சபரிமலை நிறைபுத்தரிசி பூஜைக்கு… அச்சங்கோவிலில் இருந்து சென்ற நெற்கதிர்கள்!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்

sabarimalai niraiputharisi3 - 2026

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அச்சன் கோவில் ஐய்யப்பன் கோவில் நிலத்தில் இருந்து நெற்கதிர் அறுவடை செய்து, செவ்வாய்க்கிழமை இன்று காலை நெல்லை மாவட்டம் கோட்டைவாசல் கருப்பசாமி கோயில், ஆரியங்காவு ஐயப்பன் கோவில்களில் பக்தர்கள் அதனை வரவேற்று சபரிமலைக்கு அனுப்பி வைத்தனர். திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர், ஐயப்ப சேவா சங்கத்தினர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜைக்காக அச்சன் கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட நெற்கதிர்களுக்கு மக்கள் வழி நெடுகிலும் வரவேற்பு அளித்தனர்.

sabarimalai niraiputharisi1 - 2026சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும். விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கவும் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி வயல்களில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்து ஐயப்பஸ்வாமிக்கு படைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.

பூஜிக்கப்பட்ட நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப் படுகிறது. பிரசாத நெற்கதிர்களை வீடுகளில் வைத்திருந்தால் வீட்டில் அனைத்து செல்வங்களும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நிறைபுத்தரிசி பூஜை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடைபெறுகிறது. இதற்காக கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. நிறைபுத்தரிசி பூஜையை முன்னிட்டு, மாலை நடைதிறந்து தீபம் ஏற்றப் பட்டு, வேறு பூஜைகள் எதுவும் இல்லாமல் நடை இரவு 10 மணிக்கு சாத்தப்படும்.

sabarimalai niraiputharisi2 - 2026நெற்கதிர்கள் பிரசாதம் நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனமும், அபிஷேகமும் நடைபெறும். தொடர்ந்து மேல்சாந்தி நெற்கதிர்களை தலையில் சுமந்து, கோயிலை வலம் வந்து கோயிலுக்குள் கொண்டு செல்வார். தந்திரி சிறப்பு பூஜைகள் நடத்திய பின்னர், நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

இந்த நெற்கதிர்கள், செங்கோட்டை அருகில் உள்ள கேரளம் கொல்லம் மாவட்டம் அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் இருந்து இன்று காலை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தலைமையில் தேவசம்போர்டு அதிகாரிகள், ஆலய மேல்சாந்திகள் ஆகியோர் நெற்கதிர்களை அறுவடை செய்தனர்.

sabarimalai niraiputharisi4 - 2026நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக கோட்டைவாசல் கருப்பசாமி கோவிலில் பூஜைகள் செய்யப்பட்டு, தொடர்ந்து ஆரியங்காவு ஐயப்பன் கோவிலுக்கு நெற்கதிர்கள் எடுத்துச் செல்லப்பட்டு, பூஜைகள் செய்யப் பட்டன. பின்னர் அவை சபரிமலைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதற்கு வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.