
அஸ்ஸாம் மாநிலத்தின் வீரச் சின்னமாக விளங்குபவள் ‘கனக்லதா பர்வா’ என்ற இளம் பெண். இவள் ‘கோஹ்பூர்’ என்ற நகரில் உள்ள ‘போரங்பாரி’ என்ற கிராமத்தில் அன்றைய பிளவு படாத ‘தராங்’ மாவட்டத்தில் 1924, டிசெம்பர் 22ல் பிறந்தார். தற்போது இது ‘சோனிட்பூர்’ மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது. கனக்லதாவின் தந்தை கிருஷ்ணகாந்த் பர்வா. தாயார் கர்னேஸ்வரி பர்வா.
கனக்லதாவின் தாத்தா, ‘தராங்’ மாவட்டத்தின் வீரத்தில் சிறந்த வேட்டைக்காரராக புகழ் பெற்றிருந்தார். இவரின் மூதாதையர் ‘டோலகாரியா பர்வா’ என்ற ‘அஹோம்’ அரச பரம்பரையைச் சேர்ந்தவர்கள். பின்னாளில் இந்த வம்சத்தவர், ‘டோலகாரியா’ என்ற அரச பட்டத்தை விட்டாலும், ‘பர்வா’ என்ற பட்டப் பெயரை விடாமல் தம் பெயரோடு இணைத்துக் கொண்டுள்ளனர்.
கனக்லதாவின் ஐந்தாவது வயதில் அவள் தாயார் மரணமடைந்தார். தந்தை மறு மணம் புரிந்த போதிலும், அவரும் கனக்லதாவின் பதின்மூன்றாவது வயதில் காலமானார். மூன்றாம் வகுப்பு வரை பள்ளி சென்று படித்த கனக்லதா, தன் சின்னஞ்சிறு தம்பி, தங்கைகளை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு வந்து சேரவே, படிப்பை விட்டு நீங்கினாள்.
சிறுமியாகிய கனக்லதா, தன் தம்பி தங்கைகளை கவனமாக வளர்க்க வேண்டிய பெரும் பொறுப்பை தன் சிறு தோள்களில் சுமந்தவளாகையால் இயல்பாகவே பொறுப்புணர்ச்சியும், தியாக குணமும் அவளிடம் மிகுந்திருந்தது. இந்த பொறுப்பும் கடமை உணர்வும் தேசத்திற்காக உயிர் துறக்கும் அளவுக்குத் தீவிரமாக இருக்கும் என்று அன்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
பாரதத்தின் அனைத்து இடங்களையும் போலவே அஸ்ஸாமும் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்திற்கு தன்னை தயார் செய்து கொண்டிருந்தது. சுதந்திர போராட்ட வீரர்களின் வீரத்தையும் தைரியத்தையும் பார்த்த கனக்லதா தானும் தன் பங்கு சேவையை நாட்டுக்கு ஆற்ற நினைத்தாள். அந்த நற்சிறுமி அங்கு உற்சாகமாக உழைத்து வந்த ‘ஆசாத் ஹிந்து’ படையில் சேர விரும்பினாள். ஆனால் பதினேழு வயதே நிரம்பியிருந்த அவளை அதில் சேர்க்க மறுத்து விட்டனர். அதனால் கனக்லதா வீட்டில் யாருக்கும் தெரியாமல், ‘மிருத்யு பஹினி’ என்றழைக்கப்பட்ட, தீவிரத்தோடு போராடும் இளைஞர்களுக்கான மரணப் படையில் தன் பெயரை ரகசியமாக பதிவு செய்தாள்.
காந்திஜியின் அறைகூவலை ஏற்று அஸ்ஸாமின் புரட்சி வீரர் ‘ஜ்யோதி பிரசாத் அகர்வால்’ தலைமையில் தராங் மாவட்டம், ஒத்துழையாமை இயக்கத்தில் தன் பங்கை ஆற்றத் தயாரானது. கிராமக் காவல் நிலையத்தில் அகங்காரம் பிடித்த ஆங்கிலேயர்கள் தம் கௌரவமாக நினைக்கும் ஜார்ஜ் கொடியை இறக்கி விட்டு இந்திய தேசிய கொடியை ஏற்றுவதாக முடிவிடுத்தது. அதில் தீவிரமாக இறங்கியது மரணப் படை என்ற இளைஞர் கூட்டம்.
இளம்பெண் கனக்லதா விடியலில் எழுந்து எப்போதும் போலவே வீட்டு வேலைகளை முடித்தாள். தன் உடன் பிறந்தோரோடு அமர்ந்து உணவு அருந்தினாள். அவர்களை நல்ல பிள்ளைகளாக இருக்கும்படி அறிவுறுத்தினாள். உயிரோடு திரும்புவோமா இல்லையா என்று தெரியாத நிலையில் அச்சிறுமி வீட்டை விட்டு வேறு ஏதோ வேலையாகச் செல்பவள் போல் கிளம்பினாள். என்ன துணிவு! நினைத்தாலே இதயம் துடிக்கிறது. நெஞ்சு விம்முகிறது.
‘செய் அல்லது செத்து மடி’ என்பதே அந்த மரணக் குழுவின் கோஷமாகவும் உயிரின் மூச்சாகவும் இருந்தது. 1942, செப்டம்பர் 20 ம் தேதி மிருத்யு பகினிப் படை, அங்கிருந்த கிராம போலீஸ் ஸ்டேஷனில் தேசியக் கொடியை ஏற்றத் தீர்மானித்தது.
ஆயுதம் எதுவுமின்றி அஹிம்சை வழியில் ஊர்வலமாகச் சென்றனர் சுதந்திர போராட்ட வீரர்கள். தேசியக் கொடியைக் கையில் ஏந்தி கனக்லதா பர்வா அதற்குத் தலைமை வகித்தாள். ‘ரெபாடி மஹன் சாம்’ என்ற போலீஸ் அதிகாரி அவர்களைத் தடுத்தார். பெண்களின் படையை ஊர்வலத்தின் பின்னால் செல்லும்படி எச்சரித்தார். ஆனால் கனக்லதா அதற்குச் சம்மதிக்க வில்லை. “பெண் வீராங்களைகள் எவ்விதத்திலும் சளைத்தவரல்லர். தேவையானால் எங்கள் இன்னுயிரையும் இழக்கத் தயாராக இருக்கிறோம்” என்று உணர்ச்சி பொங்கக் கூவினாள். அச்சிறு பெண்ணின் கூக்குரல், ஓங்காரம் போல் படையின் பிற வீரர்களிடம் எதிரொலித்தது. தம் தலைவியின் வீரம் அவர்களின் உற்சாகத்தை மேலும் தூண்டவே துணிந்து நடை போட்டனர் வீரர்கள்.
“கலைந்து சென்று விடுங்கள். இல்லாவிடில் கடுமையான விளைவுகளை எதிர் கொள்ள வேண்டி வரும்” என்று எச்சரித்தார் கையில் துப்பாக்கி ஏந்திய காவல் அதிகாரி.
“அஹிம்சை வழியில் எங்கள் போராட்டத்தை நடத்துகிறோம். மகாத்மா காந்திஜியின் அறிவுரைப்படி காவல் நிலையத்தில் எங்கள் தேசியக் கொடியை ஏற்றியே தீருவோம். பின்வாங்க மாட்டோம். அறவழிப் போராட்டம் வெல்க! வெல்க!” என்று தம்மைத் தடுத்த காவல் அதிகாரியிடம் துணிந்து சவால் விட்டாள் கனக்லதா. எல்லையற்ற தைரியமும் தியாக உணர்வும் இருந்தாலன்றி அத்தகைய துணிச்சல் வந்திராது.
தன் நெஞ்சைக் குறி பார்த்த துப்பாக்கியை துரும்பென விலக்கி, “எங்கள் உடலை உன் குண்டு துளைக்கலாம். ஆனால் எங்கள் உள்ளம் இரும்பாலானது. நாட்டு விடுதலைக்கான எங்கள் கடமையை முடிக்காமல் விடமாட்டோம்” என்று பதிலடி கொடுத்தாள் பதினேழு வயது பர்வா.
அவள் உதிர்த்த அச்சொற்கள் அங்கு சூழ்ந்திருந்த போராட்ட வீரர்களுக்கு உயிர் பறிக்கப்படலாம் என்று அஞ்ச வேண்டிய தருணத்திலும் அளவுக்கு மீறிய பலமும் தைரியமும் தந்தன. ஒரு கொடி தவிர எந்த ஒரு ஆயுதமும் பற்றியிராத அந்த ஊர்வலத்தை நோக்கி சுட்டு விளையாடியது பிரிட்டிஷ் அரசு. காவல் துறையைச் சேர்ந்த ‘கோகல் சிபாயி’ என்ற கான்ஸ்டபிள் சுட்ட துப்பாக்கியின் குண்டு கனக்லதாவின் நெஞ்சைக் குறிபார்த்து துளைத்தது. மலர் மங்கை மண் சாய்த்தாள். ஆனால் கொடியின் பிடியை மட்டும் விடவில்லை. தன் அருகில் நின்றிருந்த ‘முகுந்தா காகடி” என்ற இளைஞரிடம் கொடியைக் கொடுத்து உயிர் துறந்தாள். கொடியைப் பிடித்திருந்த காரணத்திற்காக முகுந்தா காகடியையும் சுட்டு வீழ்த்தியது ஆங்கில அரசு.
ஆனால் அதற்காக அந்த இளைஞர் படை சற்றும் சளைக்க வில்லை அவ்விருவரின் உயிர்த் தியாகம் மீதியிருந்த வீரர்களிடம் சொல்லொணாத வீரத்தையும் தைரியத்தையும் அளித்தது. சுதந்திரத் தீ அவர்கள் இதயங்களில் முன்னெப்போதையும் விட மூண்டு எழுந்தது. தொடர்ந்து வீரத்தோடு முன்னேறினர். போலீசின் கட்டுப்பாட்டையும் அடக்குமுறையையும் மீறி தேசியக் கொடியை காவல் நிலையத்தின் மீது ஏற்றினர்.
இந்த இளைஞர்களின் தியாகமும் எழுச்சியும் குவிட் இந்தியா மூவ்மெண்ட்டுக்கு எல்லையற்ற புத்துணர்ச்சியும் வேகமும் அளித்தது. அதன் விளைவாக வெள்ளையர்கள் 1947 ல் ஒட்டு மொத்தமாக நம் நாட்டை விட்டு வெளியேறினர்.
கனக்லதா பர்வா மற்றும் முகுந்தா காகடி பெயரில் நாடகங்களும் நாட்டுப் பாடல்களும் அசாம் கிராம மக்களின் அன்றாட வாழ்வில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளன. கனக்லதா பர்வா என்ற திரைப்படம் கூட வெளிவந்துள்ளது.
‘கனக்லதா பர்வா மெமோரியல்’ அஸ்ஸாமில் ‘பர்காங்’ என்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ளது. அங்கு ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று அவளுடைய வீரமும் தியாகமும் நினைவு கூறப்பட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ‘கனக்லதா மாடல் பள்ளி’ யில் பயிலும் மாணவர்கள் அவளுடைய வீரத்தை மனதில் தாங்கி கல்வி அறிவு பெற்று வருகின்றனர்.

அசாம் தேஜ்பூரில், ‘கனக்லதா உத்யான்’ எனப்படும் ‘ராக் கார்டன்’ ல் அவள் சுடப்பட்ட நிகழ்ச்சி தத்ரூபமான சிலையாக செதுக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு அவள் மேற்கொண்ட உயிர்த் தியாகத்தை நினைவூட்டும் விதமாக அமைந்துள்ளது. கனக்லதா பர்வா வின் முழு உருவச் சிலை அசாம் கௌரிபூரில் 2011 ல் திறக்கப்பட்டது.
இந்திய கடற்படையின் ரோந்துக் கப்பல் ‘The Fast Patrol Vessel ICGS’, ‘கனக்லதா பர்வா’ என்று பெயரிடப்பட்டு 1997 முதல் இந்திய கடற் படையில் இணைக்கப் பட்டது. வெகு சிறப்பாக பணியாற்றிய அந்த எல்லை பாதுகாப்பு கப்பலுக்கு தற்போது ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜான்சி ராணி, பிரான்ஸ் நாட்டின் ஜோன் ஆப் ஆர்க் போன்ற வீராங்கனைகளுக்கு எந்த விதத்திலும் சளைத்தவரல்ல சிறுமி கனக்லதா பர்வா. ஆனால் அவள் வீரமும் தியாகமும் அஸ்ஸாம் மாநிலம் தாண்டி நாடு முழுமையும் இன்னும் உணரப்படாமல் இருப்பது வருத்தமளிக்கும் செய்தியே!
கட்டுரை – ராஜி ரகுநாதன்.



