புத்தகம் அறிமுகம் : சங்க இலக்கியத்தில் வானிலைச் செய்திகள்!

இலக்கியம் நூலரங்கம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
sanga ilakkiyathil vanilai seithigal - 2026

பெயர் : சங்க இலக்கியத்தில் வானிலைச் செய்திகள்
ஆசிரியர் : கு.வை. பாலசுப்ரமனியன்,
பக்கங்கள் : 272
விலை : ரூ.300
பதிப்பகம் : முக்கடல் ,11, 33ம் தெரு, பாலாஜி நகர், விரிவு 3, புழுதிவாக்கம், சென்னை 91.

புத்தக ஆசிரியர்  : கு.வை.பாலசுப்ரமணியன், நுங்கம்பாக்கம் சென்னை வானிலை ஆய்வு மையத்தில், வானிலை ஆய்வாளர் பணியில் உள்ளார்.

தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் சரளமாக உரையாற்றக் கூடிய, திரு. கே.வி.பி அவர்கள், தன்னுடைய ஹிந்தி மொழியில் எழுதப்பட்ட சூறாவளி பற்றிய கட்டுரைக்காக ஜனாதிபதியின் “ராஜ்பாஷா புரஸ்கார்” பரிசினைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது வானிலை பற்றிய கட்டுரைகள் பல தமிழ் நாளேடுகளில் வந்துள்ளது. ஒலி ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் வானிலை பற்றி நிகழ்ச்சிகள் அளித்துள்ளார்.

சங்க இலக்கியத்தில் வானிலை செய்திகளைப் பற்றி இந்நூலில் எழுதியுள்ளார்.

புத்தகத்தைப் பற்றிய ஒர் கண்ணோட்டம் :

தமிழ் இலக்கியங்களில் வானிலை பற்றிய குறிப்புகள் செறிந்து காணப்பட்டாலும், அதனைத் தொகுத்து அறிவியல் கண்ணோட்டத்தில் ஆய்ந்து எடுத்துரைக்கும் நூல்கள் மிகக் குறைவு. இதிகாசங்கள், புராணங்கள், ஸ்மிருதிகளில் சொல்லப்பட்ட வானிலைக் கருத்துகளை எளிதில் அறிய முடிகிறது. தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக சங்க இலக்கியத்தில் வானிலைக் குறிப்புகளை இப்புத்தகம் எடுத்துரைக்க இயல்கிறது.

வானிலை காலநிலை கருத்து விளக்கம் என்றஅத்தியாயத்தில் வானிலை அறிவியலின் வளர்ச்சி, தரவு சேகரிக்கும் முறைகளின் பாகுபாடுகளை விவரித்திருக்கிறார் ஆசிரியர்.

சங்க இலக்கியத்தில் காற்று,
 சங்க இலக்கியத்தில் மழை,  
சங்க இலக்கியத்தில் மேகம்
மற்றும் சங்க இலக்கியத்தில் காலநிலை
ஆகிய அத்தியாயங்களில் அகநானூறு தொடங்கி எல்லா சங்க இலக்கியங்களிலும் காணத் தெரிகின்ற வானிலச் செய்திகளையும் குறிப்புகளையும் மிகத் தெளிவாகவும், சுவையாகவும் தொகுத்துள்ளார் நூலாசிரியர்.

சங்க இலக்கியங்களில் நிலவியல் மற்றும் பருவ கால மாற்றங்களை பதிவு செய்துள்ளனர். தற்போதய காலநிலை வகைப்பாடு ரஷ்ய வானிலையாளர் விளாடிமீர் கோப்பன் என்பவர் வரையறுத்ததைப் பின்பற்றியதாகும்.

அதற்குச் சற்றும் குறைந்தது அல்ல தொல்காப்பியரின் பதிவுகள் என்கிறார் வானிலை ஆய்வாளர் கே.வி.பி.

“ஐந்திணைக்கும் தொல்காப்பியர் கூறியுள்ள நிலமும் பொழுதும், கருப்பொருட்களும், உரிபொருட்களும் அவரை ஒரு திறமையான காலநிலையாளராக நமக்குப் புலப்படுத்துகிறது.”

தக்க ஆதாரங்களுடனும், சுவையான இலக்கியச் சுவையுடனும் எழுதப்பட்டிருக்கும் இந்நூல் நிச்சயமாக தமிழ்விரும்பிகள் அனைவர் கையிலும், முக்கியமாக அறிவியல் மற்றும் தமிழ் வளர்க்கும் கல்லூரிகள், நூலகங்களில் இருக்கவேண்டும் என தன் அணிந்துரையில் குறிப்பிடுகிறார், சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர், முனைவர் பாலசந்திரன்.

  • கமலா முரளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 5 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.