பிரியங்காவின் மொபைல் ஹேக் செய்யப்பட்டதை ‘வாட்ஸ் ஆப்’பே சொன்னது: ரண்தீப் கூறுகிறார்!

இந்தியா
priyanka - 2026

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டதாக வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பியதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

நாடு முழுவதும் முக்கிய பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட சிலரின் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

இஸ்ரேலைச் சேர்ந்த உளவு சாப்ட்வேர் பீகாசஸ் மூலம் இந்த பெயர் வெளியிடப்படாத நிறுவனங்கள் சில இந்தியாவைச் சேர்ந்த முக்கிய பத்திரிகையாளர்கள் , மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் வாட்ஸ் அப் தகவல்களை உளவு பார்த்ததாக தகவல் வெளியானது.

கலிபோர்னியா பெடரல் நீதிமன்றத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த சைபர் உளவு நிறுவனமான என்எஸ்ஓ 1,400 பேரின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு அவர்களது வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாகவும், தெரிவித்துள்ளது.

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இதுபற்றி கூறுகையில், “கோடிக்கணக்கான இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும். அற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது” என உறுதியளித்தார்.

ஆனால் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி, மத்திய அரசைக் கடுமையாகச் சாடி வருகிறது. பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகளை உளவுபார்த்த மத்திய அரசு சிக்கிக்கொண்டது. இதை உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.

இந்தநிலையில் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் படேல் ஆகியோரின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் மெசேஜ் அனுப்பியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டதாக வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பியதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கூறுகையில் ”மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் படேல் ஆகியோரின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்ட கூறப்படும் காலத்திலேயே பிரியங்கா காந்தியின் மொபைல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் நிறுவனம் பிரியங்கா காந்திக்கு மெசேஜ் அனுப்பியுள்ளது. இஸ்ரேல் உளவு நிறுவனம் ஹேக் செய்ய உதவியது யார் என்பது குறித்த உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும். மத்திய அரசு அமைதியாக இருப்பதில் அர்த்தமில்லை” எனக்கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.