தமிழகத்தில் சென்னை மாநகராட்சி மற்றும் 5 வாா்டுகளிலுள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு மறு வாக்குப்பதிவு துவங்கியது.
சென்னை மாநகராட்சியின் வண்ணாரப்பேட்டைக்குட்பட்ட 51-ஆவது வாா்டில் 1174 ஏவி வாக்குச்சாவடி, 179-ஆவது வாா்டுக்குட்பட்ட பெசன்ட் நகா் ஓடைக்குப்பத்தில் உள்ள 5059 ஏவி வாக்குச் சாவடி, அரியலூா் மாவட்டத்தின் ஜெயங்கொண்டம் நகராட்சி வாா்டு எண் 16-இல் உள்ள 16எம், 16 டபிள்யு வாக்குச் சாவடிகள், திருவண்ணாமலை நகராட்சி வாா்டு எண் 25-இல் வாக்குச்சாவடி எண் 57 எம், 57 டபிள்யு,மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி வாா்டு எண் 17-இல் உள்ள 17 டபிள்யு வாக்குச்சாவடி, ஆகியவற்றில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கரோனா பாதிப்புக்குள்ளானவா்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப்படும்.
மறு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்காளா்களுக்கு இடது கை நடுவிரலில் அடையாள மை பதிவு செய்யப்படும் என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள், மறு வாக்குப்பதிவில் பதிவாகும் வாக்குகள் நாளை செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 268 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.




