uve swamynadhaiyar - 2026

தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் பிறந்தநாள்: படைப்புக்களை வாசியுங்கள்.. பிரதமர் ட்விட்!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
uve swamynadhaiyar - 2026

தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர், சங்க கால இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததுடன் உன்னதமான பாரம்பரியத்தை கட்டிக்காக்க பங்களிப்பு செய்தவர் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இளைய சமுதாயத்தினர் அவரது ஒப்பிலா படைப்புகளை வாசிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றும் மோடி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

‘தமிழ் தாத்தா’ என அனைவராலும் போற்றப்படும் உ.வே.சாமிநாத ஐயர், 1855 ஆம் ஆண்டு பிப்ரவரி இதே நாளில் தமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு அருகே உள்ளே உத்தமதானபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தார்.

இவரது தந்தை ஒர் இசைக் கலைஞர். உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர் தன் 17 ஆம் வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ்பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார்.

தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் பல அரிய தமிழ் சுவடிகளைத் திரட்டி தொகுத்து தமிழ் இலக்கியத்திற்கு அரும்பணி ஆற்றியவர். இவரது பணியினால் எத்தனையோ அழிய இருந்த தமிழ் சுவடிகள் மீண்டும் புத்துயிர் பெற்றது.

செம்மொழி தமிழின் கருவூலங்கள் ஓலைச்சுவடியிலிருந்து அச்சு வடிவில் பதிப்பித்து அளித்தவர். தமிழ் தாத்தா உவேசா பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய சங்க இலக்கிய நூல்கள் பலவற்றையும், தமிழ் விடு தூது போன்ற வேறு பல அரிய தமிழ் நூல்களையும் அச்சு வடிவில் எதிர்கால தலைமுறையினருக்கு கொண்டு சென்றவர்.

சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், எனப் பலவகைப்பட்ட 90க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் தந்து அவற்றை அழிவில் இருந்து காத்தது மட்டுமின்றி அடுத்த தலைமுறையினர் அறியத் தந்தார்.

சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். உ.வே.சா. கருத்தாழத்தோடு நகைச்சுவை இழையோடப் பேசும் திறமை உடையவர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் உ.வே.சா ஆற்றிய சொற்பொழிவே ‘சங்ககாலத் தமிழும் பிற்காலத்தமிழும்’ எனும் நூலாக வெளியிடப்பட்டது.

உ.வே.சா தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டி மார்ச் 21, 1932 அன்று சென்னைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் அளித்தது. இதுதவிர மகாமகோபாத்தியாய மற்றும் தக்க்ஷிண கலாநிதி எனும் பட்டமும் பெற்றுள்ளார்.

1942ஆம் ஆண்டில் இவர் பெயரால் சென்னை பெசன்ட் நகரில் டாக்டர் உ.வே.சா நூல் நிலையம் அமைக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இவரது நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம் இல்லம் அரசால் நாட்டுடமையாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையால் உவேசாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார்.

தமிழ் தாத்தா உ. வே. சாமிநாத ஐயரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்கிறேன். தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்காக அவர் ஆற்றிய அரும்பணிக்காக போற்றப்படுபவர், சங்க கால இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததுடன் உன்னதமான பாரம்பரியத்தை கட்டிக்காக்க பங்களிப்பு செய்தவர்.

இளைய சமுதாயத்தினர் அவரது ஒப்பிலா படைப்புகளை வாசிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றும் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.