சென்னை மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்.
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினாவில் கட்டப்படும் நினைவு மண்டபத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து அடிக்கல் நாட்டினர்.
சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ரூ. 50 கோடியே 80 லட்சம் மதிப்பில் நினைவு மண்டபம் கட்டப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்து இருந்தது. அதன்படி ரூ. 36,806 சதுர மீட்டர் பரப்பளவில் அமையும் ஜெயலலிதா நினைவு மண்டபம், பீனிக்ஸ் பறவை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில், 8 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அருங்காட்சியகமும், 8 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அறிவுசார் மையமும் அமைக்கப்படுகிறது. 9 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் செடிகள், புற்களை கொண்ட பசுமை பகுதியும், ஆயிரத்து 927 சதுர மீட்டர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்படுகிறது.
9 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் நடைபாதைகள், ஆயிரத்து 260 சதுர மீட்டரில் நினைவிடம் அமைக்கப்பட உள்ளது. ஜெயலலிதாவின் நினைவிடம் 15 மீட்டர் உயரத்தில் இருப்பதுடன், 2 ஆயிரத்து 600 சதுர மீட்டர் பரப்பளவில் எம்ஜிஆர் அருங்காட்சியகமும் அமைக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில், அமைச்சர்கள், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.





