காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 86): திணறிய திகம்பர் பாட்கே!

கட்டுரைகள் லைஃப் ஸ்டைல்

digambar ramachandra badge - 2026

பம்பாய் நகரத்திற்கு செல்வதை எண்ணி ஷங்கர் கிஷ்டய்யாவிற்கு ஒரே குஷி.இது போன்றதொரு வாய்ப்பு அவருக்கு கிடைத்ததில்லை அல்லவா. ஆனால்,அந்த காலத்தில், புறநகர் பகுதியாக இருந்த தாதரில் இறங்குவதை அறிந்தவுடன், ‘’ இங்கு ஏன் இறங்குகிறோம் ‘’ என்று திகம்பர் பாட்கேவிடம் கேட்டார் அவர்.

‘’ ஏன் என்றால் இங்குதான் ‘’ மால் ‘’ லை நாம் டெலிவரி செய்ய வேண்டும் ‘’ என்றார் பாட்கே. ஆப்தேயும்,நாதுராமும் அதே ரெயிலில் பயணித்ததை ,அவர்கள் அறிந்திருக்கவில்லை. மேலும்,ரெயில்வே ப்ளாட்ஃபார்மிலும் அவர்களைச் சந்திக்கவில்லை.

தாதர் ரெயில் நிலையத்திலிருந்து ஹிந்து மஹா சபை அலுவலகத்திற்கு,திகம்பர் பாட்கேயும்,ஷங்கர் கிஷ்டய்யாவும் நடந்தே சென்றனர். ஹிந்து மஹா சபை அலுவலக கட்டிடம் மூன்று அடுக்குக் கொண்டது. பிரதான ஹால் முதல் மாடியில் அமைந்திருந்தது.

இங்குதான்,கட்சி உறுப்பினர்கள் வந்து அமர்ந்து பத்திரிகைகள் படிப்பது,உரையாடுவது, சில நேரங்களில் இரவு நேரங்களில் தரையில் படுத்துறங்குவது ஆகியவற்றை செய்து வந்தனர்.

தரை தளத்திலிருந்து,முதல் மாடிக்கும்,வேறு தளங்களுக்கும் செல்ல பொதுவான ஒரு படிக்கட்டுதான் இருந்தது. அங்கு ஆப்தேயும்,நாதுராமும் இல்லாததை கண்ட திகம்பர் பாட்கே சிறிது நேரம் காத்திருப்பதென்று தீர்மானித்தார். ஒரு அரை மணி நேரம் கழிந்த பின்,டீ சாப்பிட்டு விட்டு வரலாம் என்று தீர்மானித்து கிளம்பிய போது, ஹாலுக்குள் ஆப்தேயும் நாதுராமும் நுழைந்தனர்.

பாட்கேவிற்கு கொடுப்பதற்கு,பணம் திரட்டுவதற்கு,ஆப்தேயிற்கு நேரம் இல்லை. சிறிது நேரம் அங்கே உட்கார்ந்து அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அதன் பிறகு,திகம்பர் பாட்கே அன்றைய இரவிற்கு,அந்த வெடிப்பொருட்கள் பையை எங்காவது பாதுகாப்பாக வைத்திருந்து விட்டு,மறுநாள் காலையில் கொண்டு வர வேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டது.

திகம்பர் பாட்கே பையை எடுத்துக் கொண்டு,ஒரு டாக்ஸியில் புலேஸ்வரர் கோயில் வளாகத்திலிருந்த திக்ஷித் மஹராஜ் வீட்டிற்கு சென்றார். அப்போது நேரம் இரவு பத்து மணியை கடந்து விட்டப்படியால்,திக்ஷித் மஹராஜ் படுக்கச் சென்று விட்டார்.

ஆனால் பாட்கே,பலமுறை அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தபடியால்,திக்ஷித்தின் வேலையாள் நாராயண் அவருக்கு நல்ல பழக்கம். நாராயணிடம் பையைக் கொடுத்து,பத்திரமாக வைத்திருக்கும்படியும்,அடுத்து நாள் காலையில் வந்து பையை பெற்றுக் கொள்வதாயும் கூறி திரும்பினார்.

திகம்பர் பாட்கேயையும்,ஷங்கர் கிஷ்டய்யாவையும்,மீண்டும் ஹிந்து மஹாசபை அலுவலகத்திற்கு அழைத்து வந்த ஆப்தே,அவர்களை அங்கேயே படுத்துக் கொள்ளும்படி கூறி விட்டு,காலையில் சந்திப்பதாகக் கூறி விடைப்பெற்றார்.

திகம்பர் பாட்கேயையும்,ஷங்கர் கிஷ்டய்யாவையும்,ஹிந்து மஹா சபை அலுவலகத்தில், ஆப்தே விட்ட போது நடு இரவை கடந்து விட்டிருந்தது. அவர்கள் அந்த பிரதான ஹாலில்,நுழையும் போது,பெரும்பாலும் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன.

அங்கு,அந்த ஹாலில், மங்கிய வெளிச்சத்தில்,மூன்று அல்லது நான்கு பேர் படுத்திருந்ததை கண்டனர். அவர்களில் ஒருவர் எழுந்து உட்கார்ந்து,’’ பாட்கே கப் ஆயே?‘’ ( பாட்கே எப்போது வந்தீர்கள் ? ‘’ ) என்று கேட்டார்.

இதுதான் திகம்பர் பாட்கேயின் மாறுவேடத்தின் லட்சணம். கேள்வி கேட்டவரை உற்று நோக்கிய பாட்கே ‘’ நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள் ‘’ என்று கூறினார்.

ஆனால் சில வினாடிகளுக்குள் ,கேள்வி கேட்டவர்,மதன்லால் பஹ்வா என்று அடையாளம் கண்டு கொண்டார். கார்கரே,பஹ்வாவை,தன் கடைக்கு அழைத்து வந்தது அவர் நினைவிற்கு வந்தது.

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.