சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
99. படித்த அரக்கர்கள்!
ஸ்லோகம்:
சாக்ஷரா விபரீதாஸ்சேத் ராக்ஷசா ஏவ கேவலம் |
சரசோ விபரீதோ௨பி சரசத்வம் ந முஞ்சதி ||
– ஹிதோபதேசம்.
பொருள்:
‘சாக்ஷரா’ (கல்வி கற்றவர்கள்) விபரீதமாக மாறினால் ‘ராக்ஷசா’ ஆவார்கள். ‘சரச’ இயல்பு கொண்ட மனிதன் தலைகீழாக ஆனாலும் ‘சரச’ குணம் மாறாது. (சரச என்றால் நகைச்சுவையான, மகிழ்ச்சியான மனிதன்).
விளக்கம்:
அண்மையில் பிடிபட்டுவருகின்ற பயங்கரவாதிகள், ஆயுதம் பிடித்து மனிதர்களை கொன்று குவித்து வருபவர்கள். இவர்கள் எழுத்தறிவில்லாதவர்கள் அல்ல. படித்தவர்கள்தான். படித்தவர்களை சம்ஸ்கிருதத்தில் ‘சாக்ஷரா’ என்பார்கள். இந்த சொல்லைத் திருப்பி போட்டால் ‘ராக்ஷசா’ என்றாகும் என்று சமத்காரமாக எடுத்துரைப்பது இந்த ஸ்லோகத்தின் சிறப்பு.
படித்தவர்கள் சமுதாயப் பொறுப்போடு நடந்து கொள்ளாவிட்டால் தேசத்திற்கு தீங்கு நேரும். அவர்கள் அரக்கர்களாக மாறுவார்கள் என்று எச்சரிக்கும் ஹிதோபதேசம் இந்த சுலோகம்.
உயர்ந்த வம்சத்தில் பிறந்த ராவணன் வேதம், வேதாங்கம் படித்த கல்விமான். அவனுடைய எதிர்மறை குணத்தாலும், கற்ற கல்வியை கடைபிடிக்காமல் போனதாலும் அரக்கன் ஆனான்.
‘சரச’ என்றால் ஆனந்தமாக சிரித்து, சிரிக்க வைத்து மகிழும் மனிதன். அவன் எப்படி இருந்தாலும் அவனில் மாற்றம் இருக்காது என்பது கருத்து.
பல்கலைக்கழகங்களில் ஆய்வு செய்யும் கல்வியாளர்கள் நாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதைப் பார்க்கிறோம். பண்பாடற்ற கல்வியாளர்களால் என்ன பயன்?
அரக்க குணம் கொண்ட நரகாசுரன், ராவணன், மகிஷாசுரன், போன்றோருக்கு அநியாயம் நேர்ந்துவிட்டது என்று புலம்பி, அவர்களுக்குத் வக்காலத்து வாங்கி விவாதம் செய்யும் விபரீத நடத்தை கொண்டவர்கள் படிக்காத முட்டாள்கள் அல்லர். இவர்கள் எல்லாம் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாக உலவி வரும் அரக்கர்களே! இந்த சுலோகத்துக்கு சரியான உதாரணம் இவர்களே!