December 19, 2025, 10:35 PM
24.4 C
Chennai

ஆண்டாள் குறித்து ஆராயப் புகுந்த வைரமுத்துவுக்கு இதோ நம் உதவி!

“ஆண்டாளின் புகழ் பாட ஆசைப்பட்ட” வைரமுத்து அவர்கள் “மூன்று மாதங்கள் ஆண்டாளை நான் ஆராய்ச்சி செய்து ஆய்வுக் கட்டுரைகளைத் திரட்டியது பிழையா?” என்று கேட்டுள்ளார். ஆராய்ச்சியே செய்யத் தெரியாமல் இவர் ஆராய்ந்ததுதான் பிழை. ஆராய்ந்தேன் என்கிறாரே இவர்  எதை ஆராய்ந்தார்? ஆண்டாளின் தமிழையா, அல்லது ஆண்டாள் வரலாற்றையா? இரண்டையுமே என்றால், ஆராய்ச்சிக்கான வழி முறையின்படி இவர் ஆராய்ந்தாரா?

Andal Rengamannar - 2025

து ஆராய்ச்சி?

 

தமிழாராய்ச்சி என்றால் அதற்கு இலக்கணம் வகுத்தாற்போல் ஆராய்ந்தவர் டாக்டர்  உ.வே.சா. அவர்களே. அவர் எழுதிய எந்தப் புத்தகத்திலும் நூலாராய்ச்சி இடம் பெற்றிருக்கும். ஒரு நூலென்று எடுத்துக் கொண்டால் அதில் இடம் பெற்றுள்ள எல்லாவிதமான சொற்கள், கருத்துக்கள் ஆகியவற்றைத்  திரட்டி, அவற்றுக்கு ஒப்புமையாக பிற நூல்களில் சொல்லப்பட்டுள்ளவற்றையும் திரட்டி ஒப்பு நோக்குவார். அவற்றைப் பற்றி முற்கால உரையாசிரியர்கள் சொன்னவற்றையும்,  அந்த நூல் எழுதப்பட்ட சம கால மற்றும் சங்க கால நூல்களையும் கொண்டு ஆராய்வார். அதன் மூலம்  தெரிய வரும் வரலாற்றுச் செய்திகளையும், நூலில் இடம்பெற்றுள்ள செய்திகளது வரலாற்றுத் தன்மையையும் எடுத்துக் காட்டுவார்.

உதாரணத்திற்கு வைரமுத்து, சங்க காலப் பெண் புலவர் வெள்ளி வீதியாரை ஆண்டாளுடன் ஒப்பிடுகிறார். வெள்ளி வீதியார் அவர்களைப் பற்றி குறுந்தொகையில் உ.வே.சா. அவர்கள் அருமையாக ஆய்ந்துள்ளார். ஆனால் வைரமுத்து சொன்னது என்ன? சங்கப்பெண்பால் புலவர் வெள்ளி  வீதியார் எழுதிய அகப்பொருள் பாடல்கள் மரபு  மீறல் என்று சொல்லிவிட்டு,  அதே சங்கத் தமிழில் முல்லைத் திணையையும், அகப்பொருளையும் பாடிய ஆண்டாளுக்கு மட்டும், சங்க இலக்கியத்தில் பெண்களுக்கு இல்லாத விடுதலையும், துணிச்சலும், சுதந்திரமும் வாய்த்தது எப்படி என்று ஆய்வுலகம் ஆச்சரியப்படுகிறது என்கிறார்.

சங்கத்தமிழில் அகம் பாடுவது மரபு மீறலா? அதற்குத் துணிச்சலும், சுதந்திரமும் வேண்டுமா? வெள்ளி வீதியார் பாடியது மரபு மீறல் என்றால் அவருக்கும், அவரது பாடல்களுக்கும் சங்கப்பலகையில் அங்கீகாரம் கிடைத்தது எப்படி? அதே தமிழில் அதே அகப்பொருளைப் பாடிய ஆண்டாளுக்கு, ஆழ்வார்களுக்கிடையே  இடம் கிடைத்தது எப்படி? அவள் பாடியவை வேதமனைத்துக்கும் வித்து என்ற அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது எப்படி? இவற்றை மட்டுமாவது வைரமுத்து ஆராய்ந்திருந்தால், இவர் பிழை என்று சொல்லும் மாபாதகத்தைச் செய்திருக்க மாட்டார். ஆண்டாள் அருளிய சங்கத் தமிழ்ப் பாடல்களை, சங்க காலப் பாடல்களோடும், சங்க இலக்கணத்துடனும் ஒப்பீடு செய்திருப்பாரே தவிர, இன்றைய கால சமூகக் கேள்வியாகப் பார்த்திருக்க மாட்டார்.

அவர் சங்க காலப் பாடல்களுடன் ஒப்பீடும் செய்யவில்லை, ஒப்புடைய சங்கத் தமிழ்ப் பாடல்களையும்  அவர் அறிந்திருக்கவில்லை என்பதற்கு முழு முதல் உதாரணம், சர்ச்சைக்கிடமான அவரது பேச்சின் ஆரம்பத்திலேயே இருக்கிறது. பேச்சின் தொடக்கத்தில் ஆண்டாள் பாவை நோன்பு நோற்றதன் காரணமாக“திங்கள் மும்மாரி” பெய்ய வேண்டும் என்று அவள் கேட்பதைக் குறிப்பிட்டு, அது எப்பேர்ப்பட்ட பொதுநலப் பண்பு என்று சிலாகிக்கிறார் வைரமுத்து. ஆண்டாள் சொன்னது பொதுநலப் பண்பு என்றால், வருடந்தோறும் பாவை நோன்பைச் செய்து வந்த ஒட்டு மொத்த சங்ககாலத் தமிழர்களது பொதுநலப் பண்பை இவர் எப்படி மறந்தார்? அந்தப் பழைய மரபின் தொடர்ச்சியாகத்தானே ஆண்டாள் பாடியுள்ளாள்? சங்க இலக்கியமான பரிபாடலில் (11-ஆம் பாடல்), காலத்தே மழை வருதலையும் காட்டி, தாய்மார்களும், கன்னியரும் பாவை நோன்பு நோற்றதில் இருக்கும் பொது நலத்தையும் காட்டிய பாங்கினை இவர் ஒப்பிட்டிருந்தால் அது ஆராய்ச்சி.

அப்படிப்பட்ட ஆராய்ச்சியை வைரமுத்து செய்திருந்தால், பரிபாடலில் சொல்லப்பட்டிருக்கும் காமம் சாலா இளங்கன்னியர் செய்த பாவை நோன்பையும், தைந்நீராடலையும்தான், சங்க காலம் இல்லாத காலக்கட்டத்திலும்,  ஆண்டாள் செய்திருக்கிறாள் என்பது புலனாகியிருக்கும். அப்பொழுதுதான் அவள் பாடியதை மரபு மீறல் என்றோ, சமூகக் கேள்வியாகவோ, பாலியல் கண்ணோட்டத்திலோ, பெண் விடுதலையாகவோ – இன்றைய குறைப்பார்வைக் கண்ணோட்டத்தில் பார்த்திருக்க மாட்டார்.

இது ஒரு புறம். இன்னொருபுறம், ஆண்டாளின் பிறப்பு குறித்த ஆராய்ச்சி செய்கிறார் வைரமுத்து. அந்த ஆராய்ச்சியை ஆண்டாள் பாசுரங்களிலும், பெரியாழ்வார் பாசுரங்களிலும் காணப்படும் உள்ளுறைச் சான்றுகளை ஒதுக்கி விட்டுச் செய்கிறார். ஆண்டாளே ஓரிடத்தில் கூறுகிறாள்,

” தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத்

தனி வழி போயினள்’ என்னும் சொல்லு

வந்த பின்னைப் பழி காப்பரிது”

(நாச்சியார் திருமொழி 123)

அதனால் தமராகிய நீங்கள், என்னை இப்பொழுதே மதுரைக்கும், ஆய்ப்பாடிக்கும், துவராபதிக்கும் கொண்டு சேர்ப்பித்து விடுங்கள் என்கிறாள்.

தந்தையும், தாயும் மாலவனிடம் தன்னைக் கொண்டு சேர்ப்பிக்காமல், தானே தனியாகச் சென்றால் பழி வருமே என்று ஆண்டாள் சொல்வதைப் புறம் தள்ளி,  அவள் பெரியாழ்வாருக்குப் பிறந்த பெண் இல்லை வைரமுத்து சொல்வதில் துளியேனும் ஆராய்ச்சியின் நிழலாவது இருக்கிறதா?

வைரமுத்து செய்தது ஆராய்ச்சிதான்; குரு பரம்பரை  ப்ரபாவத்தில் அவள் துளசி வனத்தில் பிறந்தாள் என்று சொல்லப்பட்டிருக்கிறதே என்று கேட்கலாம். அங்கேயே அவர் தன் ஆராய்ச்சியைச் செய்திருக்க வேண்டுமே என்பதுதான் இந்தக் கட்டுரையின் முக்கிய நோக்கம். இனி வரும் காலத்தில் எவரும்ஆண்டாளின் பிறப்பை சந்தேகிக்கக் கூடாது என்பதற்காகவே இனி வரும் விளக்கத்தை எழுதுகிறேன்.

ஆண்டாள் பிறப்பு ஆராய்ச்சி.

ஆழ்வார்கள் சரித்திரத்தை எழுதிய ஆச்சாரியர்களுடைய வாக்கில்தான் ஆண்டாள் துளசி வனத்தில் தோன்றினாள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.  இதைக் கொண்டு ஆண்டாள் பெரியாழ்வாருக்குப் பிறக்கவில்லை என்று வைரமுத்து நினைத்தால், இப்படிப்பட்ட அதிசயமான பிறப்பு ஆண்டாளுக்கு மட்டும்தானா, அல்லது பிற ஆழ்வார்களும் இப்படித்தான் பிறந்தார்களா என்று தேடியிருக்கலாம் அல்லவா? தேடவே வேண்டாம். குறிப்பாகப் படிப்பதை (selective reading) விடுத்து, குரு பரம்பரை சரித்திரத்தை முதலிலிருந்து படித்திருந்தால் முதலாழ்வார்கள் மூவர் சரித்திரத்திலும் இப்படிப்பட்ட இயற்கைக்குப் புறம்பான பிறப்புச் செய்தி இருப்பது தெரிந்திருக்கும். அவற்றையும் படித்து ஆய்ந்திருந்தால்அது ஆராய்ச்சி.

‘மூவாயிரப்படி குரு பரம்பரை ப்ரபாவம்’ என்னதான் சொல்கிறது என்றால் பொய்கை ஆழ்வார் ஒரு குளத்தில் பிறந்தார்.

பூதத்தாழ்வார் மாதவிப் பூவில் அவதரித்தார்.

பேயாழ்வார் செவ்வல்லிப் பூவில் பிறந்தார்.

இவர்களெல்லாம் இப்படிப் பிறந்ததற்கு வைரமுத்து, மற்றும் வைரமுத்து பின்பற்றும் ஆராய்ச்சியாளர்கள் கொடுக்கும் விளக்கமென்ன?

இவர்களது ஆய்வுக் கண்ணோட்டத்தில் இந்த ஆழ்வார்களும் தாய் – தந்தை யார் என்று தெரியாமல் பிறந்தவர்களா? குலமறியாத இவர்களை யாரேனும் எடுத்து வளர்த்தார்களா? அது எப்படி, பன்னிரண்டு ஆழ்வார்களில் நான்கு பேர்(ஆண்டாள் உட்பட) ஊர் பேர் தெரியாமல் விடப்பட்டு , தத்தேடுத்து வளர்க்கப்பட்டு,  ஆனால் உலகம் காணாத அதிசயமாக பரஞானத்தை அடைந்து, உலகம் உய்யப் பாடிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்?  இதுதானே ஆராயப்பட வேண்டியது?

ஆண்டாள் பெண் என்பதால், சாதிக் கட்டுப்பாடு, சமூகத்தின் பார்வை, குலமகளா இல்லையா என்று ஒரு வக்கிரத்தையும் விடாமல் வைரமுத்து பிடித்துக்  கொண்டு விட்டார் – அதாவது மற்ற ஆராய்ச்சியாளர்கள் போர்வையில்.

முதலாழ்வார்கள் பிறப்பு விஷயத்தில் வைரமுத்து என்ன சொல்லப்போகிறார்? அன்றைய தமிழ்ச் சமூகமே இழிந்து போயிருந்தது என்று சொல்லப்போகிறாரா? இழி பிறப்பாக இருந்தால் அவர்களுக்கு அந்த ஞானம் எப்படி வந்தது? அவர்களை ஆழ்வார்கள் – நம்மை ஆள்பவர்கள் என்று சமூகம் எப்படி ஏற்றுக் கொண்டது? இதையெல்லாம் வைரமுத்து ஆராய்ந்திருந்தால் அது ஆராய்ச்சி.

இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சி என்ன சொல்கிறதென்றால், அவரவர் எண்ணத்தின் படியே சொல்லும், செயலும் அமையும். வைரமுத்துவின் எண்ணத்தில் என்ன இருக்கிறதோ, அதையொட்டிய கருத்துக்களையே  அவர் கிரகித்துக் கொள்கிறார். அவற்றையே தன் எழுத்தில் பிரதிபலிக்கிறார். சிச்சுவேஷனுக்குப்  பாட்டு எழுதுபவர்களுக்கு இன்றைய சிச்சுவேஷனில், தம்மைக்  கவரும் கருத்துக்களை ஒட்டியே “ஆராய்ச்சியும்” அமையும். வைரமுத்துவின் மனோத் தத்துவத்தை ஆராய்ப்பவர்கள் இந்த முடிவுக்குத்தான் வருவார்கள்!

அதிசயப் பிறப்பின் அர்த்தமென்ன?

வைரமுத்து செய்த ஆண்டாள் பிறப்பு ஆராய்ச்சியின் லட்சணத்தைப் பார்த்த்தோம். இனியும் எவரும் இப்படி ஆராயக் கூடாது என்றால், இந்தப் பிறப்புகளின் உள் அர்த்தத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் பொய்கையில் பிறக்கிறார்; ஒருவர் மாதவிப்  பூவில் பிறக்கிறார்; ஒருவர் செவ்வல்லிப் பூவில் பிறக்கிறார். ஒரு குழந்தை பொய்கையிலோ, பூவிலோ பிறந்திருக்க முடியாது. பிறந்தவுடன் அவற்றின் மீது விடப்பட்டும் இருக்க முடியாது. ஆனால் ஆச்சார்யர்கள்  அப்படிச் சொல்லியிருக்கிறார்கள்  என்றால் ஏதோ சூட்சுமம் இருக்க வேண்டும்.

அது என்னவென்று ஆராய்ந்தால், இவர்களை போன்றே பல்லவன் பிறப்பும் அமைந்திருக்கிறது என்று தெரிய வருகிறது.

முதல் பல்லவன் மஹாபாரத காலத்தைச் சேர்ந்த அஸ்வத்தாமனுக்குப் பிறந்தவன். மஹாபாரதப் போர் முடிவில், அஸ்வத்தாமன் மாபெரும் அழிவை உண்டாக்குகிறான். எனினும் அவனைக் கொல்லாமல் காட்டுக்குள் துரத்தி விடுகின்றனர். அதற்குப் பிறகு அவன் என்ன ஆனான் என்று பல்லவர் கல்வெட்டுகளின் மூலமாகத்தான் தெரிகிறது. அவன் காட்டுக்குள் வாழ்ந்திருக்கிறான். அவனுக்கும் ஒரு அப்சர மங்கைக்கும் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையை அஸ்வத்தாமன் பார்க்கும் போது, அது, தளிர்களாலான ஒரு படுக்கையில் கிடத்தப் பட்டிருக்கிறது. தளிர்களுக்கு சமஸ்க்ருதத்தில் ‘பல்லவ’ என்று பெயர். குழந்தையைப் பார்த்த அஸ்வத்தாமன், தளிர் என்று பொருள் படும்’பல்லவ’ என்கிறான். அதுவே அந்தக் குழந்தையின் பெயராகிறது.

andal article2 - 2025

ஆதாரம்: கசக்குடி பட்டயம் (South Indian Inscriptions, Vol2, Part iii, No 73)

andal article1 - 2025

ஆதாரம்: அமராவதி தூண் கல்வெட்டு(South Indian Inscriptions, Vol1, Part i, No 32)

இதன் அடிப்படையில், பல்லவன் பிறப்பை, ‘தளிரில் பிறந்தவன்’ என்று சொல்லலாம்.

இந்த மாதிரி சொல்லும் வழக்கம் இன்னொரு விதத்திலும் இருக்கிறது. இதை ஜோதிடப் புத்தகங்களில் காணலாம். எந்த ஜோதிடப் புத்தகத்திலும் ‘ஜனன காலப் படலம்’ என்று ஒரு பகுதி இருக்கும். குழந்தை பிறக்கும் பிரசவ வீட்டின் லட்சணம் இதில் விவரிக்கப்பட்டிருக்கும். குழந்தை பிறக்கும் இடம்  எது என்பதை ஜனன கால ஜாதகத்தை வைத்துச் சொல்ல முடியும்.  குழந்தை பிறந்தது நீர் நிலைக்கு அருகிலா, நதிக்கு அருகிலா, கிணற்றுக்கு அருகிலா, வாய்க்காலிலா, குளக்கரையிலா, அல்லது நீருள்ள வயலுக்கு அருகிலா என்றும் குறிப்புகள் உள்ளன.

அதை போல, வீட்டிலா, வெளியிலா, சிறையிலா, தொழுவத்திலா, கோயிலுக்கு அருகிலா, அல்லது யாக சாலைக்கருகிலா என்றும் குறிப்புகள் மூலம் சொல்ல முடியும். இவற்றின் அடிப்படையில், மிதிலை  மன்னன் ஜனக ராஜன் யாக சாலையை உழும் போது , சீதை கிடைத்தாள் (அல்லது) பிறந்தாள் என்றால், இரண்டு அர்த்தங்கள் இருக்கின்றன. ஒன்று, சீதை பிறந்த இடம் யாக சாலைக்கு அருகில் இருந்திருக்க வேண்டும். அல்லது ஜனகர் யாக சாலையை உழுது கொண்டிருக்கும் போது சீதை பிறந்திருக்க வேண்டும்.

இதை போன்றே பொய்கை ஆழ்வார் பொய்கையில் பிறந்தார் என்றால், அவரை அவர் தாயார் பிரசவித்த இடம், பொய்கைக்கு அருகில் இருந்தது என்று அர்த்தம்.

பூதத்தாழ்வார் மாதவிப் பூவில் பிறந்தார் என்றால், மாதவிப் பூப்பந்தல் அருகே பிறந்தார் என்றும் பொருள் கொள்ளலாம். அல்லது, பல்லவனைப் போல இவர் பிறந்தவுடன் மாதவிப் பூப்படுக்கையில் கிடத்தப் பட்டிருக்க வேண்டும்.

இவரைப் போன்றே பேயாழ்வாரும், செவ்வல்லிப் பூப்படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கலாம். அல்லது செவ்வல்லிக் குளத்தருகே பிறந்திருக்கலாம்.இவர்களைப் போன்றே ஆண்டாள் ஜனனமும் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

ஆண்டாள் பிறப்பு.

ஆண்டாள் பிறப்பைப் பற்றி மூவாயிரப்படி குரு பரம்பரை ப்ரபாவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

andal article3 - 2025

பெரியாழ்வார் துளஸிப் பாத்தியைக் கொத்திக் கொண்டிருக்கும் போது அதனின்று ஆண்டாள் தோன்றினாள் என்று ஆச்சார்யர்கள் கூறியுள்ளார்கள். இதுவரை நாம் கொடுத்த விளக்கத்தின் படி, ஆண்டாள் பிறந்த அறைக்கு அருகில் துளசி வனம் இருந்திருக்க வேண்டும். அல்லது பெரியாழ்வார் துளஸிப் பாத்தியைக் கொத்திக் கொண்டிருந்த போது, ஆண்டாள் பிறந்திருக்க வேண்டும். துளசியின் சம்பந்தம் இருக்கவே, அந்தத் துளசியும் பெருமாளுக்கு உகந்த மாலையாக இருக்கவே, ஆழ்வார் குழந்தைக்கு, ‘பூமாலை’ என்னும் பொருள் கொண்ட ‘கோதை’ என்னும் பெயர் இட்டார்.

துளசி வன சம்பந்தம் பின்னால் ஆழ்வாரால் நினைத்துப் பார்க்கப் படுகிறது. மூவாயிரப்படி குரு பரம்பரை ப்ரபாவம் கூறுவதை பார்ப்போம்

andal article4 - 2025

எந்தப் பெண்ணுக்குப் பூமாலை என்று பொருள் படும் கோதை என்று பெயர் சூட்டினாரோ, அந்தப் பெண் அணிந்த மாலையைத் தனக்கும் சூட்ட வேண்டும் என்று பெருமாளே கனவில் வந்து கூறிவிடவே, பெருமாளுக்கும், கோதைக்கும் உள்ள தொடர்புகள் புலனாகின்றன. மாலை மாற்றிக் கொள்வது என்பது கணவன் மனைவிக்குள்தான் நடக்கும். இங்கு பெருமாள் கோதை சூட்டிக் கொண்ட மாலையை, தான் சூட விழைகிறார்.

அப்படியென்றால் கோதை யார்? பெருமாளின் மனைவியா? பெருமாளுக்கு  மூன்று மனைவியர் என்பது மரபு. அவர்கள்  ஸ்ரீதேவி, பூமதேவி, நீளா தேவி. இவர்களுள் கோதை யார் என்று பெரியாழவார் ஆச்சரியப்படுகிறார். அவள் பிறந்தது நினைவுக்கு வருகிறது. துளஸிப் பாத்தியில் தோன்றியவளாயிற்றே.ஆக, இவள் பூமா தேவின் அவதாரமோ என்ற எண்ணம் எழுகிறது. துளஸிப் பாத்தி சம்பந்தத்தினாலேயே ஆண்டாளை பூமாதேவியின் அவதாரம் என்கிறோம்.

மானுட ஜென்மமாக வந்ததினால் அவள் ஆழ்வாருக்குப் பிறந்தது உண்மைதான். சூட்சுமமாக அவளது தெய்வீக நிலை தெரியவே, அவள் பிறந்த போது ஆழ்வார் துளஸிப் பாத்தியை சீர் செய்து கொண்டிருக்கவே, அல்லது, அவள் துளசிச் செடிக்கருகில் பிறக்கவே, அவள் துளசி வனத்திலிருந்து தோன்றினாள் என்று ஆச்சார்யர்கள் அருளியிருக்கிறார்கள்.

வெளிப்படையாக ஆச்சார்யர்கள் சொல்லும்சூட்சுமம், முதலாழ்வார்கள்’ அயோனிஜர்கள்’  – அதாவது கருவிலிருந்து பிறந்தவர்கள் அல்லர், ஏனெனில் இவர்கள் விசேஷப் பிறவிகள்.  மானுடத்தை தாண்டிய தெய்வப் பிறவிகள்.ஆண்டாள் விஷயத்தில் அவள் பூமாதேவியின் அவதாரமே. துளஸிப் பாத்தி என்பதன் மூலம் பூமி சம்பந்தம்  தெரிகிறது.

சீதையும் பூமாதேவியின் அவதாரமே. அங்கு யாக சாலை சம்பந்தம் அவளை பூமாதேவி என்று காட்டுகிறது. இவர்களது விசேஷத் தன்மையை பிறப்பிலிருந்தே காட்டுவதற்கு அமைப்புகள் இருக்கவே, ஆச்சார்யர்களும், ரிஷிகளும் அவற்றைத் தூக்கிக் காட்டியிருக்கிறார்கள். அதைக் கொச்சைப் படுத்துவது, நம்முடைய குறைபாட்டினையும், புரிதல் இல்லாத கண்ணோட்டத்தையும் காட்டுகிறது.

தமிழை ஆண்டாளை வைரமுத்து அறிந்தவரா?

இனி நாம் முதலில் எடுத்துச் சொன்னவாறு, சங்கத் தமிழை ஆண்டாள் எவ்வாறு ஆண்டாள் என்பதை வைரமுத்து காணத் தவறி விட்டார். அதற்குச்  சிகரமாக விளங்குவது அவர்  கேட்கும் சமூகக்  கேள்வி. கனவு  காணும்  வேளையிலும் கரை விட்டோடும் துணிச்சல் ஆண்டாளுக்கு எப்படி வாய்த்தது என்றும், இதை விடுதலை என்றும் கூறும் வைரமுத்து, இந்த விடுதலை ஆண்டாளுக்கு எப்படிக்  கிட்டியது என்பதை சமூகக் கேள்வியாக வைக்கிறார். இந்தக் கேள்வியில் ஆரம்பித்ததுதான் எல்லா அநர்த்தமும், தவறான சித்தரிப்புக்களும்.

ஆண்டாளின் துணிச்சல்‘ 

ஆண்டாளின் துணிச்சலைப் பற்றி இவர் என்ன கேட்பது?  நாச்சியார் திருமொழியின் 12-ஆம் பத்தின் கடைசியில் ஆண்டாளே தனக்குத் துணிச்சல் இருக்கிறது என்று சொல்கிறாள் –

தன்னைத் தமர் உய்த்துப் பெய்ய வேண்டித்

தாழ் குழலாள் துணிந்த துணிவை…”

இந்தத் துணிவுக்குத் துணை போவது,  தொல்காப்பியத்தின் களவியல் சூத்திரம்!

உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்

செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று…” (பொருளதிகாரம் 111)

இதற்கு உரையாசிரியர் இளம்பூரணர், ‘ உயிரினும் நாண் சிறந்ததுஅதனினும் குற்றம் தீர்ந்த காட்சியினையுடைய கற்புச்  சிறந்தது: என முன்னோர் கூற்றையுட் கொண்டு தலைவன் உள்ளவிடத்துச் செல்லலும்வருத்தமில்லாச் சொல்லைத் தலைவி சொல்லுதலுமாகிய அவ்வகை பிறவும் தோன்றும் அவை பொருளாம் என்றவாறு.’ என்கிறார்.

இதற்கு, குறுந்தொகை – பதினொன்றாம் பாடலை இளம்பூரணர் உதாரணமாகக் காட்டுகிறார். இதே கருத்தை நாச்சியார் திருமொழியின் 12 -ஆம் பத்து முழுவதும் ஆண்டாள் காட்டுகிறாள். அவற்றில், நாணைக்  கடந்து, தலைவனாம் சீதரன் இருக்குமிடம் செல்ல விழைகிறாள்  ஆண்டாள். அந்த இடத்தில்தான் தன் தந்தை, தாயைக் குறிப்பிடுகிறாள். இவர்கள் என்னைக் கொண்டு போய் விடவில்லை என்றால், நானே சென்று விடுவேன். இதனால் வரும் பழியைத் தவிர்க்க முடியாது என்று பயமுறுத்துகிறாள். அந்தப் பத்து பாசுரங்களில் அவள் காட்டும் துணிவு சங்க காலக் களவியல் பாற்பட்டது.

அந்தப் பாடல்கள் முடிவில் அவள் என்ன சொல்கிறாள் தெரியுமா? புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை துணிந்த துணிவை, இன்னிசையால் சொன்ன இந்த செஞ்சொல் மாலையை, ஏத்த வல்லாருக்கு வைகுந்தம் இருப்பிடமாகும்!இதுதான் வைரமுத்து வைக்கும் சமூகக் கேள்விக்கு ஆண்டாளே அளிக்கும் பதில்!!!

இதைத் தெரிந்து கொள்ள இவருக்கு பக்தி வேண்டாம். இவர் பெற்றதாக நினைக்கும் சக்தியும் இவருக்கு வந்து சேரவில்லை. ஆனால் ஆண்டாள் பாடிய கண்ணோட்டத்தில் இவர் பார்த்து, அதன் சங்கத் தமிழ் மாண்பைத் தேடிக் கண்டுபிடித்திருந்தால் இப்படிப்பட்ட சொத்தைக் கேள்விகளைக் கேட்டிருக்கமாட்டார்.

ஆண்டாள் பாடியது மரபு சார்ந்த அகப்பொருள்தான்

ஆண்டாள் அகப்பொருளைத்தான் பாடினாள். வைரமுத்துவைப் பொறுத்த வரையில், சொல்ல முடியாதது அகம். சொல்ல முடிந்தது புறம். சொல்ல முடியாத அகப்பொருளை ஆண்டாள் எவ்வாறு கையாண்டாள் என்று சொல்ல வரும்போது வைரமுத்துக்கு ஏகப்பட்ட ‘சமூகக் கேள்விகள்’ எழும்பி விட்டன. அதன் அடிப்படையில் “ஆராய்ச்சிக் கட்டுரைகளைக்” காட்டி ஆண்டாளின் சரித்திரத்தையே வைரமுத்து எழுதிவிட்டார்

சொல்லமுடியாதது என்று வைரமுத்து கருதும் அகப்பொருளைத்தான்திருவள்ளுவர் 3-ஆம் பாலாகச் சொல்லி வைத்துள்ளார். அவர் சொல்லாத எதையும் ஆண்டாள் சொல்லிவிடவில்லை.

உதாரணமாக ஆண்டாள் தனது கனவினை உரைக்கும் “வாரணமாயிரம்”பாசுரங்கள் திருவள்ளுவரால் “கனவு நிலை உரைத்தல்” (அதிகாரம் 122) என்று சொல்லப்பட்டவையே.

நாச்சியார் திருமொழியின் 4-ஆம் பத்தில்,

ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை

நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர் ……”

என்று ஆண்டாள் முடிக்கும் 10 பாசுரங்களும் திருவள்ளுவர் கூறும்

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

கூடியவர் பெற்ற பயன்”  (குறள் 1109)

என்பதன் இலக்கிய விரிவாக்கமே.

அன்று உலகமளந்தவன் இன்று ஏன் என்னை நலியச் செய்கிறான் என்று குயிலிடம் ஆண்டாள் முறையிடுவது (நா. திருமொழி 5-10)

பருவராலும், பைதலும்’ என்று தொடங்கும் குறளில் (1197) மன்மதன் ஏன் இருவரில் ஒருவரை மட்டும் நோகச் செய்கின்றான் என்று திருவள்ளுவர்  எழுதியதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக ஒன்றைச் சொல்லலாம். வள்ளுவர் பாடியது முப்பால். அதில் மூன்றாம் பாலான இன்பத்துப் பாலைக் கடந்துதான் வீடு பேரின்பம் அடைய முடியும். வீடு பேரின்பத்தைப் பற்றி, வள்ளுவர் மட்டுமல்ல, எவருமே எழுதி வைக்கவில்லை. ஆனால் என்ன செய்தால் வீடு பேரின்பம் கிடைக்கும் என்பதைப் பற்றி ஆண்டாள் எழுதினாள். எழுதியது மட்டுமல்லாமல், அப்பேரின்பத்தை அரங்கன் சந்நிதியில் அடைந்தும் காட்டினாள். இதைப் புரிந்து கொண்டவர்கள் அக்காலத்துத் தமிழர்கள், ஆச்சார்யப் பெருமக்கள்.

அப்பேரின்பத்துக்கு அடிப்படை அகப்பொருள். அகப்பொருள் என்பது சங்கத் தமிழில் அதிகம் பேசப்பட்டது. முதல் சங்கத்தின் முக்கியப் பொருள் அதுதான். இறையனார் எனப்படும் சிவ பெருமான் அந்தப் பொருளில்தான் தருமிக்குப் பாடல் கொடுத்தார். அந்தப் பொருளில்தான் ‘இறையனார் அகப்பொருள் ‘ என்னும் இலக்கணம் கொடுத்தார்.

அகப்பொருள்  என்பது என்ன? திரைப் பாடல்களில் இவர்கள் எழுதும் காமரசம் சொட்டும் பாடல்களா அவை?  இல்லை.

அகப்பொருளின் அடிப்படை அன்பு.

இறையனார் அகப்பொருளின் முதல் வரியே அன்பின் ஐந்திணை களவெனப்படுவது”  என்றுதான் ஆரம்பிக்கிறது.

மாந்தராய்ப் பிறந்த இரண்டு ஆத்மாக்களுக்குள் ஏற்படும் அன்பை விவரிப்பது அகம். அதில் கிடைப்பது சிற்றின்பம்,

மூன்றாம் பாலான இன்பத்துப் பாலின் மூலம் இதை உணர்ந்தவன், நிலையான  அன்பு எனப்படுவது ஆத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் இடையே இருப்பதுவேஎன்று உணர ஆரம்பிக்கிறான். அந்த அன்பை பரமாத்மாவிடம்  நிலை பெறச் செய்கிறான். அதில் அவனுக்கு கிடைப்பது பேரின்பம், அதுவே வீடு பேறுஎனப்படுவது.

அகப்பொருளின் இறுதி நிலையான அந்த அன்பை, ஆண்டாள் சங்கத்  தமிழில் நிறுவுகிறாள். அந்த அன்பை, அறியாய் பருவத்திலிருந்தே காட்டும் வண்ணம் நம் தமிழ்ச் சமுதாயம் பாவை நோன்பாக வடித்தது. ஆற்று மணலில் பாவை வடிவம் செய்யத் தூண்டி, சிற்றில் இழைக்கச் செய்து – என்று எல்லா விளையாட்டுகளிலும் தெய்வத்தை நோக்கியே நம்மை ஆற்றுப் படுத்துகிறது சங்க இலக்கியம். அவற்றுக்கெல்லாம் இலக்கணமாக வாழ்ந்து, முடிவில் வீடு பேற்றுக்கு அந்த அகப்பொருளையே ஆண்டாள் கையாண்டதை எப்படியெல்லாம் ‘சமூகக் கேள்விகளாக’ ஆக்கி விட்டார் வைரமுத்து.

தமிழைத் துய்த்தவராகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் வைரமுத்து , ஆண்டாளின் தமிழ் என்பது எவ்வாறு சங்கத் தமிழ் ஆகும் என்று ஆராய்ந்திருக்க வேண்டும்.  அவருக்கு நல்ல ஆய்வுப் புத்தகங்கள் கிடைக்கவில்லை போலிருக்கிறது. நான் அறிந்த ஆய்வுப் புத்தகத்தை அவருக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

andal book1 - 2025பண்டிதை எஸ். கிருஷ்ணவேணி அம்மையார் என்பவர் எழுதிய ‘வில்லிபுத்தூர்  விளக்கு’ என்னும் நூல் ஸ்ரீ வில்லிபுத்தூர்  தேவஸ்தானம் ட்ரஸ்ட் போர்டார் சார்பில்1959-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

அருமையான  இந்தப் புத்தகத்தில், பன்முனை ஆராய்ச்சிகளுடன், ‘ஆண்டாளும் அகப்பொருள் நூல்களும்’ என்னும் தமிழாராய்ச்சிப் பகுதி ஒன்று இருக்கிறது.

அதில் எத்தனை, எத்தனை  இலக்கிய, இலக்கண விவரங்கள் ஆண்டாள் பாசுரங்களில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளன! என் சிற்றறிவுக்கு, அவை காணப்படும் நூல்களை மட்டுமே எடுத்துக் காட்ட முடிகிறது. அவை என்ன என்று தெரிந்து கொள்ளுங்களேன்.

திருக்குறள்

அகநானூறு – 139, 286

முல்லைக்கு கலி (கலித்தொகை) – 109

குறுந்தொகை – 133, 220, 391, 65, 50, 54, 188, 11, 395, 150, 18.

நற்றிணை – 243, 289, 302, 381, 387, 214, 238, 241, 143.

இறையனார் அகப்பொருள்

அகப்பொருள் விளக்கம்- 206

தஞ்சை வாணன் கோவை – 286, 287, 226, 217, 277, 253, 291, 409, 245,

மாறன் கோவை – 459

andal book2 - 2025இந்த ஆராய்ச்சியில் ஒரு சதவிகிதம் கூட வைரமுத்து செய்யவில்லை. அவர் மன்னிப்பு கேட்க வேண்டியது ஆண்டாளிடம் மட்டுமல்ல, தமிழ்த் தாயினிடமும்தான்.

ஆண்டாள் சரித்திரத்தை நம்பாத வைரமுத்து

வைரமுத்துவின் சரித்திர ஆராய்ச்சியில், அர்ச்சாவதாரமாகிய ஒரு விக்கிரகத்தோடு, குருதியும் இறைச்சியும் கொண்ட ஒரு மானிடப் பெண் கலந்ததுண்டா என்னும் கேள்விக்கு விடை சொல்ல ஒரு ஆவணம் இருக்கிறது என்று ‘கோயிலொழுகு‘ வில் காணப்படும் குலசேகர பெருமாள் ஆழ்வாரது மகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். சோழவல்லி என்னும் தன் மகளை ஆழ்வார் ஸ்ரீரங்கம் அழகிய மணவாளப் பெருமாளுக்கு மணம்  செய்விக்கிறார். இவ்வளவுதான் சொல்லப்பட்டிருக்கிறது. இதனை ஒரு ஆவணமாகக் கூறுவதன் மூலம், இவர் எழுப்பிய கேள்விக்கு எந்தவிதமான பதிலைத் தருகிறார் என்பதற்கு20-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரையை  மேற்கோள் காட்டுகிறார். அது சரியே என்றும் வாதாடுகிறார்.

சோழவல்லியின் திருமணத்தில் சொல்லப்படாத  ஒரு விஷயம் ஆண்டாள் திருமணத்தில் இருக்கிறது. சோழவல்லியின் திருமணத்துக்குப்பின் என்ன ஆயிற்று என்று எங்கும் சொல்லப்படவில்லை. ஆனால் ஆண்டாள் விஷயத்தில் அவள் அழகிய மணவாளன் அருகில் சென்று ‘அந்தர்பவித்தருளினாள்’ – அதாவது மறைந்து விட்டாள் என்றே சொல்லப்பட்டிருக்கிறது. இல்லாத ஒன்றை ஆழ்வார்களும், ஆச்சார்யர்களும் சொல்லவில்லை, எழுதவில்லை.

அப்படி இருக்க, ஆண்டாள்  மறைந்தது எப்படி என்று ஆராயப்புகில், அவளைப் போலவே  மறைந்த  சம்பவங்களுடன் தான் ஒப்பீடு செய்ய வேண்டும் – நாம் ஆரம்பத்தில் ஆழ்வார்களது அதிசயப் பிறப்பை, தளிர் என்னும் பல்லவன் பிறப்பைச் சொல்லும் கல்வெட்டுச் சான்றுகளுடனும் , அப்படிப்பட்ட பிறப்பின் உள் அர்த்தத்தைக் காட்டும் ஜோதிடப் புத்தகச் சான்றுகளுடனும்  ஒப்பீடு செய்ததை போல.

அவளைப் போலவே மறைந்த சம்பவம், ஆண்டாள் காலத்திற்கு சில நூற்றாண்டுகள் முன் கண்ணகியின் காலத்தில் நடந்தது என்று அனைத்துத் தமிழ் மக்களும் போற்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது. அதில் கணவனை இழந்த 14-ஆம் நாள் கண்ணகியின் கண் முன், இறந்த அவள் கணவன்  (கோவலன்) தோன்றுகிறான். அப்பொழுது ஒரு வானவூர்தி வருகிறது. பூமாரி பொழிய அவள் தன்  கணவனுடன்  அந்த வானவூர்தியில் ஏறிச் சென்று மறைகிறாள். இதை அங்கு வாழ்ந்த மலைவாணர்கள் எனப்படும் வேட்டுவரும், வேட்டுவித்தியரும் தங்கள் கண்களால் பார்க்கின்றனர். இதை வைரமுத்துவும், அவர் நம்பும் ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்கிறார்களா?

ஏற்றுக் கொண்டால் ஆண்டாள், இறைவன் பக்கலில் மறைந்ததை  ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு கண், காது, மூக்கு வைத்து, நடக்காத ஒன்றை நடந்ததாகச் சொல்லக் கூடாது.

கண்ணகி சம்பவத்தை ஏற்றுக் கொள்ளாவிடில், தமிழ் நூல் எதனையுமே இவரும், இவரைப் போன்ற ஆய்வாளர்களும் தொட்டுக் கூடப் பார்க்க வேண்டாம்.ஏனென்றால் அந்த சம்பவங்கள் காட்டும் உண்மைகள், கருத்துக்கள், தொல்காப்பியச் சான்றுகள் எவையுமே இவர்களுக்குப் புரியாது. இதுவரை புரிந்திருக்கவும் இல்லை.

இவர்கள் தமிழ்த் தொண்டாற்ற விரும்பினால், சினிமாத் தமிழுடன் நிறுத்திக் கொள்ளட்டும். அதை விடுத்து, பழந்தமிழை ஆராயப் புகுந்தால் அதை எப்படி ஆராய வேண்டுமோ அதன்படி ஆராய வேண்டும்.

சங்க காலம் தொடங்கி, ஆழ்வார்கள், நாயன்மார்கள் வரை, வீடு பேற்றைத் தரக் கூடிய அறம், பொருள், இன்பத்தைப் பற்றியே பேசியிருக்கிறார்கள்.

பேசினார் பிறவி நீத்தார்பேருளாளன் பெருமை பேசி.

ஏசினார் உய்ந்து போனார் என்பது இவ்வுலகின் வண்ணம்.

இதைப் புரிந்து கொண்டு, உய்ந்து போய் வீழ வேண்டாம்.

வாழும் வகை அறிந்து கொள்ளுங்கள்.

கட்டுரை: ஜெயஸ்ரீ சாரநாதன்

வைரமுத்துவும், முடித்து வைக்கப்பட வேண்டிய ஆண்டாள் ஆராய்ச்சியும்...

3 COMMENTS

  1. வில்லிபுத்தூர் விளக்கு புத்தகம் digitalise செய்து வெளியிட வேண்டும்
    வை மு இந்த series கட்டுரைகளும் அபத்தங்களும்,புனைவுகளும்
    கொண்டன. உண்மைகள் விளக்கப்படம் வேண்டும் .

  2. மிகவும் உத்தமமான, Unnadhamaana மகத்துவமான , Nangu ஆராய்ச்சி செய்து EZUDHAPATTULLA கட்டுரை. மிகவும்நொந்திருந்த Manam பரவசம் Adaindhadhu . Vazthukkall Mattrum பார்ராட்டுக்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பரமன் அளித்த பகவத் கீதை!

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன்

வாழ்க்கை என்பது எதைப் போன்றது தெரியுமா?

"வாழ்க்கை ஒரு கண்ணாடி போன்றது, நாம் அதை நோக்கிப் புன்னகைக்கும்போது சிறந்த பலன்களைப் பெறுகிறோம்."

தீபம் ஏற்ற வழியில்லை; விரக்தியில் உயிர்த் தியாகம் செய்த பூர்ணசந்திரன் இழப்புக்கு நீதி வேண்டும்!

பூரணசந்திரன் மரணத்திற்கு நீதிகேட்போம். முருகபக்தர்களே அணி திரண்டு வாரீர்: நெல்லை மாநகர் இந்து முன்னணி அழைப்பு!

ஹனுமத் ஜயந்தி; ஒரு லட்சம் வடை மாலையுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் தரிசனம்!

அனுமனின் அவதாரத் திருநாளான இன்று ஆஞ்சநேயரை தரிசிக்கவும் பிரசாதமாக வடையைப் பெற்றுக்கொள்ளவும் பக்தர்கள் பலர்  ஆலயத்தில் அதிகாலை முதலே குவிந்தனர்.

The Silent Sanctum: Celestial Tears for a Silent Season

" Together, they watch the dark December clouds, wondering if their immortality is being preserved in a digital tomb—vast, accessible, and heartbreakingly cold.

Topics

பரமன் அளித்த பகவத் கீதை!

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன்

வாழ்க்கை என்பது எதைப் போன்றது தெரியுமா?

"வாழ்க்கை ஒரு கண்ணாடி போன்றது, நாம் அதை நோக்கிப் புன்னகைக்கும்போது சிறந்த பலன்களைப் பெறுகிறோம்."

தீபம் ஏற்ற வழியில்லை; விரக்தியில் உயிர்த் தியாகம் செய்த பூர்ணசந்திரன் இழப்புக்கு நீதி வேண்டும்!

பூரணசந்திரன் மரணத்திற்கு நீதிகேட்போம். முருகபக்தர்களே அணி திரண்டு வாரீர்: நெல்லை மாநகர் இந்து முன்னணி அழைப்பு!

ஹனுமத் ஜயந்தி; ஒரு லட்சம் வடை மாலையுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் தரிசனம்!

அனுமனின் அவதாரத் திருநாளான இன்று ஆஞ்சநேயரை தரிசிக்கவும் பிரசாதமாக வடையைப் பெற்றுக்கொள்ளவும் பக்தர்கள் பலர்  ஆலயத்தில் அதிகாலை முதலே குவிந்தனர்.

The Silent Sanctum: Celestial Tears for a Silent Season

" Together, they watch the dark December clouds, wondering if their immortality is being preserved in a digital tomb—vast, accessible, and heartbreakingly cold.

பஞ்சாங்கம் டிச.19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல யாரையும் அனுமதிக்கூடாது: புகார் மனு!

மதுரை, திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில், இருப்பதால் மலைமீது செல்லவோ எந்த நிகழ்வும் நடத்தவோ அனுமதிக்க கூடாது என இந்து அமைப்புகள் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் டிச.18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories