ரவுடியிசம் -மண்டையை உடைத்த எம்.எல்.ஏ., தம்பி! வலியில் கதறிய பெண் வன அதிகாரி!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

forest officer anita beaten - 2026ஃபாரெஸ்ட் ரேன்ஞ் அதிகாரி அனிதாவின் மண்டையை உடைத்த டிஆர்எஸ் எம்எல்ஏ.,வின் தம்பி கைது செய்யப் பட்டுள்ளார்.

தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக வன இலாகா அதிகாரி எஃப்ஆர்ஓ அனிதா புகார் தெரிவித்ததை அடுத்து  நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி எம்எல்ஏ கோனேரு கோனப்பாவின் சகோதரர் கிருஷ்ணா ராவும் அவருடைய ஆதரவாளர்களும் நடத்திய தாக்குதலில் தலையிலும் கையிலும் பலத்த காயம் அடைந்தார்  வனத்துறை அதிகாரி! அவர் பின்னர் ஐதராபாத் கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

ஞாயிற்றுக் கிழமை ஜூன் 30 அன்று நடைபெற்ற இந்தத் தாக்குதல் குறித்து அனிதா ஊடகங்களிடம் விளக்கினார்.

அப்போது அவர், எத்தனையோ உற்சாகத்துடன்  நான் இந்த வேலையில் சேர்ந்தேன். ஒரு பெண் என்றுகூட பாராமல் கம்புகளால் என்னை அடித்தது வருத்தமளிக்கிறது! எனக்கு நடந்தது போல் வேறு யாருக்கும் இனி நடக்கக் கூடாது என்றார் கண்ணீருடன்!

அரசியல் செல்வாக்கால்தான் தன்னை அவர்கள் அடித்து துன்புறுத்தினர் என்று வருத்தத்துடன் தெரிவித்தார் அனிதா! மேலும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் குறினார். தனது   பாதுகாப்புக்கு அரசாங்கம் உறுதி அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், விதிகளுக்கு உட்பட்டே, தாம் வனத்துக்குச் சொந்தமான நிலத்தின் பாதுகாப்புக்காகச் சென்றதாகவும்,  நான்கு நாட்களுக்கு முன்பே தான் கிராமத்தில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ததாகவும் அவர் தெரிவித்தார். வனப்பகுதிகளில் அரசு செய்யப் போகும் நிகழ்வு குறித்து,  தாம் பொதுமக்களிடம் விவரித்ததாகவும், அப்போது எந்த மறுப்பும் தெரிவிக்காத கிராமத்தினர் அரசியல் தலைவர்களின் தூண்டுதலால் அவ்வாறு வன்முறையைக் கையில் எடுத்தனர் என்றும்  கூறினார்.

முன்னதாக, ‘கும்ரம்பீம் ஆஸிஷாபாத்’ மாவட்ட காகஸ்நகர் மண்டலத்தில், ‘சர்சாலா’ வில் வனப் பகுதியில் ஞாயிறு அன்று மரக்கன்றுகள் நடுவதற்காக பூமியை சமன்படுத்தச் சென்றனர் வனத்துறை அதிகாரிகள். அப்போது, வனத்துறை அதிகாரிகள் மீது, கோனேரு கிருஷ்ணராவும் அவரது ஆதரவாளர்களும் தாக்குதல் நடத்தினர்.

20 ஹெக்டேர் பரப்பளவுள்ள இடத்தில் மரக்கன்றுகள் நடுவதற்கு ஏதுவாக சமன் செய்ய டிராக்டர்களுடன் சென்ற தன் மீது உள்ளூர் கிராம மக்களை தூண்டிவிட்டு தாக்குதல் நடத்தியதாக அனிதா குற்றம் சாட்டியுள்ளார்.  இந்த தாக்குதலில் தன் தலையிலும் கையிலும் பலத்த காயமடைந்த அனிதா, ஹைதராபாத் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், டிஆர்எஸ்., கட்சியின் எம்எல்ஏ கோனேரு கோனப்பா கிராம மக்களை தன் இருப்பிடத்துக்கு வரவழைத்து ஊடகங்களிடம் எப்படி எல்லாம் பேச வேண்டும் என்று பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அந்த வீடியோவும் இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

வனத்துறை அதிகாரி தங்கள் நிலத்திற்கு அவர்களை செல்ல விடாமல் தடுத்ததாக குற்றச் சாட்டு கூறும் படி பாடம் எடுத்தார் அவர்.  தம்பி செய்த தவறை மூடி மறைக்க முயற்சிப்பதாக எம்எல்ஏ.,வை சமூக வலைதளங்களில் வாரிச் சுருட்டினார் நெட்டிசன்கள்!

இதை அடுத்து நிலைமை விபரீதம் ஆகவே, காவல்துறையினர் எம்எல்ஏ வின் தம்பியையும் உடந்தையாக இருந்த 12 பேரையும் கைது செய்துள்ளதாக செய்தி வெளியானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.