ஜெய்ஹிந்த் விவகாரம் – செய்ய வேண்டியது என்ன?

உரத்த சிந்தனை லைஃப் ஸ்டைல்
jaihind tamil - 2026

1. தமிழ்நாடு ஆளுனர் பன்வாரி லால் புரோஹித் தாமாகவே உடனடியாக ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும்.  “ஆளுனர் உரையின் முடிவில் ஜெய்ஹிந்த் என்ற முழக்கம் செய்யும் மரபைக் கடைப்பிடிக்காததில் தவறு நேர்ந்துவிட்டது. இதற்காக மிகவும் வருந்துகிறேன். இனி இத்தகைய தவறு நேராமல் உரைகளின் வாசிப்பு பிரதிகளை ஆளுனர் அலுவலகம் கறாராக கண்காணிக்கும் என்று உறுதி கூறுகிறேன். ஜெய்ஹிந்த்” என்ற ரீதியில் அது இருக்கலாம்.

2. ஜெய்ஹிந்த் என்ற முழக்கம் இல்லாததை ஏதோ “பெருமிதம்” போல சட்டமன்றத்திலேயே பேசி தேசவிரோத உணர்வையும் பிரிவினைவாதத்தையும் வெளிப்படுத்தி சட்டமன்றத்தின் புனிதத்தை அவமதித்ததற்தாக எம்.எ.ஏ ஈஸ்வரன் மீது சட்டபூர்வமாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு இந்திய தேசியத்தில் நம்பிக்கையுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுக்கவேண்டும்.  பாஜக, அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மையமாக இதை முன்னெடுக்க வேண்டும்.  இந்த நடவடிக்கை என்பது சில வாரங்களுக்கு சட்டமன்றத்திலிருந்து அவரை தள்ளிவைப்பதாகவோ, அல்லது தேசதுரோக சட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர் பதவியையே செல்லாததாக செய்வதாகவோ இருக்கலாம்.   இந்த நடவடிக்கை எடுக்கப்படும் வரை சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்யவேண்டும்.  பாஜக தலைவர்கள் இதை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்த வேண்டும். அதிமுகவும் சேர்ந்துகொண்டால் மிகவும் நல்லது.

3. தமிழ் செய்தி ஊடகம் என்னும் கழிவுநீர்க் கால்வாய்க்கு வெளியே ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பிறமொழி ஊடகங்களின் மூலமாக இந்த பிரசினையை தேசிய அளவில் பெரியதாக்கி,  திமுக தலைமையிலான மாநில அரசு பிரிவினைவாதத்தை தூபம் போட்டு வளர்க்கிறது என்பதைப் பெரிய செய்தியாக்க வேண்டும்.  பாஜக தேசிய தலைமை  இதைப் பற்றி பேசினால் தானாக செய்தியாகும்.

இதை விட்டுவிட்டு சும்மா ஜெய்ஹிந்த் முழக்கத்தின் வரலாறு, செண்பகராமன் பிள்ளை வரலாறு என்று சமூக ஊடகத்தில் வளவள என்று பேசிக்கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை.  “ஜெய்ஹிந்த்” என்பது *விவாதத்திற்கான* விஷயம் அல்ல. தேசமக்கள் அனைவரும் கட்டாயமாக மதித்துப் போற்றவேண்டிய விஷயம். அதை அவமதிப்பது என்பது தேசவிரோதக் குற்றம் என்பது உறுதியாக சொல்லப்படவேண்டும்.

ஜெய்ஹிந்த். வந்தே மாதரம்.

  • ஜடாயு, பெங்களூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.