வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்திய அணி!

இந்தியா சற்றுமுன் விளையாட்டு
ind ban - 2026

INDvBAN இந்திய அணி அபார வெற்றி: 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி

வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இந்திய அணி 30 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் அரை சதம், சகார் ‘ஹாட்ரிக்’ கைகொடுக்க இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது. முதல் போட்டியில் வங்கதேச அணி வென்றது. இரண்டாவது போட்டியை இந்திய அணி வென்று, தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி மஹாராஷ்டிராவின் நாக்பூரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் மகமதுல்லா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதை அடுத்து இரண்டாவது டி20 போட்டியில் கலக்கிய கேப்டன் ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் 2 ரன் எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றினார். ஷிகர் தவான் 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஆனால், லோகேஷ் ராகுல் எதிரணி பந்துவீச்சை சிதறடித்தார். அரை சதம் விளாசிய இவர் 52 ரன்களில் அவுட்டானார். ஸ்ரேயாஸ் ஐயர் ‘மின்னல்’ வேகத்தில் ரன் சேர்த்தார். ஆபிப் பந்து வீச்சில் தொடர்ந்து மூன்று சிக்சர் பறக்கவிட்ட இவர் அரை சதம் கடந்தார்.

ரிஷப் (6) ஒற்றை இலக்கில் திரும்பினார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணியில், லிட்டன் தாஸ் (9), சவுமியா சர்கார் (0) சொதப்பினர். தீபக் சகார் ‘வேகத்தில்’ முகமது மிதுன் (27) ஆட்டமிழந்தார். நயீம் அரை சதம் கடந்தார். ஷிவம் துபே பந்துவீச்சில் முஷ்பிகுர் (0), நயீம் (81) ஆட்டமிழந்தனர். சகாரின் பந்துவீச்சில் முஸ்தபிஜுர் (1), அமினுல் (9) ஆட்டமிழந்தனர். வங்கதேச அணி 19.2 ஓவரில் 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக தீபக் சகார் 6 விக்கெட் வீழ்த்தினார். தீபக் சகார் வீசிய 18வது ஓவரின் கடைசி பந்தில் சபியுல் (4) அவுட்டானார். கடைசி ஓவரை வீசிய சகாரின், முதலிரண்டு பந்துகளில் முஸ்தபிஜுர் (1), அமினுல் (9) ஆட்டமிழந்தனர். இதன் மூலம் சர்வதேச டி-20 போட்டியில் ‘ஹாட்ரிக்’ சாதனை நிகழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமை பெற்றார் சகார்.

இதை அடுத்து இந்திய அணி தொடரை 2-1 என தொடரை கைப்பற்றியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.