இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்து விளக்குகிறார் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

governor banwarilal purohit - 2026

சென்னை: ஆளுநர் மாளிகை குறித்து ஊடகங்களில் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து விளக்குவதற்காக, ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் இன்று மாலை செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

முன்னதாக, அருப்புக்கோட்டை தனியார் கலைக் கல்லூரி பேராசிரியை கல்லூரி மாணவிகளை தவறான வழியில் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்ட ஒலிப்பதிவு ஒன்று வாட்ஸ் அப் வழியே உலா வந்தது. இதை அடுத்து அவர் மீது புகார் அளிக்கப் பட்டு போலீஸ் விசாரணையும் நடைபெற்றது.

இந்த நிலையில் டிஜிபி ராஜேந்திரன் உத்தரவின் பேரில், சிபிசிஐடி போலிஸார் வசம் விசாரணை ஒப்படைக்கப் பட்டது. முன்னதாக, பல்கலை., சார்பில் 5 பேர் கொண்ட விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப் பட்டது. ஆனால் ஆளுநர் மாளிகையில் இருந்து அதே நேரத்தில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப் பட்டது. இதுகுறித்து சர்ச்சைகள் எழுந்தன.

aruppukkottai nirmala devi - 2026

முன்னதாக, ஆளுநர் மாளிகையிலேயே பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தன. தற்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நேர்மையான மனிதர் என்று பெயரெடுத்தவர். அதனால், ஊழல்களைக் களைவதில் முன்னணியில் நின்று, பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணங்கள் செய்து, முறைகேடுகளைக் களைய நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

திராவிட இயக்கங்களின் ஆட்சியில் தமிழகம் ஊழல்களின் உறைவிடம் என்றும் முறைகேடுகளின் புகலிடம் என்றும் பொதுமக்களிடம் பெயரெடுத்துள்ள சூழலில் ஆளுநரின் ஊழல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசியல் மட்டத்திலும் அதிகாரிகள் மட்டத்திலும் ஜீரணிக்க இயலவில்லை என்று பேசப் படுகிறது. இந்த நிலையில், கோவையில் பாரதியார் பல்கலையில் மிகப் பெரும் முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது. தொடர்ந்து பல்கலை.,களின் துணைவேந்தர்களை அழைத்து கூட்டங்களை நடத்தி, ஊழலுக்கு எதிரான சாட்டையைச் சொடுக்கினார் ஆளுநர்.

இதனிடையே, ஆளுநர் மாளிகையில் பர்னிச்சர்கள் வாங்கியதில், போலி பில்கள் மூலம் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதைக் கண்டறிந்து ஆளுநர் மாளிகை ஊழியர்கள் இருவர் உள்பட பர்னிச்சர் விநியோகம் செய்பவரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, முன்னாள் பகுதி நேர ஆளுநராக செயல்பட்ட வித்யாசாகர் ராவ் மீதம் விட்டுச் சென்ற விமான பயண பில் ஒன்றை மகாராஷ்டிரம் கட்டட்டும் என்று திருப்பி அனுப்பி, அவரது கோபத்தையும் சம்பாதித்துக் கொண்டார் ஆளுநர் புரோஹித்.

இத்தகைய சூழலில் அவர் மீது குற்றம் சுமத்தி, ஆளுநரை வெளியேற்ற பல்வேறு சதிவலைகளை ஆளுநர் மாளிகையில் இருப்போர் உள்பட அரசியல்வாதிகள் பின்னி வரும் நிலையில், அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா ஆளுநர் பெயரை இழுத்து மோசமான குற்றச்சாட்டை சுமத்துகின்ற வேலையில் இறங்கியுள்ளார். இத்தகைய சூழ்நிலையில், ஆளுநர் இன்று மாலை பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.