- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
பதிமூன்றாம் நாள்
ஐபிஎல் 2024 – 03.04.2024 – விசாகப்பட்டிணம்
கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்
கொல்கொத்தா அணி (272/7, சுனில் நரேன் 85, ரகுவன்ஷி 54, ஆண்ட்ரூ ரசல் 41, அன்ரிச் நோர்ட் 3/59, இஷான் ஷர்மா 2/43) டெல்லி அணியை (166/10, 17.2 ஓவர்) 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று விசாகப்பட்டினத்தில் கொல்கொத்தா நட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடின. பூவாதலையா வென்ற கொல்கொத்தா அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. கொல்கொத்தா அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் 12 பந்துகளில் 18 ரன் 4.3ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
ஆனால் மற்றொரு தொடக்கவீரர் சுனில் நரேன் 39 பந்துகளில் 85 ரன் அடித்தார். அதில் ஏழு ஃபோர் மற்றும் ஏழு சிக்சர்கள். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய அங்கிருஷ் ரகுவன்ஷி 27 பந்துகளில் 54 ரன் அடித்தார். அவர் 13.2 ஓவரில் ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 176. இது மற்ற அணிகள் 20 ஓவரில் எடுக்கின்ற ஸ்கோர்.
அதன் பின்னர் ஆண்ட்ரூ ரசல் (19 பந்துகளில் 41 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) மர்றும் ரிங்கு சிங் (8 பந்துகளில் 26 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்) நன்றாக ஆடியபோதும் விக்கட்டுகள் தொடர்ந்து விழுந்துவந்ததால் கொல்கொத்தா அணி 20 ஓவர் முடிவில் 272 ரன் எடுத்தது.
இரண்டாவதாக ஆட வந்த டெல்லி அணியின் முதல் நான்கு வீரர்கள் பிருத்வி ஷா (2ஆவது ஓவர்), மார்ஷ் (3ஆவது ஓவர்), அபிஷேக் போரல் (4ஆவது ஓவர்), வார்னர் (5ஆவது ஓவர்) சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். வார்னர் ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 4.3 ஓவரில் 33/4. ரிஷப் பந்தும், மேலே சொன்ன நால்வரும் இன்று நன்றாக விளையாடாவிட்டால் டெல்லி அணிக்கு வெற்றிக்கு வாய்ப்பே இல்லை என்பதுதான் வல்லுநர்களின் கணிப்பு. அதுபோலவே நடந்தது.
ரிஷப் பந்த் (25 பந்துகளில் 55 ரன்) மற்றும் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (54 ரன், 32 பந்துகள்) ஆகிய இருவரும் கொஞ்சம் தாக்குப் பிடித்து ஆடினார்கள்.
கொல்கொத்தா அணியின் சுழப் பந்துவீச்சாளர்கள் வருண் சக்ரவர்த்தி (3/33), சுனில் நரேன் (1/29), ரசல் (1/14) ஆகியோருடன் வைபவ் அரோரா (3/27) சிறப்பாக பந்து வீசினார்கள்.
கொல்கொத்தா அணியின் சுனில் நரேன் சிறப்பான பேட்டிங்கிற்காகவும் ஒரு விக்கட் எடுத்ததற்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
நாளை அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்க்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.