முடிவு வரும் முன்பே தோல்விக்குப் பொறுப்பேற்ற ராகுல் காந்தி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

rahul gandhi 24 - 2026

மக்களவைத் தேர்தலில் எண்ணப் பட்ட வாக்குகளின் அடிப்படையில் பாஜக., பெரும்பான்மை பெற்றுள்ளது. தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் தோல்விக்கு தாம் பொறுப்பேற்பதாக கூறினார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, `மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களின் முடிவுக்கு நான் சாயம் பூச விரும்பவில்லை. மக்கள் முடிவுக்கு தலை வணங்குகிறேன். மக்கள் அவர்களின் தெளிவான முடிவுகளை கொடுத்துள்ளனர்.

அமேதியில் வெற்றி பெற்றுள்ள ஸ்மிரிதி இரானிக்கும், மோடிக்கும், பாஜக.,வுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்… என்று கூறினார்.

ராகுல் இவ்வாறு கூறிய போது, அமேதி தொகுதியின் முடிவு அறிவிக்கப் படவில்லை. முன்னிலை நிலவரம் தான் வெளியாகியிருந்தது. மேலும் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் எண்ணப் பட வேண்டிய நிலையில், முன்னதாகவே தாமே தோல்வியை ஒப்புக் கொண்டார் ராகுல். மேலும் முறையாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் முன், தாம் தோற்றதாக ராகுல் கூறியதற்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டன.

இந்த செய்தியாளர் சந்திப்பில் மேலும் பேசிய ராகுல், காங்கிரஸின் இந்த தோல்விக்கு முழுவதுமாக பொறுப்பேற்றுக் கொள்கிறேன். காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிப்பதா அல்லது ராஜினாமா செய்வதா என்பதை காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்யும்.

என்னை நோக்கி எத்தனை விமர்சனங்கள், வேறுபாடுகள், அவதூறுகள் எழுப்பப்பட்டாலும் நான் அவற்றை உண்மையான அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன். தொடர்ந்து அன்பு செலுத்துவேன். எங்கே தவறு செய்தோம் என்பது குறித்து விவாதம் செய்ய இது நேரமல்ல! என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.