
பொதுவாக, ஆயில்யம், கேட்டை, மூலம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பெண் பிறந்தால், பெண்ணைப் பெற்றோர் மிகவும் கவலைப்பட்ட காலம் ஒன்று இருந்தது. ஆனால் இப்போது அதெல்லாம் இல்லை. இருந்தாலும் சிலர் இன்னும் பழைய பழக்கங்களை மனத்தில் வைத்துக் கொண்டு யோசித்து ஜோசித்து…தங்கள் பெண், அல்லது பிள்ளைகளுக்கு திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வருவார்கள். கையில் கிடைத்த நல்ல ஜாதகத்தையும் தொலைத்துவிட்டு பிறகு ஏங்குவார்கள்…
உங்கள் பிள்ளைக்கு/பெண்ணுக்கு திருமணம் ஆகவேண்டும் என நினைக்கிறீர்களா?
ஆயில்யம் மாமனாருக்கு ஆகாது
கேட்டை ஜேஷ்டனுக்கு ஆகாது
பெண் மூலம் நிர்மூலம்
பூராடம் நூலாடாது
இப்படியானவற்றை தவிர்த்து விடுங்கள். இதைப் பற்றி கவலை வேண்டாம். ஒரிஜினல் அர்த்தம் மாறிவிட்டது.
ஆயில்யம் கேட்டை இரண்டும் புத்திசாலித்தனம் அதிகம். நேர்மை அதிகம். தப்பு செய்தது மாமனாரோ, மூத்த மைத்துனரோ தைரியமாக கேள்வி கேட்பாள் அதனால் அவர்களுக்கு அவள் ஆகாதவளாக வேண்டாதவளாக போய்விடுவாள் என்பதைத்தான் திரித்து அவர்கள் இறந்து விடுவார்கள் என்று கூறிவிட்டார்கள்.
பெண் மூலம் நிர்மலம். நிர்மலம் என்றால் மிக சுத்தமானவள். மனம் தூய்மையாய் இருக்கும் என்பதை நிர்மூலம் என்று சொல்லிவிட்டார்கள்.
பூராடம் – பெண் உழைக்க வேண்டிய அவசியம் இருக்காது. தங்கத்தில் கனமான தாலி அணிந்து அது ஆடாமல் இருக்கும்படியாக சகல சௌபாக்யத்துடன் இருப்பாள்.
இப்படி நக்ஷத்திரங்களின் உண்மையான அர்த்தத்தை அனர்த்தமாக்கி பலருடைய வாழ்க்கையே வீணாகிவிட்டது. இனிமேலும் பெற்றோர்களே இப்படி பத்தாம்பசலியாக இருக்காதீர்கள்.
– ஜோதிடர் லக்ஷ்மி நரசிம்மன்



