- கு.அண்ணாமலை, (மாநிலத் தலைவர், பாஜக.,)
தமிழ்நாடு மாநில அரசின் ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்துவதில் நடைபெற்றுள்ள ஊழல் தொடர்பாக மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதில், தொடர்ச்சியாக நடைபெறும் ஊழல் குறித்து, தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில், மாண்புமிகு தமிழக ஆளுநருக்கு சமர்பித்த அறிக்கையின் அடிப்படையில், இந்தக் கடிதத்தை உங்களுக்கு வரைகிறேன்.
நவம்பர் 21, 2022 அன்று, திருவண்ணாமலை சேத்துப்பட்டில் உள்ள இந்திரவனம் கிராமத்தைச் சேர்ந்த திரு.முரளி கிருஷ்ணன், தனது கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்துவதில் முறைகேடுகளை சமூக ஊடகத்தில் எடுத்துக் காட்டினார்.
அவுட்லெட் குழாயை மட்டும் பதித்த ஒப்பந்ததாரர்களுக்கு, அதிகாரிகள் பணி நிறைவுச் சான்றிதழ் வழங்கியதை ஆதாரங்களுடன் தவறு என்று நிரூபித்தார். மண் மேற்பரப்பிற்கு கீழே அடி மட்ட இணைப்புக் குழாய்கள் கூட அமைக்கப்படவில்லை. மத்திய அரசின் திட்டத்தால் 135 குடும்பங்கள் பயனடைந்ததாக, வழக்கம் போல ஒரு தவறான தகவல், கூறப்பட்டது.
ஆனால் தமிழ்நாடு மாநில அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்ததாரரின் ஊழலால், பயனாளிகளான ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் திரு.கல்யாணராமன் மற்றும் அவரது குழுவினர் சுயேச்சையாக விசாரணை நடத்தி இந்த கிராமத்தில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் முறைகேடுகளை கண்டறிந்துள்ளனர். இந்த ஊழலில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, மாநில காவல் துறை, தவறைச் சுட்டிக்காட்டிய, புகார்தாரரை துன்புறுத்த, மாநில அரசு அனுமதித்துள்ளது.
திரு. முரளி கிருஷ்ணனின் ஒரே தவறு, 2019 ஆகஸ்டில் நமது மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் அறிமுகப்படுத்திய மத்திய அரசின் திட்டமான ஜல் ஜீவன் மிஷனை செயல்படுத்துவதில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அரசின் ஊழலை அம்பலப்படுத்தியது மட்டுமே.
இந்தப் புகார் கிடைத்ததும் நவம்பர் 28, 2022 அன்று, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் திரு.வினோஜ் பி செல்வம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒழுந்தியப்பட்டு கிராமத்திற்கு, நேரில் சென்றுபார்வையிட்டார். கிராமத்தின் 116பயனாளிகளில், 40 வீடுகளில், மண்ணுக்கு அடியில், குடிநீர் இணைப்பு தரப்படாமல், இணைப்புக் குழாய்கள் இல்லாத துண்டுக்குழாய் மட்டுமே மண்ணுக்குள் பொருத்தப்பட்டிருந்தது.
இந்திரவனம் மற்றும் ஒழுந்தியப்பட்டில் இரண்டு அடி உயரமுள்ள சிமென்ட் ஸ்லாப், 2 அடி தண்ணீர் குழாய் மூலம் செங்குத்தாக குழாய் மூலம் செல்லும் நிலத்தடி குடிநீர்க்குழாய்கள் இணைக்கப்படவில்லை. நமது மாநிலத்தின் நலனுக்காக மத்திய அரசு அனுப்பிய பணத்தை, தமிழக ஆட்சி நிர்வாகம் கண்துடைப்பு வேலைகள் மட்டும் செய்து, அரசுப்பணத்தைகொள்ளையடித்து வருவதால், தமிழகத்தில் ஜல் ஜீவன் திட்டம் நிறைவேற்றப்படுவது குறித்து கவலையடைந்துள்ளோம்.
மாநில மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் கொடுக்கும் நோக்கில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள, ஒரு நல்ல திட்டத்தில், தமிழ்நாடு மாநில அரசு செயல்படுத்தும் விரிவான மோசடியை நாம் வெளிக்கொணருவோம் என்று பாரதிய ஜனதா கட்சி நம்பிக்கை கொண்டுள்ளது.
ஆகவே, மாநிலம் முழுவதும் கூடுதல் ஆய்வுகள் மூலம், தமிழ்நாடு மாநிலத்தில் ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்துவதை தணிக்கை செய்ய ஒரு தனி அதிகாரம் மிக்க நிறுவனத்தை வரவழைத்து, ஆய்வுகள் மேற்கொள்ள மாண்புமிகு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி, நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்கு சென்னை வந்திருந்தார்.
இதன் தொடக்கவிழா நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மாநில முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மாநில அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் 180 நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அரங்கத்திற்கு வந்திருந்தனர்.
தமிழகம் போன்ற உணர்வுப்பூர்வமான மாநிலத்தில் குறிப்பாக நமது பாரத பிரதமர் வருகை தருகிறார் என்ற போது, பல உயரதிகாரிகள் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்ற போது, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியமாகிறது..
பாதுகாப்பு ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்ட மெட்டல் டிடெக்டர்கள், டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர்கள் , வெடிகுண்டு கண்டறிதல் கருவிகள் ஆகியவை முறையாக இல்லாததால், பயன்பாட்டிற்கு உதவாத நிலையில் இருந்ததும், பராமரிப்பு மற்றும் மாற்றியமைக்க காலதாமதம் ஏற்பட்டதும் தற்போது தெரியவந்துள்ளது.
சமீபத்தில், போலி பாஸ்போர்ட் மோசடியில் உளவுத்துறை ஏடிஜிபிக்கு தொடர்பு இருப்பதை, பாரதிய ஜனதா கட்சி ஆதாரத்துடன் வெளிப்படுத்தியது.
துரதிர்ஷ்டவசமாக, தமிழக அரசு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், தவறிழைத்த அதே நபர், நமது மாநிலத்தையும் அதன் குடிமக்களையும் பாதுகாக்கும், பணியில் ஈடுபடுத்தப்பட்டு, அந்த அடிப்படைக் கடமையிலும், தொடர்ந்து தவறிவரும் போதும், மிகவும் உணர்ச்சிகரமான துறைக்கு அவர் தொடர்ந்து தலைமை தாங்குகிறார்.
தமிழ்நாட்டில், சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கோவை தற்கொலைப்படை தாக்குதலில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் முன்னறிவிப்பாகப் பகிர்ந்து கொண்ட குறிப்பிட்ட உளவுத்துறையின் ரகியத் தகவல்களை தமிழக அரசு கவனிக்கவில்லை.
சில மாதங்களுக்கு முன்னர், கள்ளக்குறிச்சியில் நடந்த வன்முறையும் , 19 இடங்களில் நடந்த PFI குண்டுவெடிப்பும், மாநில அரசின் மெத்தனப் போக்கையே நிரூபிக்கின்றன . தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் தி.மு.க அரசு, மாநில உளவுத் துறையைத் மாநிலநலன் காக்கத் திறமையாகப் பயன்படுத்தாமல், தங்கள் அரசியல் பகைகளைத் தீர்க்க மட்டுமே தொடர்ந்து பயன்படுத்துகிறது.
மாநிலத்தில் தேவையான மற்றும் துல்லியமான பயன்பாட்டில் உள்ள பாதுகாப்பு சாதனங்களை உறுதி செய்வது மாநில காவல் துறை மற்றும் தமிழக அரசின் பொறுப்பாகும். மாண்புமிகு பிரதமரின் வருகைக்குப் பிறகும், மத்திய அமைப்புகள் தவறுகளைச் சுட்டிக் காட்டிய பிறகும், அனைத்துப் பாதுகாப்புச் சாதனங்களின் தகுதிநிலை அறிக்கையைக் கோரி அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை சமீபத்தில் தமிழ்நாடு மாநிலக் காவல் துறையால் அனுப்பப்பட்டது.
துரதிர்ஷ்டவசமாக, இந்த நிலை அறிக்கையை நமது பிரதமர் மாநிலத்திற்கு வருவதற்கு முன்பே அழைக்கப்பட்டிருக்க வேண்டும். இதுபோல, பாதுகாப்பு சாதனங்களில் சமரசம் செய்வதன் மூலம், வி.வி.ஐ.பி.யின் வருகைக்கு முன், முக்கியமான பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக உறுதி செய்வதில் அக்கறையின்றி அசட்டையாக தமிழ்நாட்டு மாநில அரசு செயல்பட்டுள்ளது, தெரியவருகிறது. அதிலும் குறிப்பாக களத்தில் இருக்கும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு, அவசியமான செயல்பாட்டு நிலையில் உள்ள பாதுகாப்பு சாதனங்களை வழங்குவதையும் மாநில அரசு தவறவிட்டுள்ளது. இதனால் நமது மாண்புமிகு பிரதமரின் பாதுகாப்பிற்கு ஆபத்தும், அச்சுறுத்தலும் ஏற்பட்டது தெரியவருகிறது.
இதே நிலைதான் கோயில்கள், நினைவுச் சின்னங்கள் , அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்கள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த மற்ற இடங்களிலும் இந்தப் பிரச்சனை வெளிப்படுகிறது. ஆகவே இந்த பகுதிகளில் நிறுவப்பட்டிருக்கும், அனைத்து பாதுகாப்பு சாதனங்களுக்கும் முழுமையான தணிக்கை தேவைப்படும் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.
பாதுகாப்பு சாதனங்களின் தற்போதைய நிலையிருப்பு குறித்து ஒரு தனித் தணிக்கை நடத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் கோரினோம். மேலும் இவ்விவகாரம் குறித்து பாரபட்சமற்ற, விசாரணை நடத்தி, தவறிழைத்த குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு கவர்னர் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.