- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஜான்சன் vs ஜானகிராமன்
ஜானகி – என்ன தம்பி ஜான்சன் நல்லா இருக்கீங்களா?
ஜான்சன் – எங்க ஜானகி … வீட்டு வரிய கன்னாபின்னான்னு ஏத்திப்புட்டாங்க … அதைக் குறைங்கய்யான்னு கேட்கலாம்னு போனா அங்க என்ன கொஞ்சம் கவனிங்க சரி பண்ணிடலாங்கறான்.
ஜானகி – அப்ப நீங்க நலமா-ன்னு கேட்டதெல்லாம் …
ஜான்சன் – அப்படியில்ல … மாநில அரசு பல நல்ல திட்டங்கள் எல்லாம் செஞ்சிருக்கு அதெல்லாம் மக்களுக்குப் போய்ச் சேர்ந்திருச்சா பாக்க கொண்டுவந்த திட்டம் அந்த நீங்க நலமா திட்டம். இதிலெல்லாம் எங்க முதல்வர்தான் முன்னோடி தெரியுமா?
ஜானகி – போன வருசம் நவம்பர் 15ஆம் தேதி நம்ம பாரதப் பிரதமர் விகசித் பாரத் சங்கல்ப் யாத்ரா அப்படீன்னு ஒரு திட்டத்தைத் தொடங்கினார். இது என்னன்னா, மத்திய அரசின் ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் உரிய மக்களுக்குப் போய்ச் சேருதா அப்படீன்னு பாக்கற ஒரு திட்டம். இதற்காக அந்தத் திட்டங்களை விளக்கும் ஒரு பெரிய டிவி வேன் நம்ம பகுதிக்கு வரும் … திட்டங்களை விளக்கிச் சொல்லும் … அந்த வேன் கூட அதிகாரிகள் இருப்பார்கள் … சில சமயம் மத்திய அரசின் மந்திரிகளும் இருப்பார்கள் … மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்வதும் இதுவரை பயன்பெறாத தகுதியுள்ள மக்களை திட்டத்தில் சேர்ப்பது. இதன் நோக்கம்.
ஜான்சன் – அட இது தான் நம்ம முதல்வரொட நீங்க நலமா திட்டம்.
ஜானகி – கரக்ட். ஆனா நீங்க நலமா திட்டம் மார்ச்சு 2024இல் ஆரம்பிக்கப்பட்டது.
ஜான்சன் – அப்ப இது ஒரு நகலெடுக்கப்பட்ட திட்டம்ன்னு சொல்ரியா?
ஜானகி – ஆமாம் அப்பட்டமான காப்பி.
ஜான்சன் – இருந்தாலும் பா.ஜ.க தமிழகத்தில் வெற்றி பெற முடியாது … இங்க திமுகவின் கூட்டணி ரொம்ப வலுவாக இருக்கு. அவர்கள் மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள் அதிக மாக இருக்கு.
ஜானகி – என்ன நலத்திட்டங்கள்? சரி ஒண்ணுஒண்ணா வருவோம். முதல்ல டாஸ்மாக் … அதை ஒழிக்கிறேன் சொன்னாங்க … ஒழிச்சிட்டாங்களா? இல்லை … அதுக்கு மேல பாட்டிலுக்கு பத்து ரூபாய் கறுப்புப் பணம் … இருக்கா இல்லையா சொல்லு …
ஜான்சன் – பத்து ரூபாய் வாங்கறாங்க … உன்மைதான் நிறைய பேரு சொல்றாங்க … ஆனா மகளிர் உரிமைத்திட்டம் இருக்கே
ஜானகி – மகளிர் உரிமைத் திட்டத்துல அனைத்து மகளிருக்கும் ரூ 1000 வழங்கப்படும் அப்படீன்னு சொன்னாங்க … ஆனா ஒரு சில பேருக்குத்தான் தந்திருக்காங்க
ஜான்சன் – இலவச பேருந்துப் பயணம் …
ஜானகி – அதுக்குத்தான் ஓசி ஓசி ன்னு அமைச்சர் முதற்கொண்டு அனைவரும் கிண்டல் பண்றீங்க … பஸ்ஸு எதையும் ரிப்பேர் பண்ணலை … இன்னிக்கிகூட தினமலர் நாளிதழில் உடைந்த ஃபுட்போர்டுடன் பஸ் ஓடுது அப்படீன்னு படத்தோட செய்தி வெளியிட்டு இருக்கு.
ஜான்சன் – எப்படி யிருந்தாலும் எல்லா இடங்களிலும் திமுகதான் ஜெயிக்கும் … ஏன்னா அவங்களுக்கு ஓட் பர்சண்டேஜ் அதிகம்.
ஜானகி – அப்படியில்ல … திமுகவின் வாக்கு சதவீதம் முன்பைவிட இப்போது குறையும் … அதன் காரணங்கள் முதலில் இது பாராளுமன்றத் தேர்தல் … அப்புறம் அரசுக்கு எதிரான மனநிலை … வெள்ள சமயத்தில் அரசு சரிவர இயங்காதது … ஊழல் குற்றாசாட்டுகள் – ஒரு அமைச்சரே சிறையில் இருக்கிறார் … இந்துக்களுக்கு எதிரான பேச்சுகள் … எதெற்கெடுத்தாலும் மத்திய அரசுக்கு எதிரான நிலை … இதனால் திமுகவின் வாக்கு வங்கி சரிய வாய்ப்புள்ளது.
ஜான்சன் – அப்படி பார்த்தாலும் பாஜகவிற்கு சரியான கூட்டணி இல்லை.
ஜானகி – “என் மண் என் மக்கள்’ யாத்திரை மூலம் பாஜகவின் வாக்கு வங்கி பல மடங்கு அதிகரித்திருக்கிறது. பாமக, தமாக, அஇஅதிமுகவின் எடப்பாடியைத் தவிர்த்த பிரிவுகள், சரத்குமார், பாரிவேந்தர், ஏ.சி. ஷண்முகம் ஆகியோர் கூட்டணியில் இருக்கிறார்கள். எனவே பாஜக கூட்டணியின் வலு அதிகமாகவே இருக்கிறது.
ஜான்சன் – இருந்தாலும் பாஜக தமிழ்நாட்டுக்கு என்ன செய்திருக்கிறது?
ஜானகி – பிரதமர் தெளிவாகச் சொன்னாரே முதலில் டிஃபென்ஸ் காரிடர்
ஜான்சன் – டிஃபென்ஸ் காரிடர் அப்படீன்னா?
ஜானகி – டிஃபென்ஸ் காரிடர் (Defence corridor) அப்படீன்னா இந்திய ராணுவத்திற்குத் தேவையான தளவாடங்களை உற்பத்தி செய்யும் கேந்திரங்களை தமிழகத்தில் அமைப்பது. இதன்மூலம் லட்சக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்; தமிழகத்தின் தொழில்துறை அபரிமிதமாக வளரும்.
உள்நாட்டு ராணுவ உற்பத்தியை அதிகரிப்பதற்காக இரண்டு டிஃபென்ஸ் காரிடர்கள் அமையவிருக்கிறது. முதல் டிஃபென்ஸ் காரிடர் தமிழகத்திற்கும் பெங்களூருவிற்கும் இடையே அமையும். இரண்டாவது டிஃபென்ஸ் காரிடர் உத்தரப்பிரதேசத்தில் அமையும். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் இருக்கும் சிறு,குறு தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ‘டிஃபெக்ஸ்போ’ கண்காட்சியும் தமிழகத்தில் நடத்தப்பட்டது.
இந்தியாவில் முதல்முறையாக அமையவிருக்கும் இந்த டிஃபென்ஸ் காரிடர் தமிழகத்திற்கு வரக்காரணம், போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி, மனிதவளம் என எல்லா ஏரியாவிலும் தமிழகம் சிறப்பாக இருப்பதுதான். டிஃபென்ஸ் காரிடர் என்பது ஏதோ ஓர் அமைப்போ அல்லது தொழிற்சாலையோ கிடையாது. தமிழகத்தில் அமைந்துள்ள ராணுவத்திற்கு உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சிறு மற்றும் குறு நிறுவனங்கள் போன்ற அனைத்தும் ஒன்றிணைந்து, இந்திய ராணுவத்திற்காக கருவிகளை உற்பத்தி செய்யும் ஓர் உற்பத்தி கேந்திரம்தான் டிஃபென்ஸ் காரிடர்.
தமிழகத்தில் சென்னை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், ஓசூர் ஆகிய பகுதிகள் இந்த டிஃபென்ஸ் காரிடரில் இடம்பெறவிருக்கின்றன. இத்துடன் பெங்களூரும் இணைந்திருக்கிறது. தற்போது, இந்தத் திட்டத்தின் மூலமாக ராணுவத்திற்கு உதிரிபாகங்கள் உற்பத்தி செய்வதில் தமிழகம் இன்னும் கூடுதல் பங்கு வகிக்கும். இங்கே இருக்கும் பொறியியல் மாணவர்கள் பலருக்கும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். தமிழகத்தின் தொழில்துறையில் முதலீடும் பெருகும்.
ஜான்சன் – நாங்கூட பொறியியல் படிச்சுட்டு வேலையில்லாம இருக்கேன். எனக்கும் வேலை கிடைக்குமா?
ஜானகிராமன் – அதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன … பயன்படுத்திகிட்டா நல்லது … இது நடக்கணும்னா மோதி மீண்டும் வலுவாக ஜெயித்து வரவேண்டும்.