நீட் ஆள்மாறாட்ட வழக்கு: உதித் சூர்யா, தந்தை மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை மதுரை
NEET - 2026

நீட் ஆள் மாறாட்ட வழக்கில் உதித் சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் மீது ஆள் மாறாட்டம், போலி ஆவணம் தயாரித்தது, சதித்திட்டம் தீட்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்தது தொடர்பான மோசடி வழக்கில் மாணவர் உதித் சூர்யா, தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் மீது சிபிசிஐடி போலீஸார் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். ஆள்மாறாட்டம், போலி ஆவணம் தயாரித்தல் மற்றும் சதித் திட்டம் தீட்டுவது ஆகிய 3 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பாக, தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள் ஆகியோரிடமும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்த உதித் சூர்யா என்ற மாணவர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சேர்ந்ததாக கல்லூரி முதல்வருக்கு மின்னஞ்சலில் ஒரு புகார் வந்தது. இதுதொடர்பாக கண்டமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாணவர் உதித் சூர்யா தலைமறைவானார். தொடர்ந்து அவரது குடும்பத்தைத் தேடியதில், அவர்களும் வீட்டைப் பூட்டிக் கொண்டு தலைமறைவு ஆயினர்.

இதை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த மாணவர் உதித் சூர்யா, நேற்று திருப்பதியில் குடும்பத்தினருடன் சிக்கினார்.

தேனி தனிப்படை போலீசார் உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன், தாய் கயல்விழி ஆகியோரைக் கைது செய்து சிபிசிஐடி போலீசிடம் ஒப்படைத்தனர். இதை அடுத்து அவர்களிடம் சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் நள்ளிரவில் தேனிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூவரிடமும் விசாரணை நடத்தப் பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக, தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் எழிலரசன், மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் 4 பேர் என இன்று காலை 9 மணிக்கு உதித் சூர்யா குறித்த ஆவணங்களுடன் சிபிசிஐடி போலீஸாரிடம் விசாரணைக்கு ஆஜராகினர்.

உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர். தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனும், வெங்கடேசனும் நண்பர்கள் என்றும், எனவே வெங்கடேசனுக்கு உதவும் முயற்சிகள் நடைபெற்றதா என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப் படுகிறது.

மேலும், உதித் சூர்யாவுக்காக தேர்வெழுதியதாக கூறப்படும் மாணவர் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படுகிறது. சிபிசிஐடி எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் மூவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. ஆள் மாறாட்ட வழக்கில், வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடைபெற்றதாம்.

இதைத் தொடர்ந்து, உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.