ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு;  5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு….!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சென்னை

vettu 2 - 2026

அரக்கோணத்தில் பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தப்பி ஓடிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம், பழனிப்பேட்டை, டி.என்.நகர் பகுதியை சேர்ந்தவர் சோமு. இவரது மகன் அன்பு என்ற பரோட்டா (வயது 34). ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இவர் நேற்று காலை பழனிப்பேட்டை இரட்டைகண் வாராவதி அருகே ஆட்டோவை ஓட்டி சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவை வழிமறித்தது.

அதிர்ச்சியடைந்த அன்பு, ஆட்டோவை நிறுத்தியபோது 5 பேரும் அவரை கத்தி மற்றும் அரிவாளைக் கொண்டு வெட்ட வந்தனர்.

சுதாரித்துக்கொண்ட அன்பு அவர்களிடம் தப்பி ஓடினார். அவரை மற்ற 5 பேரும் ஓட, ஓட விரட்டினர். அப்போது அதே பகுதியில் இருந்த சைக்கிள் நிறுத்தும் வாகன காப்பகத்துக்குள் அவர் தஞ்சம் புகுந்தார்.

பின்தொடர்ந்து சென்ற 5 பேர் கும்பல் அவரை அங்கேயே அன்பை சுற்றிவளைத்து கத்தி அரிவாள் கொண்டு தலை, கழுத்து, முகம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சரமாரியாக வெட்டி உள்ளனர்.

இதில் அன்பு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தார். அவரை வெட்டிக்கொன்ற 5 பேரும் ரெயில் நிலையத்துக்குள் ஏறிக் குதித்து தப்பிச்சென்று விட்டனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

தகவல் அறிந்த அரக்கோணம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்–இன்ஸ்பெக்டர் மதியழகன், மஞ்சுநாத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அன்புவின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தப்பிய கொலையாளிகள் யார் என்பதை கண்டறிவதற்காக பழனிப்பேட்டை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் உள்ள பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் தப்பி ஓடிய 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.