சென்னைக்கு 190 கி.மீ. தென்கிழக்கில் மையம் கொண்டுள்ள ‘ஃபெங்கல்’ புயல் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
ஃபெங்கல் புயல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்க உள்ள நிலையில், மாமல்லபுரத்தில் இருந்து சுமார் 16 கி.மீ தொலைவில் உள்ள கல்பாக்கத்தில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்கிறது! 13 அடி வரை கடல் அலை எழுந்து கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது!
சென்னை அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்கிறது.
விமான சேவையில் பாதிப்பு
சென்னையில் தற்போது சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வரும் நிலையில் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது .
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சிங்கப்பூர், திருச்சி, மங்களூரு உள்பட பல பகுதிகளில் இருந்து சென்னை வரும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருச்சி, தூத்துக்குடி, மைசூரு, பெங்களூரு, அந்தமான் செல்லும் விமானங்கள் வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. மஸ்கட், குவைத், மும்பை உட்பட 5 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.
ஃபெங்கல் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து இன்று 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சிங்கப்பூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், மங்களூர், திருச்சி இண்டிகோ விமானங்கள் ரத்தாகின.
ஃபெங்கல் புயல் இன்று பிற்பகல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கவுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரத்தில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள ஃபெங்கல் புயல் சென்னையில் இருந்து, 140 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஃபெங்கல் புயல் தற்போது வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 140 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு 180 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் கரையை நோக்கி வந்து கொண்டிருந்தது. தற்போது மணிக்கு 12 கி.மீ., வேகத்தில் நகர்கிறது. புதுச்சேரிக்கு அருகே காரைக்கால்- மாமல்லபுரம் இடையே இன்று கரையை கடக்கும் – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வாகனப் போக்குவரத்து
சென்னையில் ஃபெங்கல் புயல் அறிவிப்பால் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்துள்ளது.
ஃபெங்கல் புயலால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தலைநகர் சென்னையில் நேற்றிரவு 11 மணி முதலே பல்வேறு பகுதிகளில் பெய்யத் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல்,எழும்பூர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பெசண்ட் நகர், கிண்டி, கத்திப்பாரா, அண்ணா சாலை, காமராஜர் சாலை என பரவலாக நகரின் பல பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது.
தொடர் மழையுடன் சூறாவளி காற்றும் வீசி வருவதன் காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் குறைந்துள்ளது. அரசு பஸ்கள் தவிர மற்ற வாகனங்களின் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற தேவைகளுக்காக மக்கள் வெளியில் வராமல் பாதுகாப்பாக வீடுகளிலேயே உள்ளனர்.
சாலைகளில் போதிய வெளிச்சம் இல்லாமல் காணப்படுவதால், முகப்பு விளக்குகளை எரியவிட்டிபடி வாகனங்களில் மக்கள் செல்கின்றனர். மழைநீர் எங்கு எல்லாம் தேங்கி இருக்கிறதோ அதை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கத்திவாக்கத்தில் அதிகப்பட்சமாக 7செ.மீ., மழை பதிவானது. சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஏரிகள் பல நிரம்பின.
தமிழகத்தில் பரவலாக மழை
ஃபெங்கல் புயல் காரணமாக, தமிழகத்தில் காலை 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. மேலும், 6 மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலெர்ட்’ விடுக்கப் பட்டிருந்தது.
விழுப்புரம், வேலுார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப் பட்டிருந்தது.
மிதமான மழைக்கு வாய்ப்பு
கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது.
அதி கனமழை எச்சரிக்கையை அடுத்து நவ.30 இன்றூ 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தஞ்சாவூரில் 2 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ராணிப்பேட்டை ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர், கும்பகோணம் தாலுகாக்களில், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு ஒத்திவைப்பு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெங்கல் புயலால் இன்று ஏழு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கோயம்பேடு, பரங்கிமலை, அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் பகுதிகளில் வாகனங்களை யாரும் நிறுத்த வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெங்கல் புயலை எதிர்கொள்ள சென்னை உள்ளிட்ட பல்வேறு கடலோர மாவட்டங்கள் தயாராகி விட்டன. முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிகாரிகள் முழு வீச்சில் இறங்கினர்.
மெட்ரோ நிர்வாகத்தின் அறிவுறுத்தல்
இந் நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் கவனிக்க வேண்டிய சில அறிவுறுத்தல்களை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
- சென்னையில் இன்று வழக்கம் போல் காலை 5.30 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளது.
- வழக்கமான ரயில் சேவை எவ்வித தாமதம் இன்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் தங்கள் பயணத்தை முன்னரே திட்டமிட்டுக் கொள்ளலாம்.
- மழை என்பதால் படிக்கட்டுகள், நடக்கும் வழித்தடங்களை பயணிகள் கவனமாக பயன்படுத்த வேண்டும்.
- கோயம்பேடு, பரங்கிமலை, அரும்பாக்கம் ஆகிய மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் ஏரியாவில் மழைநீர் தேங்கக்கூடும் என்பதால் இன்று முதல் பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டாம். பார்க்கிங்கை பயன்படுத்துவது குறித்த மறு அறிவிப்பு வரும் வரை இதே நிலை நீடிக்கும்.
- ஏதேனும் உதவி வேண்டுவோர் 1800 425 1515 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். உதவி கோரும் பெண்கள் 155370 என்ற எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம்.