“கான்’ நடிகர்களின் படங்களைப் புறக்கணிக்க பாஜக., எம்பி., சாத்வி ப்ராச்சி வேண்டுகோள்

இந்தியா

sadhvi-prachi இந்துப் பெண்களை இஸ்லாமிய கதாபாத்திரங்கள் காதலித்து திருமணம் செய்வது போன்ற காட்சிகள், வன்முறைக் கலாசாரத்தைப் பரப்பும் காட்சிகள் கொண்ட பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், அமீர் கான், சல்மான் கான் ஆகியோரின் திரைப்படங்களை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. சாத்வி பிராச்சி கருத்து தெரிவித்தார். இந்தக் கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், அவர்களின் பட சுவரொட்டிகளை கிழித்தெறிவதோடு அவற்றை தீயிட்டுக் கொளுத்துமாறும் அவர் கூறினார். டேராடூனில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியபோது, “மீரட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்ட போது அங்கு ஒரு சிறுவனிடம் வாழ்க்கையில் நீ என்னவாக விரும்புகிறாய்” என்று கேட்டேன். அந்தச் சிறுவன், “நான் ஹிருத்திக் ரோஷன், ஷாருக் கான், சல்மான் கான், அமீர் கான் போல ஆக விரும்புகிறேன்’ என்று தெரிவித்தான். அதற்கு ஏன் அவ்வாறு ஆசைப்படுகிறாய்? என்று அவனிடம் கேட்டேன். அந்த நடிகர்கள் நன்றாக சண்டையிடுகின்றனர் என்று அவனது தாயார் கூறினார். “கான்’ நடிகர்களின் திரைப்படங்கள் வன்முறை கலாசாரத்தைப் பரப்பி வருகின்றன. இதனால் இளைஞர்கள் அவர்களால் கவரப்படுவதை தவிர்க்க வேண்டும். “கான்’ நடிகர்களின் திரைப்படங்களை ஹிந்துத்துவ அமைப்புகள் புறக்கணிக்க வேண்டும். அவர்களின் திரைப்பட சுவரொட்டிகளை கிழித்தெறிவதோடு அந்தச் சுவரொட்டிகளை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று பேசினார். அவரது இந்தப் பேச்சு இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.