— ஆர். வி. ஆர்
கௌதம் அதானி ஒரு முன்னணி இந்தியத் தொழிலதிபர். அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல். பின்னணி விவரங்கள் இவை.
அதானி குழுமத்தின் சில கம்பெனிகள், இந்தியாவில் சூரிய ஒளி மின்சக்தியை உற்பத்தி செய்கின்றன. அந்த மின்சக்தியை உள்நாட்டில் சில மாநில மின்விநியோக நிறுவனங்கள் ஒரு மத்திய அரசு நிறுவனம் வழியாகக் கொள்முதல் செய்தன. இந்த மின்சக்திக் கொள்முதல் தொடர்பானது தான், மற்ற விஷயங்கள். இது சம்பந்தமாக அமெரிக்காவில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் ஒரு கிரிமினல் வழக்கை அமெரிக்க மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது.
இந்தியாவில் சில மாநில மின்விநியோக நிறுவனங்கள் அவ்வாறு சூரிய ஒளி மின்சக்தியைக் கொள்முதல் செய்வதற்காக ஒப்பந்தகளில் கையெழுத்து இடவேண்டும். அது நடந்தேற, சில இந்திய அரசியல் கட்சிகளுக்கும், அவற்றின் தலைவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் 2,000 கோடி ரூபாய் லஞ்சம் கொடுப்பது பற்றி அதானியும் இன்னும் ஏழு நபர்களும் தங்களுக்குள் கூடிப் பேசினர், சதி செய்தனர், அந்த மின்சக்தியைக் கொள்முதல் செய்த மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசம் தமிழ்நாடு, ஆந்திர பிரதேஷ், ஒரிஸ்ஸா, சத்தீஸ்கர் மற்றும் ஜம்மு காஷ்மீர், சம்பவம் நடந்தது 2020–2024 வருடங்களில், என்பது அந்த அமெரிக்க நீதிமன்றத்தில் பதிவான ஒரு குற்றச்சாட்டு.
சரி, இந்த விஷயத்தில் ஏன் ஒரு அமெரிக்க நீதிமன்றம் வருகிறது? ஏனென்றால், சம்பந்தப்பட்ட சூரிய ஒளி மின்சக்தி தயாரிக்கும் அதானி கம்பெனிகளில் ஒன்று அமெரிக்க மக்களிடமும் நிதி திரட்டியது, அதன் பங்குகள் அமெரிக்க பங்குச் சந்தையிலும் பட்டியலானவை, என்பதால் அமெரிக்க நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. வழக்கு இன்னும் நடக்க ஆரம்பிக்கவில்லை.
வழக்கை வக்கீல்கள், சட்டங்கள் மற்றும் நீதிமன்றங்கள் பார்த்துக் கொள்ளட்டும். நாம் பார்க்க வேண்டியது இன்னொரு விஷயம். வேறென்ன? ராகுலின் கோளாறுப் பேச்சுதான்.
அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மீதான வழக்கு நடக்கத் தொடங்கும் முன்பாகவே, சத்திய மூர்த்தியான ராகுல் உடனே இப்போதே அதானி கைது செய்யப்பட வேண்டும் என்று தொடர்ந்து கேட்கிறார். இதன் நியாயம் என்ன, இதற்கு என்ன அர்த்தம்?
லோக் சபாவில் எதிர்க் கட்சித் தலைவராக இருப்பவர் ராகுல் . நாட்டின் அரசுத் துறைகளில் லஞ்சம் களையப் படவேண்டும் என்ற மக்கள்-நலம் சார்ந்த எண்ணத்திலா அதானியின் கைதை ராகுல் கோருகிறார்? ஊஹூம், கிடையாது.
இந்தியாவில் காற்றுப் புகாத இடங்களிலும் லஞ்சம் புகும் என்பது பலரது அனுபவம். புது ரேஷன் கார்டு வாங்கும்போது, புது வாகனத்தைப் பதிவு செய்யும் போது, மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது, பத்திரம் பதிவு செய்யும் போது, போக்குவரத்துப் போலீஸை எதிர்கொள்ளும் போது, சாதாரண மக்களின் அனுபவங்கள் வெளியில் சொல்ல முடியாதவை. இவை அநேகமாக மாநில அரசுகள் சம்பந்தப் பட்டவை.
நமது நாட்டில் ஒரு நேரத்தில் நூறு நபர்கள் ஏதோ ஒரு அரசு ஊழியருக்கு அவர் கடமையைச் செய்ய லஞ்சம் தருகிறார்கள் என்றால், அதில் தொண்ணூறு நபர்களாவது அப்பாவிப் பொது மக்களாக இருப்பார்கள். அதிக பட்சமாக பத்து நபர்கள் வியாபார நிமித்தமாக அரசுடன் தொடர்பு கொள்பவர்களாக இருப்பார்கள்.
பொதுவாக மேலே குறிப்பிட்ட விஷயங்களில் – ரேஷன் கார்டு அலுவலகம், வாகனப் பதிவு அலுவலகம், மின்துறை அலுவலகம், பத்திரப் பதிவு அலுவலகம், போக்குவரத்துப் போலீஸ் துறை போன்றவற்றில் – அநேக ஊர்களில் எழும் லஞ்ச ஊழல் புகார்கள் பற்றி, அவற்றின் உண்மைத் தன்மை சாத்தியம் பற்றி, எதுவுமே தெரியாத பாப்பாவா ராகுல் ? இல்லை, இவை பற்றியும் அமெரிக்காவில் வழக்குப் பதிவானால்தான் சாருக்குத் தெரிய வருமா? ஐயா அப்போதுதான் இத்தகைய தினசரி லஞ்ச ஊழல் கேடுகள் பற்றிப் பேசுவாரா?
இன்னொரு பக்கம் – இது இன்னும் முக்கியம். லஞ்சம் கொடுப்பவர் யாராக இருந்தாலும், லஞ்சம் ஏன் கொடுக்கப்படுகிறது, ஏன் வாங்கப்படுகிறது?
அரசு ஊழியர் லஞ்சம் கேட்கிறார், கொடுக்காவிட்டால் நமது காரியம் நடக்காது, வேறு வழியில்லை, என்ற நிர்பந்தத்தால் ஒரு குடிமகன் மனமில்லாமல் லஞ்சம் கொடுப்பாரா; அல்லது, அடம் பிடித்து அழிச்சாட்டியம் செய்து, லஞ்சத்தைக் கையில் திணிக்காமல் ஒரு குடிமகன் போகமாட்டான் என்ற சூழ்நிலையில் ஒரு அரசு ஊழியர் மனமில்லாமல் லஞ்சம் வாங்குவாரா? இதில் எது உண்மை என்பது ராகுல்க்கும் தெரியும்.
ஒரு அரசுப் பணியாளர் லஞ்சம் வாங்குகிறார் என்றால், முதலில் பாதிக்கப் படுவது யார்? பொதுமக்களும் அரசு சேவைகளை வேண்டுவோரும் தானே? அப்படியென்றால், அரசுப் பணியாளர்கள் மீது லஞ்சப் புகார்கள் பெரிதாக வரும்போது, ஒரு அரசியல் தலைவர் என்ன செய்ய வேண்டும்? லஞ்சம் கொடுக்க நினைத்ததாக, கொடுத்ததாக, சொல்லப் படுகிற மனிதரைப் பிடித்து உள்ளே தள்ளவேண்டும் என்று அந்த அரசியல் தலைவர் பேச வேண்டுமா? அல்லது லஞ்சம் கேட்டவர், அதை வாங்கியவர், யார் என்று கண்டுபிடித்து அவரது குற்றத்தை நீதிமன்றத்தில் நிரூபிக்கக் குரல் எழுப்ப வேண்டுமா?
இந்தியாவின் சில அரசியல் கட்சிகளுக்கு, அவற்றின் தலைவர்களுக்கு, அரசு அதிகாரிகளுக்கு 2,000 கோடி ரூபாய் லஞ்சம் தருவது பற்றி சிலர் பேசிக் கொண்டார்கள், சதி செய்தார்கள், என்று ஒரு வழக்கு வெளிநாட்டில் பதிவாகி இருக்கிறதே, அதில் உண்மைத்தன்மை இருந்தால் – அந்த அளவுப் பணம் உண்மையில் லஞ்சமாகத் தரப்பட்டிருந்தால் – ‘அதை வாங்கிய அரசியல் கட்சிகள், கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள் யார் என்று கண்டறிய வேண்டும். அவர்கள் மீது நமது நீதிமன்றங்களில் வழக்குப் போட்டு அவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்’ என்று ஏன் ராகுல் பிரதானமாகப் பேசவில்லை? அதை விட்டுவிட்டு, அதானியைக் கைது செய் என்று மட்டும் பேசுகிறாரே, ஏன்?
ராகுல் வைத்திருப்பது இந்திய மக்கள் மீதான அக்கறையா, அதானி மீதான கோபமா?
அதானிக்கு ராகுலிடமிருந்து நற்சான்றிதழ் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. பரவாயில்லை. அதானியிடமிருந்தும் ராகுல்க்கு ஏதோ கிடைக்கவில்லையா? ஒன்றும் புரியவில்லை!
ராகுல்! உங்களையும் அதானியையும் பத்தி, உங்களுக்குள்ள கணக்கைப் பத்தி, நீங்க யோசிச்சது போதும். மக்களைப் பத்தியும் யோசிங்க ராகுல்!
Author: R Veera Raghavan (Advocate, Chennai)
[email protected]
https://rvr-india.blogspot.com