போலிகளின் வெளி வேஷம்! ஆச்சார்யாள் அருளமுதம்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் ஸ்ரீசிருங்கேரி மகிமை
abinav vidhya theerthar - 2026

தம்முடைய உணவிலும் மற்றும் ஆன்மீக சாதனைகளிலும் எவ்வித கட்டுப்பாடுமின்றி ஒரு சன்யாசி இருந்தார்.

ஒரு நாள் ஒரு கிரகஸ்தன் அவரை அணுகி தாங்கள் எந்த கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்காதது போல் தெரிகிறது. நீங்கள் விரும்பியதை சாப்பிடுகிறீர்கள் சோம்பேறியாக சுற்றித்திரிந்து காலத்தை வீணடிக்கிறீர்கள். ஒரு சன்யாசி செய்யக் கூடாத சில காரியங்களை செய்து கொண்டிருக்கிறீர்கள். இப்படி நடந்து கொள்வது உங்களுக்கு நியாயமாக இருக்கிறதா? என்று கேட்டார்.

அதற்கு சன்யாசி எல்லாமே பிரம்மம் உடலும் மனமும் தான் செயல்களை புரிகின்றனவே தவிர நான் இச்செயல்களினால் சிறிதும் களங்கப்படாத தூய்மையான பரமாத்மா. சொல்லப்போனால் உடலும் உள்ளமும் என்ன செய்கின்றன என்பதில் எனக்கு தாத்பரியம் இல்லை. உண்மையில் எல்லாமே பிரம்மமாக இருக்கின்றது என்று பதிலளித்தார்.

கிரகஸ்தர் சன்னியாசியிடம் தாங்கள் பிக்க்ஷைக்கு என் வீட்டிற்கு வர முடியுமா? என கேட்டார். சரி எனக்கு ஆட்சேபணை ஏதும் இல்லை ஆத்மாவில் எப்பொழுதும் பிரமித்து கொண்டிருக்கும் எனக்கு எதை பற்றியும் கவலை இல்லை நான் வருகிறேன் என்று பதிலளித்தார்.

அன்று பிற்பகல் சன்னியாசி அந்த கிரகஸ்தரிதன் வீட்டிற்கு சென்று சாப்பிடுவதற்காக அமர்ந்து கொண்டார். இருப்பினும் கிரகஸ்தர் அவருக்கு ஒரு சொட்டு நீரைக்கூட கொடுக்கவில்லை. நேரம் செல்லச்செல்ல சன்னியாசிக்கு இருப்பு கொள்ளவில்லை. ஆனால் கிரகஸ்தர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்தார். கடைசியில் அதற்கு மேல் பொறுக்க முடியாத சன்யாசி என்னை எதற்காக இப்படி காக்க வைக்கிறீர்கள். நான் பசியோடு இருக்கிறேன். சீக்கிரம் எனக்கு உணவை பரிமாறுங்கள். என கூச்சலிட்டார்.

சன்னியாசின் அருகில் வந்த கிரகஸ்தர் எப்பொழுதும் ஆத்ம ஞானத்தில் முற்றிலுமாக மூழ்கியுள்ள உங்களுக்கு எப்படி பசியும் தாகமும் ஏற்படும் என்பது எனக்குச் சற்றும் புரியவில்லை. எங்கும் வியாபித்திருக்கும் ஆத்மாவும் நீங்களே ஆகையால் நீங்கள் ஏற்கனவே நீரின் உள்ளேயும் வெளியேயும் பரவி இருக்கிறீர்கள். உண்மை நிலை இப்படியிருக்க என்னால் உங்களுக்கு தண்ணீர் கொடுக்கக் கூட முடியவில்லை என்று கிண்டல் செய்தார். உடனே அங்கிருந்து கோபத்துடன் எழுந்த சன்யாசி இப்படி எல்லாம் பேசக்கூடாது என்னால் பசியைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று சொல்லிவிட்டு உணவைத் தேடிப் புறப்பட்டார்.

இந்த சன்யாசியிடம் புலனடக்கமும் இல்லை வைராக்கியமும் இல்லை. ஆகையால் ஞானம் சித்திக்காத, சன்யாசிகள் கடைபிடிக்க வேண்டிய தர்ம நெறிகளை அவரால் அனுசரிக்க முடியவில்லை. தம்முடைய துரு நடத்தைக்கு ஒரு விளக்கத்தை அளிப்பதற்காக உயர்ந்த அத்வைத தத்துவத்தை அவர் தவறாக பயன்படுத்தினார். கட்டுப்பாடற்ற நமது செயல்களினால் அவர் நிறைய பாவங்களை சம்பாதித்துக் கொண்டார். அவருடைய அத்வைத பிரகடனங்கள் அவரை பாவங்களிலிருந்து எந்த விதத்திலும் காப்பாற்றவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.