திமுக., தொடர்ந்த தேசதுரோக வழக்கு: வைகோ.,வுக்கு ஓராண்டு சிறை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

vaiko pic - 2026

திமுக தொடர்ந்த தேச துரோக வழக்கில் வைகோ.,வுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப் பட்டுள்ளது.  தேச துரோக வழக்கில் வைகோ குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்க பட்டது.

இந்திய இறையாண்மை எதிராக பேசியதாக வைகோ மீது தொடரப்பட்ட வழக்கில் வைகோ குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப் பட்டதுடன், தேச துரோக வழக்கில் வைகோவிற்கு ஒரு வருடம் சிறை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டது.

இதனிடையே இந்த தீர்ப்பால், வைகோ.,வுக்கு எம்பி பதவி ஏற்க சட்டப்படி தடையேதும் இல்லை. ஆனால் நடைமுறையில் சிக்கல் நிறைந்துள்ளது என வழக்கறிஞர் தமிழ்மணி கருத்து தெரிவித்தார்.

இருப்பினும், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ள வாசகத்தில் பிழை உள்ளது, எனவே தனக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்று, நீதிபதியிடம் வைகோ கோரிக்கை விடுத்தார்.  குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நான் ஒரு போதும் கோரவில்லை என்றும், வைகோ நீதிமன்றத்தில் வாதம் செய்தார்.  வைகோவின் வாதத்தை தொடர்ந்து தீர்ப்பு நிறுத்தி வைக்கப் பட்டது.

கடந்த 2009ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற வைகோ, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி சாந்தி விசாரித்தார். வழக்கில் குற்றச்சாட்டு பதிவு, 9 அரசு தரப்பு சாட்சிகளிடம் சாட்சி விசாரணை மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் வைகோவிடம் கேள்விகளைக் கேட்டு பதில் பதிவு செய்யும் நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்தன.

இதனையடுத்து காலை 10.30 மணி அளவில் வைகோ மீதான தேச துரோக வழக்கில் தீர்ப்பு அளிக்கப் பட்டது.

மாநிலங்கள​வை தேர்தலில் வைகோ போட்டியிட உள்ள நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது, வைகோவுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. ஒருவேளை வைகோவுக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவர் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கும்.

இருப்பினும், வைகோ தற்போது தனக்கு அதிகபட்ச தண்டனை வழங்குமாறு கோரியிருப்பதால், அது குறித்தும் பரபரப்பான விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.