
இந்தியா – மே.இ. தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வென்று, இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
(இடம்: டெல்லி; சுருக்கமான ஸ்கோர்: இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் -518/5 டிக்ளேர், இரண்டாவது இன்னிங்க்ஸ் – 124/3 ; மேற்கு இந்திய தீவுகள் முதல் இன்னிங்க்ஸ் – 248, இரண்டாவது இன்னிங்க்ஸ் – 390)
போட்டியின் முதல் நாள் முழுக்க முழுக்க இந்திய அணியின் தினம். முதல் நாள் முடிவில் எடுத்த இரண்டு விக்கட் இழப்பிற்கு 318 ரன் என்பது தரமான ஸ்கோர். ஜெய்ஸ்வாலின் 173 ரன் ஒரு தவறான ஷாட் இல்லாத ஸ்கோர். ராகுல் விரைவாக அவுட் ஆனதால் சாய் சுதர்ஷன் சீக்கிரமாகவே விளையாட வந்து விட்டார். இரண்டே முக்கால் மணி நேரம், 57 ஓவர்கள் ஜெய்ஸ்வாலுடன் இணைந்து விளையாடி 87 ரன்கள் எடுத்தார். அவர் மூன்று தவறான ஷாட்டுகள் விளையாடினார். முதல் ஷாட்டில் மே.இ. தீவுகள் ஒரு கேட்சை கோட்டைவிட்டது. மூன்றாவது தவறான ஷாட்டில் அவர் ஆட்டமிழந்தார்.
மே.இ. தீவுகள் பந்துவீச்சில் விசேஷமாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவர்களுடைய பந்துவீச்சில் அவர்கள் ஒரு எக்ஸ்ட்ரா கூட கொடுக்கவில்லை. ஆனால் ரன்னைத் தடுக்கும் வகையிலோ, அல்லது, விக்கட் எடுக்கும் வகையிலோ அவர்கள் பந்து வீசவில்லை. எனவே இந்திய அணி மேலும் ரன் எடுக்க வசதியாக அமைந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில், இந்தியா விரைவாக இரு விக்கெட்களை இழந்தது. என்றாலும் இரண்டாம் நாள் ஆட்டத்திலும் இந்திய அணி திறமையாக விளையாடியது. நாளின் தொடக்கத்தில் நிச்சயமாக இரட்டைச் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 175 ரன்னிற்கு ரன் அவுட் ஆனார். அதன் பின்னர் நிதீஷ் குமாருக்கு இன்று பேட்டிங் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் 43 ரன் கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதற்கிடையில் ஷுப்மன் கில் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். அடுத்த மட்டையாளர் துருவ் ஜுரல் 44 ரன்னில் இருக்கும்போது ரோஸ்டன் சேஸ் பந்தில் போல்ட் அவுட் ஆனார். அச்சமயத்தில் கில் இந்திய அணியின் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார். மொத்தத்தில் இன்று, இந்திய அணி 44.2 ஓவர் விளையாடி 200 ரன்கள் சேர்த்தது.
(இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 134.2 ஓவர்களில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 518 டிக்ளேர்டு; கே.எல். ராகுல் 38, யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 175, சாய் சுதர்ஷன் 87, ஷுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 129, நிதீஷ்குமார் ரெட்ட் ஜோமல் வாரிகன் 3/98, ரோஸ்டன் சேஸ் 1/83)
இதன் பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸைத் தொடங்கிய மே.இ. தீவுகள் அணி பும்ரா மற்றும் சிராஜ் ஓவர்களை நன்கு சமாளித்தனர். ஆனால் ஜதேஜா பந்துவீச வந்ததும் முதல் விக்கட் விழுந்தது. இரண்டாவது விக்கட்டிற்கு சந்தரபாலும் அதனாசேயும் 50 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். பின்னர் சந்தரபால் மற்றும் ரோஸ்டன் சேஸ் இருவரும் ஜதேஜாவின் சுழலில் ஆட்டமிழந்தனர். குல்தீப் தன் பங்கிற்கு அதனாசேயின் விக்கட்டை வீழ்த்தினார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மே.இ. தீவுகள் அணி 43 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 140 ரன் எடுத்திருந்தது. ஃபாலோ ஆனைத் தவிர்க்க அந்த அணி இன்னமும் 179 ரன்கள் எடுக்கவேண்டும்.
மே.இ. தீவுகள் அணி முதல் இன்னிங்க்ஸ் (43 ஓவர்களில் 140/4, ஜான் கேம்ப்பெல் 10, சந்த்ரபால் 34, அதனசே 41, ஷாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 31, ரோஸ்டன் சேஸ் பூஜ்யம், டெவின் இம்ல்ச் ஆட்டமிழக்காமல் 14, ஜதேஜா 3/37, குல்தீப் யாதவ் 1/45)
இந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. நடுத்தர வரிசை ஆட்டக்காரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்ததால், அந்த அணி 248க்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து, ஃபாலோ ஆன் பெற்றது. தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஆட்டக்காரர்கள் இம்முறை சிறப்பாக நின்று ஆடினார்கள். சந்தர்பால், அதனாஸ் என இரு தொடக்க வரிசை ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து 35க்கு 2 விக்கெட்கள் என்ற நிலையில் இருந்து 3வது விக்கெட்டுக்கு 177 ரன்கள் பாட்னர்ஷிப் போட்டு, 212க்கு 3 என்ற நிலை வரை அழைத்து வந்தனர் காம்பெல், ஹோப் இருவரும். காம்பெல் 115 ரன்னும் ஹோப் 103 ரன்னும் எடுத்தனர். அதன் பின்னர் கேப்டன் சேஸ் 40 ரன்னும் கிரீஸ் 50 ரன்னும் எடுத்தனர். கடைசி விக்கெட்டுக்கு நின்று நிதானித்து விளையாடி 79 ரன் பார்ட்னர்ஷிப் போட்டு சீல்ஸ் 32 ரன் எடுத்து கை கொடுத்தார். இதனால் அந்த அணி 390க்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதன் பின்னர் தொடர்ந்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடத் தொடங்கியது. மூன்றாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ரன் எடுத்திருந்தது இந்திய அணி.
நான்காம் நாளான இன்று தொடர்ந்து ஆடிய இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இரு போட்டிகளிலும் வென்று தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் இரு இன்னிங்க்ஸிலும் சேர்த்து (5/80, 3/104) 8 விக்கெட்கள் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார். தொடர் நாயகன் விருது ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது.





