
அரிசி கூழ் வடாம்
தேவையானவை :
புது பச்சரிசி – 4 ஆழாக்கு,
ஜவ்வரிசி – 1 ஆழாக்கு,
ப. மிளகாய் – 20 அல்லது 25,
உப்பு – தேவையானது,
பெருங்காயம் – சிறிதளவு,
எண்ணெய் – 4 டீஸ்பூன்.
செய்முறை :
பச்சரிசியை நன்கு கல்லரித்து, களைந்து, தண்ணீரில் ஊறப்போடவும். நன்கு ஊறியதும், மைய அரைக்கவும். தேவையான உப்பைப் போட்டுக் கலக்கவும். இதை இரண்டு நாள் புளிக்க வைக்கவும். மூன்றாம்நாள் காலை ஜவ்வரிசியை ஊறப் போடவும். ப. மிளகாய், பெருங்காயம், சிறிதளவு உப்பு (பச்சை மிளகாய் அரைபடுவதற்காக) எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்து மாவில் கலக்கவும். அடிகனமான, பாத்திரத்தில் அரிசி மற்றும் தண்ணீர் 1:2½ என்ற விகிதத்தில், தண்ணீரைக் கொதிக்க விடவும். கொதிக்கும் நீரில் எண்ணெய் விடவும். அதில் ஊறிய ஜவ்வரிசியைப் போட்டு வேகவிடவும். தண்ணீரின் அளவு ஜவ்வரிசிக்கும் சேர்த்துத்தான் வைக்க வேண்டும். அதாவது அரிசி + ஜவ்வரிசி = 5 ஆழாக்கு, தண்ணீர் 12½ ஆழாக்கு. ஜவ்வரிசி நன்றாக வெந்ததும், அடுப்பை நிதானமாக எரிய விட்டு, மாவை (தோசை மாவை விட நீர்க்கக் கரைக்கவும்) கொஞ்சம் கொஞ்சமாக, முழுவதும் ஊற்றி கட்டியில்லாமல் கிளறவும். தண்ணீர் போதவில்லையென்றால், நடுவே சிறிது ஊற்றிக் கொள்ளலாம். மாவு ‘பளபள’வென்று கையில் ஒட்டாமல் வருவதுதான் பதம். மாவை இரவே கிளறி வைத்துக் கொண்டு விட்டால், காலையில் வெயில் ஏறுமுன் பிழிய ஏதுவாக இருக்கும். கையும் சுடாது. கிளறிய மாவை, தேவையான அச்சில் (ஓமப்பொடி, தேன்குழல் அல்லது கட்டை வடாம் ) போட்டு, பிளாஸ்டிக் ஷீட்டில் பிழியவும். இரண்டு நாள் நல்ல வெயிலில் காயவைத்து எடுக்கவும். கட்டை வடாமென்றால் இன்னும் ஒருநாள் கூட காயவைக்க வேண்டும். காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தால், வருடத்திற்கும் உபயோகிக்கலாம். மாவை, புளிக்க வைக்காமல், எலுமிச்சம் பழம் பிழிந்தும் தயாரிக்கலாம். ஆனால் இயற்கைப் புளிப்பு, சுவையையும் வடாமின் நிறத்தையும் அதிகரிக்கும்.