
இணையதளத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலால், வருமான வரி செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வருமான வரிக்கான புதிய இணையதளத்தில் வருமான வரி தாக்கல் செய்வதில், பயனர்கள் தொடர்ந்து சிரமங்களைச் சந்தித்து வந்தனர். இந்நிலையில், வருமான வரி தாக்கலுக்கான கால அவகாசத்தை அரசு இந்தாண்டு இறுதிக்கு மாற்றியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் வருமான வரிக்கான புதிய இணையதளம் தொடங்கப்பட்டது. இன்போசிஸ் நிறுவனத்திடம் இணையதளக் கட்டமைப்புக்கான பணிகள் ஒப்படைக்கப் பட்டிருந்தன. புதிய இணையதளம் பயன்பாட்டுக்கு வந்த பின்னர், பயனர்கள் பலர் இணையதளத்தில் நுழைய முடியாமல் பெரும் சிரமத்தை அனுபவித்தனர். மேலும் பயனர்கள், வருமான வரித் தாக்கலில் ஏராளமான சிக்கல்களை சந்தித்தனர்.
இந்நிலையில், வெறுத்துப் போன வரிசெலுத்துவோர், இன்போசிஸ் நிறுவனத்தையும் மத்திய நிதி அமைச்சகத்தையும் விமர்சிக்கத் தொடங்கினர். இதை அடுத்து, இன்போசிஸ் சி.இ.ஓ.,வுக்கு சம்மன் அனுப்பி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விசாரணை நடத்தினார்.
இதை அடுத்து வருமான வரித் தாக்கலுக்கான கெடு தேதி செப்., 31 என்று நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், இதில் இருக்கும் சிக்கல்கள் களைந்தபாடில்லை.
இந்நிலையில் செப்.09 இன்று நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் வருமான வரி தாக்கலுக்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப் பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் கூறிய சிரமங்களை கவனத்தில் கொண்டு 2021 – 22 ஆண்டுக்கான வருமானவரி தாக்கலுக்கான கால அவகாசம் டிசம்பர் 31, 2021 வரை நீட்டிக்கப்படுகிறது. 2020 – 21 ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையை சமர்ப்பிக்கும் தேதி 31 அக்டோபரிலிருந்து, 2022, ஜனவரி 15 வரை நீட்டிக்கப்படுகிறது.
சர்வதேச பரிவர்த்தனை அல்லது குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனைக்கு கணக்காளரிடமிருந்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய தேதி 2022, ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுகிறது.
தணிக்கை தேவைப்படும் கணக்கு தாக்கலுக்கான கடைசி தேதி 2022, பிப்ரவரி 15 ஆக நீட்டிக்கப்படுகிறது என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.
இதை அடுத்து, வருமான வரி செலுத்துவோம் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.