கால்வான் கைகலப்பு; 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீனா வெளியிட்ட காட்சிக் ‘கணக்கு’!

உலகம் சற்றுமுன்
indo-china-galwan1
indo-china-galwan1

கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய – சீன ராணுவத்துக்கு இடையே நிகழ்ந்த மோதல் காட்சியின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது சீன ஊடகம். அந்தக் காட்சியில் தங்கள் தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாகவும், அவர்களின் தியாகத்தை மதிப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய – சீன ராணுவத்தினருக்கு இடையே மோதல் உருவானது. இந்திய ராணுவத்தினரின் பக்கத்தில் திடீர் என புகுந்து, கம்பிகள், முள்கம்பிகள், கட்டைகள் கற்களால் சீன ராணுவத்தினர் தாக்கியதாகவும், அவர்களின் தாக்குதலை எதிர்கொண்டு, கைகளாலே திருப்பித் தாக்கி, சீன ராணுவத்தைச் சேர்ந்த 45க்கும் அதிகமானோரை இந்திய ராணுவத்தினர் கொன்றதாகவும் செய்திகள் வெளியாகின. 

ஆனால் இதனை சீனா மறுத்து வந்தது. தங்கள் நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மரணம் குறித்து எந்த விதத் தகவலும் அது தெரிவிக்கவில்லை. ஆனால் இது குறித்து சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகி, சீனாவின் வாய்மூடிய மௌனத்துக்கு பங்கம் விளைவித்துக் கொண்டிருந்தன. 

indo-china-galwan
indo-china-galwan

இந்தியா தனது தரப்பில், இந்த மோதலில் 20 பேர் உயிர்த் தியாகம் செய்ததாக அறிவித்து, அவர்களின் தியாகத்துக்கு உரிய மரியாதையைச் செய்தது என்று சர்வதேச ஊடகங்கள் இந்தியாவின் செயலைப் பாராட்டின. அதே நேரம், இரும்புத் திரையிடப் பட்ட கம்யூனிஸ சீனா, தனது நாட்டு ராணுவத்தினரின் உயிரிழப்பைக் கூட மூடி மறைத்து அவர்களின் உயிர்த் தியாகத்தை கொச்சைப் படுத்துகிறது என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்டது. 

இந்த நிலையில்,  சர்வதேச ஊடகங்களின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், இரு நாட்டு எல்லையில் வீரர்கள்  மோதிக்கொண்டது தொடர்பான வீடியோ காட்சியை சீன ஊடகம் வெளியிட்டுள்ளது. 

நீர்நிலை ஒன்றின் அருகே இரு தரப்பைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் திரண்டு இருப்பதும், சீன வீரர்களை இந்திய வீரர்கள் துணிச்சலுடன் எதிர்கொண்டு அத்துமீறி உள்ளே வர விடாமல் தடுக்கும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

மேலும், இந்தத் தாக்குதலில் தங்களது தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீனா அறிவித்திருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.