் இணைந்து வாழ்வது, உலகுக்கே ஊக்கம் தரக்கூட்டிய எழுச்சியூட்டும் முன்மாதிரி என்று மோடி விவரித்துள்ளார் என்று ஒபாமா அந்தக் குறிப்பில் எழுதி உள்ளார்.  

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புகழாரத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதில் தெரிவித்துள்ளார். ‘டைம்’ பத்திரிகைக்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் மோடி தெரிவித்துள்ள நன்றிக் குறிப்பில், அன்புள்ள ஒபாமா, உங்கள் வார்த்தைகள் இதயத்தைத் தொட்டு, எழுச்சியூட்டின. நன்றி டைம் எனக் குறிப்பிட்டுள்ளார்.