ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் சிறப்பு!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல் விழாக்கள் விசேஷங்கள்
kumbakonam adhikumbeswarar arudra - 2026

கும்பகோணத்தில் ஸ்ரீஆதிகும்பேஸ்வர சுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் மற்றும் 12 சிவாலய ஸ்ரீநடராஜர் சந்திப்பு உற்சவ விழா நடைபெற்றது.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 26-வது தலமாக, திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்றதாகவும் உலகப் புகழ்பெற்ற மகாமகத் பெருவிழாவின் பிரதான திருக்கோயிலாகவும் விளங்கக்கூடியது ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில்! ஆருத்ரா தரிசன விழாவின்போது இங்கு நடைபெறும் 12 சிவாலய ஸ்ரீநடராஜ பெருமான் சந்திப்பு உற்சவத்தாலும் மேலும் சிறப்பு பெறுகிறது

சிவாலயங்களில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் திருவாதிரையன்று இரவு ஸ்ரீநடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் அதிகாலையில் ஆருத்ரா தரிசனமும் நடைபெறும் சென்னையில் நவ நடராஜர் சந்திப்பு உற்சவமும் அச்சிறுப்பாக்கம் மற்றும் மயிலாடுதுறையில் பஞ்ச நடராஜர் சந்திப்பு உற்சவமும் மன்னார்குடியில் ஸப்த(ஏழு) நடராஜர் சந்திப்பு உற்சவமும் என தமிழகத்தில் சில முக்கிய தலங்களில் மட்டுமே திருவாதிரை உற்சவத்தின்போது இந்த நடராஜர் சந்திப்பு உற்சவம் நடைபெறுகிறது

ஆனால் கும்பகோணத்தில் மட்டுமே 12 சிவாலய ஸ்ரீநடராஜர் சந்திப்பு உற்சவம் நடைபெறுகிறது.

நாதத்திற்கும் நடனத்திற்கும் தலைவனாகிய ஸ்ரீநடராஜ பெருமானை வழிபடுவோர் வாழ்க்கையானது ஆனந்தமயமான நிலையை கொண்டிருக்கும். அவ்வகையில் ஒரே நேரத்தில் 12 சிவாலய நடராஜரை தரிசிப்பது அனேக நலன்களை தருவிக்கும்

இவ்வருட ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில், நேற்று சிறப்பு ஹோமத்துடன் திருக்கோயில் அலங்கார மண்டபத்தில் ஸ்ரீசிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

இன்று அதிகாலை 5 மணி அளவில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது காலை 7 மணி அளவில் இந்திர விமானத்தில் ஸ்ரீசிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீநடராஜப் பெருமானின் இரட்டை வீதி உலா நடைபெறுகிறது!

தொடர்ந்து கும்பேஸ்வரர் கீழ ரதவீதியில் நாகேஸ்வரர் கோயில் காசி விஸ்வநாதர் கோவில் கௌதமேஸ்வரர் கோவில் பாணபுரீஸ்வரர் கோவில் சோமேஸ்வரர் கோவில் அபிமுகேஸ்வரர் கோவில் கோடீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளிட்ட (தேரடி அருகில்) 12 சிவாலய நடராஜர் சந்திப்பு உற்சவம் நடைபெற்றது

இவ்வைபவத்தில் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் நடராஜப் பெருமான் கீழரத வீதியில் கிழக்கு நோக்கி எழுந்தருள, கும்பகோணத்திலுள்ள மகாமகம் தொடர்புடைய இதர பதினோரு சிவாலய ஸ்ரீநடராஜ மூர்த்திகள், ஸ்ரீஆதிகும்பேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலை இரட்டை வீதியாக வலம் வந்து கீழ ரத வீதியை அடைந்த பிறகு, ஸ்ரீஆதிகும்பேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் நடராஜ பெருமானுடன் சந்திப்பு வைபவமும் மரியாதை சம்பிரதாயங்களும் நடைபெறும்.!

இக்காட்சியை பக்தர்கள் அனைவரும் பரவசத்துடன் தரிசித்து வழிபட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.