பிப்ரவரி 2018க்குள் மொபைல், ஆதாருடன் இணைக்கப்படாவிடில் சிம்கார்ட் கட் ஆகிவிடும்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்

புது தில்லி:

வரும் 2018 பிப்ரவரி மாதத்துக்குள் ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்காவிட்டால், சிம் கார்டு செயலிழக்க வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் அட்டைகளைப் பெறுவது குறித்து தொடர் விழிப்பு உணர்வுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. சத்துணவு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் அவசியம் என அறிவுறுத்தப்பட்டது.

கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, அனைத்து மொபைல் போன் எண்களும் ஆதாருடன் இணைக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாத சிம்கார்டுகள் செயலிழப்பு செய்யப்பட வேண்டும் என்றும் கூறியது. அதுவும் ஒரு வருட காலத்துக்குள், அனைத்து மொபைல் போன் எண்களும் ஆதாருடன் சரிபார்க்கப்பட வேண்டும் என்றும் கூறியது.

தவறான தகவல்களைக் கொடுத்து மொபைல் எண் பெறுவதைத் தடுக்கும் நோக்கில் இது அறிவுறுத்தப் பட்டது. மேலும், மொபைல் ஆபரேட்டர்களிடம் வாடிக்கையாளரின் கைரேகை உள்ளிட்ட தனிப்பட்ட பயோமெட்ரிக் தகவல்கள் கிடைக்காதவாறு அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

லோக்னிடி பவுண்டேஷன் என்ற அரசு சாரா நிறுவனத்தின் பொது நல வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

இதற்கு பதிலளித்த அரசின் தலைமை வழக்கறிஞர், அரசு இதனை படிப்படியாக செய்து வருவதாகவும், 105 கோடி மொபைல் போன் எண்கள் பயன்பாட்டில் இருப்பதாகவும், இவ்வளவு பெரிய சந்தாதாரர்களின் பட்டியலை முழுமையாக இணைப்பதில் கால தாமதம் ஏற்படுவதாகவும் கூறிய அவர், 90 % பயனாளிகள் ப்ரீபெய்ட் இணைப்பையே வைத்துள்ளார்கள் என்று கூறியிருந்தார்.

மேலும், அடுத்த முறை ரீசார்ஜ் செய்ய வாடிக்கையாளர் வரும்போது, ஆதார் எண்ணுடன் கூடிய ஒரு படிவத்தை பூர்த்தி செய்து அளித்தால் மட்டுமே ரீசார்ஜ் செய்யப்படும் என்றும், அவ்வாறு மூன்று வாய்ப்புகள் வரை அவர்களின் மொபைல் எண்ணை ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கப்படும் என்றும், பின்னர் இது கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப் படும், இல்லாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் வழக்குரைஞர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.