
- மன்சூர் கான்
பாரிஸ் தாக்குதல்கள் முதல், கைகளை வெட்டிய கேரளச் சம்பவம் வரை!
பயங்கரவாத அமைப்புகளை வேரறுக்க வேண்டியதன் அவசியம்!
“உள்ளே எதிரி இல்லாதபோது, வெளியே உள்ள எதிரிகள் உங்களை காயப்படுத்த முடியாது” – வின்ஸ்டன் சர்ச்சில்
2020 அக்டோபரில், இறைத்தூதரின் உருவம் என்று கூறி, வரையப்பட்ட ஓர் ஓவியத்தை தனது மாணவர்களுக்குக் காட்டியதற்காக பிரான்ஸ் நாட்டின் பாரீஸில், சாம்வல் படி என்ற 47 வயது ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டார். அதுவும், பள்ளியின் வாசலிலேயே அவரது தலையை பயங்கரவாத அமைப்பு ஒன்று, துண்டித்து வன்முறையாட்டம் ஆடியது. பொதுமக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் நடைபெற்றது! அத்தனை பேர் பார்த்துக் கொண்டிருந்த போதும் தலையை துண்டித்தவனின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை! இதனை பிரெஞ்சு பத்திரிகை செய்தியாக வெளியிட்டு அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தது. மத அடிப்படைவாத பயங்கரவாதிகளின் கோர முகத்தை உலகம் அன்று கண்டு மிகப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
இதேபோன்ற காரணங்களைச் சொல்லி, இந்தியாவிலும் வன்முறைச் செயல்களை மத அடிப்படைவாத வன்முறைகளுக்குப் பெயர்போன அமைப்பான PFI (பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா) நடத்தி இருந்தது. இறைத்தூதரைப் பற்றி அவதூறாகக் கருத்து தெரிவித்தார் என்று கூறி, கேரளத்தில் பேராசிரியரான டி.ஜே ஜோசப்பின் கையை PFI அமைப்பினைச் சார்ந்தவர்கள் துண்டித்தார்கள். பாரீஸ் சம்பவத்தைப் போலவே இதிலும், இதைச் செய்தவர்களின் முகத்திலும் எந்தவிதமான சலனமோ வருத்தமோ இல்லை. அவர்கள் நன்கு மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் என்பது தெளிவாகவே வெளித் தெரிந்தது.
இந்த இரு சம்பவங்களுக்கும் இடையிலிருந்த ஒரே வித்தியாசம், இந்தச் சம்பவங்கள் நடைபெற்ற நாடுகள்தான்! முதற் சம்பவம் நாகரீக முன்னேற்றம் கண்டதாக உலக நாடுகளால் பார்க்கப் படும் பிரான்ஸ் நாட்டில்! அடுத்த சம்பவம் இன்னமும் பழைமைவாதம் ஒட்டிக் கொண்டிருப்பதாக உலக நாடுகளால் பார்க்கப் படும் இந்தியாவில்.
மேற்கு ஐரோப்பிய நாடான பிரான்ஸில் நடைபெற்றதால் அந்த முதற் சம்பவம் உலகத்தில் உள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, ஆனால், கேரளாவில் நடந்ததைப் பற்றி யாரும் பெரிதாகப் பேசவில்லை. இந்த வன்முறைகளைக் கண்டித்து பி.எஃப்.ஐ.,க்கு எதிராக இந்தியாவில் மக்கள் பெருங்குரல் எழுப்பாததால் அவர்கள் மேலும் மேலும் குற்றங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். NSG கமாண்டோவை கொலை செய்தது, லவ் ஜிஹாதை ஊக்குவித்தது, அரசியல் கொலைகள் பல செய்தது, டெல்லியில் நடைபெற்ற கலவரத்திற்கு முக்கியமான பின்புலத்தில் இருந்தது போன்ற பல சம்பவங்களை பயமின்றி அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள்.
பாரிஸ் தலை துண்டிப்பு சம்பவம் உலமாக்கள், முஸ்லிம் தலைவர்கள், குறிப்பாக இந்திய மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது இஸ்லாத்திற்கு எதிரானது என மதகுருமார் சிலர் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்தனர். அதுபோல், பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே பிறர் மீதான அன்பு குறித்தும், மத கலாசார சகிப்புத் தன்மை குறித்தும் அறிவுறுத்தவேண்டும். இதுபோன்ற வன்முறைச் செயல்கள், ஒரு நாகரீக சமுதாயத்தில் முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டியதையும், அமைதியான வாழ்க்கைக்கு எதிரானது என்பதையும் இளம் தலைமுறையினருக்கு எடுத்துக் கூற வேண்டிய நேரம் இது.
ஆனால் PFI போன்ற பயங்கரவாத அமைப்புகள், குர்ஆனை விட சமூக ஊடகங்களை அதிகம் நம்பும் இளைஞர்களின் மனத்தில் தொடர்ந்து நஞ்சை விதைக்கிறது. இத்தகைய தவறான சித்தாந்தத்தை எதிர்க்க மதநூல்களில் கூறப்பட்ட, நீதிபோதனைகள் பற்றி மட்டும் தெளிவு ஏற்படுத்தினால் போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. நீதியைக் கூறும் போதனைகளுக்கு மாற்று இல்லை என்றாலும் பயங்கரவாதத்தைப் பரப்பும் அமைப்புகளைக் கட்டுப்படுத்த உடனடியான தகுந்த நடவடிக்கைகள் தேவை. PFI மீதான தடை என்பது, அந்த அமைப்பின் மூலம் பயங்கரவாதத்தைப் பரப்புவதை நிறுத்துவதற்கான முதல் படியாக அமையக் கூடும்.
குர்ஆன் (2:193-194) – முஸ்லிம்கள் அனைவரும் போரின் போது மட்டுமே சண்டையிட வேண்டும் என்றும் போரின்போது ஒரு எதிரி மன்னிப்பு கேட்கும் பட்சத்தில் மன்னிப்பு அவசியம் வழங்குமாறும் குர்ஆன் அறிவுறுத்துகிறது. PFI குரானில் குறிப்பிட்டுள்ள போதனைகளைப் பின்பற்றுகிறதா அல்லது அதிகாரத்தை பெற அனைத்து தவறுகளையும் செய்து தாந்தோணித்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறதா என்பதை இந்திய முஸ்லிம்கள் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்ளவேண்டும்.
-மன்சூர் கான், எழுத்தாளர் மற்றும் சூபி இஸ்லாமிக் போர்ட் இன் நிறுவனர் & தேசியத் தலைவர்