சுபாஷிதம் : ஸ்பூர்த்தி பதம் – தூதனின் நற்குணங்கள்!

ஆன்மிகக் கட்டுரைகள் சுய முன்னேற்றம் லைஃப் ஸ்டைல்
subhashitam
subhashitam

சுபாஷிதம் : ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

14. தூதனின் நற்குணங்கள்!

ஸ்லோகம்:

அனுரக்த: சுசிர்தக்ஷ: ஸ்ம்ருதிமான் தேசகாலவித்|
வபுஷ்மான் வீதபீர்வாக்மீ தூதோ ராஜ்ஞ: ப்ரசஸ்யதே||

–ராமாயணம்

பொருள்:

அரசனிடம் கௌரவத்தோடு கூடிய அன்பு கொண்டவன்,  ஊழலற்ற தூய்மையானவன், சாமர்த்தியம் மிக்கவன், அறிவாளி, இடம் பொருள் காலம் அறிந்தவன், பலமான உடல் கொண்டவன், அச்சமற்ற வாக்கு சாதுரியம் மிக்கவன் – நல்ல தூதுவனாக அரசனால் புகழப்படுவான்.

விளக்கம்:

ஒரு அரசனுக்காக,  ஒரு அரசாங்கத்திற்காக வேறொரு அரசாங்கத்திற்கு நியமிக்கப்படும் செய்தியாளரை தூதன் என்பர். தூதர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்று விவரிக்கும் ராமாயண சுலோகம் இது. இந்நாட்களில் ஒரு வியாபார நிறுவனத்தின் பிரதிநிதிக்கு இருக்க வேண்டிய தகுதிகளும் இவையே!

தூதன் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது ராமதூதனான ஸ்ரீஆஞ்சநேயர். மகா வீரனான ஶ்ரீராமனின் தரப்பில் ஒரு மகா சக்கரவர்த்தியான ராவணனோடு பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற தூதன் எவ்வாறு இருக்க வேண்டும்? மேற்குறிப்பிட்ட இயல்புகள் கொண்ட ஹனுமனைப் போல் இருக்க வேண்டும்.

ராமதூதனாகச் சென்று சபையில் ராவணனுக்கு நல்லுபதேசம் செய்த அனுமான் கூறிய கருத்துக்களே இதற்கு உதாரணம். அனுமனின் அறிவுத்திறன் இதில் வெளிப்படுகிறது. நேரடியாகக் கூறுவது, எதிராளியை மிகவும் தாழ்மையாக பார்ப்பது போன்றவை இன்றி, அனுமன் உசிதமாகப் பேசி, சமயோசிதமாக நடந்து கொண்ட விதத்தை இராமாயணத்தின் இந்த கட்டத்தில் காணமுடிகிறது.

ஒரு வியாபார நிறுவனத்தின் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்றாலும் இது போன்ற குணங்கள் இருக்க வேண்டும் என்று அறிந்துகொள்ளலாம். பணியாற்றும் நிறுவனத்தின் மீது மதிப்பு, நேர்மை, வேலையில் திறமை, நிறுவனம் தயாரிக்கும் பொருட்களைக் குறித்த புரிதல், காண்போரைக் கவரும் உருவம், பிறர் கவனத்தை ஈர்க்கும் பேச்சுத்திறன் முதலான இயல்புகளை முக்கியமானவையாகக் கருத வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.