மதுரை சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற மக்களின் கருத்து கேட்கப்பட வேண்டும்… என்று, இந்து முன்னணி மாநில தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
மதுரை என்றாலே நினைவுக்கு வருவது சித்திரை திருவிழாவாகும். இந்தத் திருவிழா மீனாட்சி அம்மன் கோவில் முதல் அழகர் மலையில் வீற்றிருக்கும் கள்ளழகர் கோவில் வரை 22 நாட்கள் நடக்கும் சிறப்பான பாரம்பரியமான திருவிழாவாகும்.
இந்த திருவிழாவில் பல மாவட்டங்களில் இருந்து பல லட்சம் பேர் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். உலகப் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தமிழக அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் சரியான முறையில் அடிப்படை வசதிகள் செய்து தராத காரணத்தினால், மதுரை உயர்நீதிமன்றம் சித்திரைத் திருவிழாவிற்கான பாதுகாப்பையும் அடிப்படை வசதிகளையும் உறுதிப்படுத்த உத்தரவிட்டுள்ளது.
ரம்ஜான் பண்டிகை துவங்குவதற்கு முன்பாகவே இஸ்லாமியர்களுக்கு என்னென்ன தேவை என்றும் கஞ்சி காய்ச்சுவதற்கு எவ்வளவு அரிசி தேவைப்படுகிறது என்றும் முன்கூட்டியே திட்டமிட்ட தமிழக அரசு, வேளாங்கண்ணி கிறிஸ்துவ திருவிழாவிற்கு அந்த மதத்தின் மக்களுக்கு என்னென்ன தேவைகள் என்று முன்கூட்டியே திட்டமிட்ட அரசு கடந்த இரண்டு வருடங்களாக சித்திரை திருவிழாவை சிறப்பாக நடத்த திட்டமிடாத காரணம் என்ன? என்று தெரியவில்லை.
கடந்த 2022 ஆம் ஆண்டு திருவிழாவின் போது போதிய கட்டமைப்பு வசதிகளை அரசும் காவல்துறையும் செய்ய தவறியதால் கோரிப்பாளையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். 2023 ஆம் ஆண்டு வைகை ஆற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார்.
தொன்று தொட்டு பாரம்பரியமாக பல லட்சம் பேர் கலந்து கொள்ளும் திருவிழாவில் இந்த அரசும் இந்து சமய அறநிலைத்துறையும் எப்படி ஒரு சிறப்பான ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். ஆனால் பக்தர்களின் உயிரிழப்புகளும் திருட்டு சம்பவங்களும் நடப்பது இந்த அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது. மேலும் பல லட்சம் பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி கழிப்பறை வசதி கூட்ட நெரிசலுக்கு தகுந்த பாதுகாப்பு வசதி ஆகியவற்றை செய்து அரசு மறுக்கிறதா? மறக்கிறதா? என தெரியவில்லை..
இதில் வேடிக்கை என்னவென்றால் உயிர் இழப்பு நடந்த பின்பு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் கேட்டால் இவ்வளவு கூட்டம் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லையென பொறுப்பில்லாமல் பதில் கூறுவது இந்து சமய அறநிலையத்துறையின் அவல நிலையை காட்டுகிறது. 5000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தும் இது போன்று நடப்பது மக்களுக்கு இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்துகிறது .
இந்த அரசினாலோ இந்து சமய அறநிலைத்துறையினாலோ திருவிழாவை சிறப்பாக நடத்த முடியவில்லை என்றால் அதற்கான திட்டமிட முடியவில்லை என்றால் ஆன்மீக அமைப்புகளிடம் விட்டு விடலாமே.! ஏன் இந்து முன்னணியிடம் திருவிழாவை சவாலாக ஒப்படைத்து பாருங்கள். எப்படி நடத்த வேண்டுமென வெகுவிமர்சையாக நடத்தி அரசுக்கும் அறநிலையத்துறைக்கும் பாடம் எடுத்து காட்டுகிறோம்..
விழாவிற்கான முன்னேற்பாடுகளில் அரசு அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தினால் திருவிழா சிறப்பாக நடைபெற வாய்ப்பு இல்லை. மாறாக மதுரை பகுதியைச் சார்ந்த உள்ளூர் பிரமுகர்கள், ஆன்மீக பெரியோர்கள், மடாதிபதிகள், இந்து இயக்கங்கள் ஆகியோரின் ஆலோசனைகளை கேட்கும் பட்சத்தில் மதுரையில் எந்தெந்த பகுதியில் கூட்டம் அதிகமாக இருக்கும், எந்தெந்த பகுதியில் வெளியூரில் இருந்து திருடர்கள் பக்தர்களின் நகைகளை பறித்து செல்கின்றனர், இதற்கு முன்பாக என்னென்ன அசம்பாவிதங்கள் நடந்தது என்பதை விளக்கி கூற முடியும்.
மதுரை மாவட்டத்திற்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக வந்த அதிகாரிகளுக்கு இது சம்பந்தமாக தெரிய வாய்ப்பு இல்லை. குறிப்பாக தல்லாகுளம் வைகை ஆற்றுப்பகுதி கோரிப்பாளையம் ஆழ்வார்புரம் ஆகிய பகுதிகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் இந்தப் பகுதியில் பக்தர்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு திருவிழா சம்பந்தமாக முன்பே திட்டமிட்டு பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த முறை பக்தர்களின் பாதுகாப்பிலோ, அவர்களின் உடைமையின் பாதுகாப்பிலோ, அடிப்படை வசதிகளிலோ தமிழக அரசும் இந்து சமய அறநிலைத்துறையும் சரியாக கையாளா விட்டால் இந்து முன்னணி பார்த்துக்கொண்டு இருக்காது.
எனவே உடனடியாக உள்ளூர் பிரமுகர்களையும் அரசு அதிகாரிகளையும் அழைத்து சரியான திட்டமிடல் மூலம் நீதிமன்ற உத்தரவை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு பக்தர்களின் பாதுகாப்பு விஷயத்திலும் அடிப்படை வசதி விசயத்திலும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து தர இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.