தள்ளுபடியாகும் அச்சத்தால் ஜாமீன் மனு விவகாரத்தில் பின்வாங்கிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி

சற்றுமுன்

திருநெல்வேலி: நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேளாண் தலைமைப் பொறியாளர் செந்தில்குமாரின் ஜாமீன் மனுவை நெல்லை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை அடுத்து, ஜாமீன் மனு தாக்கல் செய்யும் முடிவில் இருந்த முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் இதற்காகத் தயங்கக் கூடும். என்று தெரிகிறது. நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் தமிழக வேளாண் துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண் தலைமைப் பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் செந்தில்குமார் சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கு அரசுத் தரப்பு வழக்குரைஞர் ஆட்சேபம் தெரிவித்து, தற்போது வழக்கு ஆரம்ப நிலையில் இருப்பதால் செந்தில் குமாருக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும் என்று கூறினார். இதையடுத்து நீதிபதி நசீர் அகமது, செந்தில் குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். செந்தில் குமார் ஜாமீன் மனு தாக்கல் செய்தபோது, அக்ரி கிருஷ்ணமூர்த்தி அதற்கான விளைவை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தாராம். அதனால் அவர் அப்போது ஜாமீன் மனு தாக்கல் செய்யாமல் இருந்தார். செந்தில் குமாருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தால், தானும் தாக்கல் செய்யலாம் என்று எண்ணியிருந்த அக்ரி.கிருஷ்ணமூர்த்தி இப்போது அந்த யோசனையில் இருந்து பின்வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.