ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா மனு

இந்தியா சற்றுமுன் சென்னை

புதுதில்லி:

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, மாநிலங்களவை எம்.பி., சசிகலா புஷ்பா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சசிகலா புஷ்பா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவருக்கு என்ன உடல் நலக் குறைவு ஏற்பட்டது என்பது குறித்த உண்மையான தகவல் வெளியிடப்படவில்லை; அவரை சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இறுதிச் சடங்கு புகைப்படங்களில், அவரது முகத்தில், ‘எம்பால்மிங்’ எனப்படும் பதப்படுத்தப்பட்டதற்கான அடையாளம் உள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல், இறுதிச் சடங்கு வரை, பல்வேறு உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஜெயலலிதாவின் உண்மையான உடல் நிலை, அளிக்கப்பட்ட சிகிச்சை உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்யும்படி, மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் அப்பல்லோ மருத்துவமனைக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்ப வேண்டும்.

– என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக, ஏற்கெனவே தமிழ்நாடு தெலுங்கு யுவ சக்தி என்ற அமைப்பின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.