வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு சௌதிஅரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே நிலைகொண்டிருந்தது. இது புயலாக மாறும் என்று கூறப்பட்ட நிலையில், இரு நாட்களாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே நீடித்து நிலைகொண்டிருந்தது. இதனால், இது புயலாக மாற வாய்ப்பு இல்லை என்று நேற்று மாலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் இன்று காலை அது அடுத்த சில மணி நேரங்களில் புயலாக மாறும் என வானிலை மையம் அறிவித்தது. இதை அடுத்து, ஃபெங்கல் புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது. இது நவ.30 நாளை பிற்பகல் காரைக்கால் மற்றும் மகாபலிபுரத்துக்கு இடையே கரையைக் கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 60 முதல் 70 கி.மீ., வரையிலும், அதிகபட்சமாக 90 கி.மீ.,வரையிலும் காற்று வீசக்கூடும். கடல் சீற்றமாகக் காணப்படும்.
இந்தப் புயல் தற்போது புதுச்சேரிக்கு தென்கிழக்கே 270 கி.மீ., தொலைவில் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 13 கி.மீ., வேகத்தில் தற்போது நகர்ந்து வருகிறது.
புயலானது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது…:
தென் மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுகிறது. அடுத்த 3 மணி நேரத்தில் பெங்கல் புயல் உருவாகிறது. வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ.,30) காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையைக் கடக்கும் போது 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா பகுதிகளுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஒரு வழியாக புயலாக மாறியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக கணிப்புகளை பொய்யாக்கிய ஃபெங்கல் புயல் வங்கக்கடலில் உருவானது.
இது, மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியால், சென்னையில் இருந்து காரைக்கால் வரை அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், நாளை மதியம் அல்லது இரவு வரை தொடர்ச்சியான அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காரைக்கால் புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும்: பாலச்சந்திரன்
தென்னிந்திய மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்ததாவது…
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். நாளை (நவ.,30) மதியம் காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே புயல் கரையை கடக்கும். வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்கும் போது 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.
5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகையில் இன்று அதி கனமழை பெய்யும்.
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூரில் மிக கனமழை பெய்யும்.
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் இன்று கனமழை பெய்யும்.
தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் நாளை அதி கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, புயல் குறித்து முனைவர் கு.வை. பா அவர்களின் வானிலை அறிக்கை 29.11.2024, காலை 0830 மணி
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 06 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து சென்னைக்கு தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவில் உள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகரக்கூடும் அதன்பிறகு, இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை நவம்பர் 30-ஆம் தேதி காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கடக்கும். அச்சமயத்தில் மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் காற்று மணிக்கு 70 கி.மீ வேகத்தில் வீசும்.
நவம்பர் 29 மாலை முதல் 30 நவம்பர் 2024 காலை வரை தென்மேற்கு வங்கக்கடலில் வேகத்தில் காற்றின் வேகம் மணிக்கு 65-75 கிமீ வேகத்திலும் அதிக பட்சமாக மணிக்கு 85 கிமீ வேகத்திலும் காற்று வீசும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரு புயலாக மாற வாய்ப்பு உள்ளது. டாப்ளர் வெதர் ராடார் காரைக்கால் மூலம் இந்த அமைப்பு கண்காணிக்கப்படுகிறது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மதியம் முதல் 30ஆம் தேதி வரை லேசான முதல் மிதமான மழை பரவலாகவும், கனமழை ஒரு சில இடங்களிலும், மிகக் கனமழை முதல் அதி கனமழை வரை ஓரிரு இடங்களிலும் பெய்யக்கூடும்.
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அதாவது இன்று காலை 1130 மணி வரை சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை 30.11.2024 காலை 0830 மணி முதல் 01.12.2024 காலை 0830 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் 15 செமீக்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.