28ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்கும் வாய்ப்பில்லை: இந்திய கம்யூனிஸ்ட்

சற்றுமுன்

சென்னை: விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு விடுத்துள்ள மார்ச். 28 ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நேரடியாகப் பங்கேற்பதற்கான வாய்ப்பு இல்லை என்று முத்தரசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகிய அமைப்புகளை அமைக்காமல் உள்நோக்கத்தோடு கால தாமதப்படுத்தி வருகிறது. இந் நிலையில் கர்னாடக அரசு மேக தாட்டு, ராசி மணல் ஆகிய இடங்களில் காவரியின் குறுக்கே அணைகள் கட்டி தண்ணீரை தேக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக நடப்பு நிதியாண்டில் (2015&16) நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஒரு சட்ட மீறலாகும். தொடர்ந்து சட்ட மீறலில் ஈடுபட்டு வரும் கர்னாடக அரசின் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்ப காலத்திலிருந்து இடைவிடாது தொடர்ந்து போராடி வருகிறது. 1972 ஆம் ஆண்டிலேயே மக்களவையில் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்ட நடுவர் மன்ற அமைக்க வேண்டியதன் அவசியத்தை நாகப்பட்டினம் தொகுதி உறுப்பினர் மா.காத்த முத்து மூலம் வலியுறுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக 1989ஆம் ஆண்டில் தஞ்சாவூர் முதல் வேதாரண்யம் வரையிலுமாக 110 கிலோ மீட்டர் மாபெரும் மனித சங்கலி போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 48 மணி நேரம் சாலை&ரயில் மறியல் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதை போல் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் காவிரி நதிநீர் கோரிக்கைக்காக அதனதன் நிலையிலிருந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்தமுறையில் வரும் 28.03.2015 அன்று காவிரி பாசன மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டத்தை சென்னையில் கூடிய அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் அறிவித்துள்ளன. இம் மாதம் 25 முதல் 29 முடிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது தேசிய மாநாடு புதுச்சேரியில் நடைபெறுகிறது. இதனையட்டி 29.03.2015 அன்று பேரணி&பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் முழு அடைப்பு போராட்டத்தில் நேரடியாக பங்கேற்பதற்கான வாய்ப்பு இல்லை. வருகிற 09.04.2015 அன்று விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் ஒருங்கிணைந்து காவிரி பாசன மாவட்டங்களில் நடத்தும் சாலை&ரயில் மறியல் போராட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரித்து பங்கேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.- என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.