வங்கியில் சிக்கிய கள்ளநோட்டுகள்: காவல் துறை அ.தி.மு.க. கவுன்சிலரிடம் விசாரணை நடத்த திட்டம்

சற்றுமுன்

 

திருச்சி மாவட்டம் பாலக்கரை துரை சாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 35). இவர் நேற்று காலை திருச்சி கண்டோன்மெண்ட் பகுதி பாரதியார் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு சென்றார்.

அப்போது அவர் வங்கியில் திருச்சி மாநகராட்சியை சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவரின் கணக்கில் ரூ.2 லட்சத்தை செலுத்தினார். கோபிநாத் கொடுத்த பணத்தை வாங்கிய, வங்கி ஊழியர் சந்தேகத்தின் பேரில் கள்ள நோட்டுக்களை கண்டு பிடிக்கும் கருவியில் அதனை வைத்து சோதனை செய்தார். அப்போது கோபிநாத் கொடுத்த ரூ.2 லட்சத்தில் 132 கள்ள 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து வங்கி நிர்வாகம் சார்பில் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் கண்டோன்மெண்ட் போலீசார் உடனடியாக அந்த வங்கிக்கு சென்று கோபிநாத்தை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. கவுன்சிலரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கள்ள நோட்டுகள் கோபிநாத்துக்கு கிடைத்தது எப்படி, அதனை புழக்கத்தில் விட்டது யார்? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் பரபரப்பு தகவல் வெளியாகும் என தெரிகிறது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.