
தை அமாவாசை (29/01/2025).
அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வது சனாதன தர்மத்தின் ஓர் அங்கம். ஆனால் இன்றைய காலச்சூழலில் ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதே இங்கு நம்மில் பலருக்கும் தெரியாத நிலையில் இருக்கிறோம்.
அமாவாசை என்பது நவகோள்களில் சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் பூமிக்கு நேர் வரிசையாக வரும் போது ஏற்படும். இன்னும் சரியாக சொன்னால் சூரியன் மற்றும் பூமியின் நடுவில் சந்திரன் வரும் போது அமாவாசை என்றாகிறது. இதுவே நேர் கோட்டில் சூரிய கிரணங்களை மறைத்து சந்திரன் வருமானால் அஃது சூரிய_கிரகணம்.
அதனால் தான் சூரிய கிரகணம் எப்போதும் அமாவாசை திதியில் வருகிறது. பூமியின் சுற்றுப்பாதையில் முன்னது-பின்னதாக சந்திரன் கடக்கும் சமயத்தில் அதன் மைய ஈர்ப்பு விசை சூரிய ஈர்ப்பு விசையுடன் கலந்து பூமியில் சில தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. ஆதலால் அன்று கடல் அலைகள் சற்றே ஆக்ரோஷமாக இருந்து வருகிறது.
இது கிட்டத்தட்ட அனைவரும் அறிந்த அறிவியல் உண்மை. ஆனால் ஜோதிஷத்தில் இன்னும் சற்று விரிவாக விளக்கப்பட்டுள்ளது. சந்திரன் மனோகாரக கிரகமாக குறிக்கப்படுறது.
இது ஏன் என்று நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.
தாயின் வயிற்றில் நாம் அனைவரும் கிட்டத்தட்ட பத்து மாதங்கள் கர்ப்ப வாசம் தரித்து, பிறகு இப்பூமியில் குழந்தையாக பிறக்கின்றோம்.கர்ப்ப காலத்தில் நாம் பை போன்ற ஒரு அமைப்பில் நீரில் மிதந்த படி தொப்புள் கொடி வழியாக ஜீவ ரசத்தை உணவாக கொண்டு பிண்டத்தை தேகமாக வளர்த்து பின்னர் குழந்தை வடிவில் பிறப்பு எடுக்கின்றோம் . இந்த புவியில் மனித_பிறப்பு மாத்திரமே தொப்புள் கொடி உறவுடன் குழந்தை பிறந்த பின்னரும் அறுந்து விடாமல் இருக்கிறது. மற்ற ஜீவராசிகள் கர்ப்ப வாசம் தரித்து பிறந்தாலும் தொப்புள் கொடி பனிக்குடம் வரையில் மாத்திரமே அதன் தொடர்பு இருக்கும். சரியாக சொன்னால் அந்த கொடியை அறுக்கும் வேலை இல்லை, தானாக விலகிய பின்னர் தான் குட்டி பிறக்கும்.
பனிக்குடம் என்பது நீர் நிறைந்த ஒரு விதமான ஜவ்வு பை. ஆனால் இங்கு பலரும் அறிந்திராத ஒன்று உள்ளது. நாம் ஏற்கனவே இது குறித்து ஓர் பார்வை பார்த்து இருக்கிறோம்.,அது கடல் நீரில் எவ்வளவு உப்பு உள்ளதோ அதே அளவு உப்பு மாத்திரமே பனிக்குட நீரிலும் இருக்கும். இறைவன் படைப்பில் இதுவும் ஓர் அதிசயமே. இன்று வரை ஏன் இவ்விதம் என்று அறிவியலாளர்கள் வியந்து வருகிறார்கள். இதிலும் ஒன்று உள்ளது, அது என்னவென்றால் எப்படி கடல் நீர் ஒவ்வொரு கண்டங்களில் மாறுபடுகின்றனவோ அது போலவே அங்கு வசிக்கும் அந்தந்த பகுதிகளில் பிறக்கும் குழந்தையின் பனிக்குட நீரிலும் , உப்பின் அளவிலும் இந்த மாற்றம் காண முடிகிறது.
ஜனனம் என்பது குழந்தை தலை வெளிப்பட்டு தொப்புள் கொடி அறுப்பது வரை ஓர் நாழிக்கைக்குள்ளாக நிகழ வேண்டும் என்பது ஒரு கணக்கு. ஓர் நாழிகை என்பது 24 நிமிடங்கள்.
ஒரு நாளைக்கு 60 நாழிகைகள்.இது குறித்த கணக்கு ஜனன கால ஜாதகம் என்பர்.
கடல் நீரில் உள்ள உப்பின் அளவே கர்ப்ப காலத்தில் பனிக்குட நீரிலும் உள்ளது என்று பார்த்தோம் அல்லவா, அது போலவே அமாவாசை காலத்தில் எப்படி கடல் சீற்றம் கொள்கிறதோ, அது போலவே கிரகண காலத்தில் இது இன்னும் சற்று அதிகரித்து காணப்படும்.
இஃது கர்ப்ப வாசம் செய்யும் குழந்தைகளையும் பாதிக்கிறது. ஆதலால் தான் கர்ப்பிணி பெண்கள் கிரகண காலத்தில் வெளிவர வேண்டாம் என்கிறார்கள்.
நாம் தொப்புள் கொடி என்று சொல்வதை சரியாக சொன்னால் கொப்பூழ்கொடி. இது வழியாகவே குழந்தை தாயின் சலனங்களை உள்வாங்குகிறது. மனம் செயல்படும் விதம் இதுவே. ஜாதக ரீதியாக சந்திர கிரகம் மாதுர்ஸ்தானம் கொள்வது இதனால் தான்.
அமாவாசை வருடத்தில் 12 வரும், மாதம் ஒன்று விதம்.இதிலும் இரண்டு அமாவாசை திதி வெகு விஷேசம் நம் சனாதன_தர்மிகளுக்கு
ஒன்று: ஆடிஅமாவாசை , இரண்டாவது தைஅமாவாசை.
அது ஏன்?
கிரகங்கள் நகர்வுகளை பூமியில் இருந்து பார்க்கும் கோணத்தில் கணிதம் செய்து வைத்து கொண்டு கணக்கிட முயன்று அதில் வெற்றியும் கண்டார்கள் நம் முன்னோர்கள்.
அப்படி அவர்கள் கண்டறிந்த முறைக்கு கோச்சாரம் என்று பெயர். 12 ராசிகள் என பிரித்து 27 நட்சத்திரங்களை அதில் உள்ளிட்டு கணிதம் சமைத்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தை மாதம் எனவும், ஒவ்வொரு ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தை நாள் எனவும் கொண்டனர்.
இதில் இரண்டு தரப்பினரும் உள்ளனர். ஒன்று சூரியனை பிரதானமாக கொண்டு கணக்கிடுபவர், சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுபவர். நாம் சந்திரனை எடுத்து கொண்டு உள்ளோம்.
மேஷ ராசி முதலாகக் கொண்டு மீன ராசி வரை 12 ராசிகள். இதில் கடகம் நான்காவது ராசி. இதன் அதிபதி சந்திரன். இந்த ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தை நாம் ஆடி மாதம் என்கிறோம். இந்த ராசியில் இருந்து நேர் எதிர் ராசியாக உள்ளது மகரம். மகர ராசியின் அதிபதி சனி. இந்த மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தை நாம் தை மாதம் என்கிறோம்.
இந்த இரண்டு ராசியில் வரும் அமாவாசை வெகு சிறப்பு வாய்ந்ததாகும்.
அமாவாசை திதியில் தர்ப்பணம் ஏன்?
முதலில் தர்ப்பணம் என்றால் தர்ப்பை எனும் புல்லின் ஊடாக நம்மை நாம் அர்ப்பணித்திலே தர்ப்பணம் என்கிறோம்.
சரி அர்ப்பணிப்பு என்றால் யாருக்கு?
என்னவென்று அர்ப்பணிக்கிறோம். ?
எதனை அர்ப்பணிக்கிறோம்?
இதற்கு விடை தெரிந்தால் ஏன் என்பதும் விளங்கிவிடும்.
இதற்கு இன்னுமோர் பதமும் உண்டு.
த்ருப்தி படுத்துதல்…
தர்ப்பையை கொண்டு த்ருப்தி படுத்துதல் .. அர்ப்பணித்தல்… ஆதலால் தர்ப்பணம் என்கிறோம் இதனை.
இவ்விதம் செய்ய இரண்டு அமாவாசை ஏற்றம் கொண்டது.
ஒன்று தை அமாவாசை..
மற்றொன்று ஆடி அமாவாசை…
இந்த ஆண்டு.
இத்துடன் 144 ஆண்டுகளுக்கு ஓர் முறை மாத்திரமே வரும் மஹா கும்பமேளா நடந்து வருகிறது.
மூன்று நதிகளின் சங்கமத்தில். சங்கமிக்கும் இடத்தில்.. பிரயக்ராஜில் இந்த மஹா கும்பமேளா நடக்கிறது. ஏற்கனவே பார்த்தது போல் ஐந்து முக்கிய குளியலில் நாளை அமாவாசையில் இரண்டாம் குளியல் அங்கு நடக்க இருக்கிறது.
இங்கும் மற்றோர் விஷேசமும் உண்டு. அது நாம் கொண்டுள்ள நவக்கிரகங்களில் ஐந்து ஒரே நேர்கோட்டில் அமையும் விதத்தில் கடந்து வந்திருக்கிறது. இப்படியான தருணத்தில் எந்த ஒரு ஜீவ நதியில் நீராடினாலும் ஜந்மாந்திர பாவங்கள் தொலையும் என்பர். ஒன்றிக்கே இப்படி என்றால் மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் முங்கிகுளித்தால்…??
பிரயக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளா பற்றின குறிப்பு ரிக்வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்றால் இதன் வயதை நீங்களே யூகித்து அறிந்திடுங்கள்.
நம் தமிழகத்திலும் இதேபோன்றதொரு அரிய நிகழ்வாக மஹாமகம் வரும் 2028 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி நடக்க இருக்கிறது என கணித்திருக்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க மூன்று நதிகள் சங்கமிக்கும் இடம் நம் தமிழகத்திலும் உண்டு.
காவிரி அமராவதி மற்றும் மணிமுத்தாறு ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடம் திருமுக்கூடலூர் ஆகும்.
இதே போன்றதொரு பெருமை காஞ்சிபுரம் அடுத்த பழைய சீவரம் எனும் ஊருக்கு அருகில் இதே பெயரை ஒத்த ஓர் அற்புதமான இடம் இருக்கின்றது. அது திருமுக்கூடல் என்பதாகும்.
இங்கு எழுந்தருளி நிற்பது அப்பன் பிரசன்ன வெங்கடேச பெருமாள்.ஒரு பக்கம் இவர் மறுபுறத்தில் மறுகரையில் லக்ஷ்மி நரசிம்மர் என பிரமாதமான இடம்.
பாலாறுக்கு க்ஷீர நதி என்று பெயர். இதனை ஒட்டியே பழைய சீவரம் என்கிறார்கள்.அடுத்தாக வேகவதி, சரஸ்வதி என்கிற மற்றோர் பெயரில் ஒரு நதி., அடுத்ததாக பகு நதி என மூன்றும் சங்கமிக்கும் இந்த இடத்திற்கு தான் திருமுக்கூடல் என்று பெயர். பகு நதிக்கு இன்று மற்றோர் பெயர் உண்டு, அது தான் செய்யாறு.
இந்த இடத்தை சுற்றுலும் புகழ் பெற்ற திருத்தலங்கள் பல உண்டு. அதில் பிரதானமானது ஓரிக்கை என இன்று அழைக்கப்படும் ஓர் இரவு இருக்கை. திருமழிசை ஆழ்வார் தனது சீடன் கனிக்கண்ணனுக்காக வா போகலாம் என காஞ்சி பெருமாளை அழைக்க… அவரும் மறுபேச்சில்லாமல் நகர அன்று இரவு அவர்கள் தங்கிய இடத்திற்கு இந்த பெயர் வந்தது. அதன் பொருட்டே பெருமாள் இங்கு மாத்திரமே இடம் வலம் மாற்றி சயனித்திருப்பார்.இது உலகில் எங்குமே காண இயலாத திருக்கோலம் என்பர். இதன் வடக்கு எல்லையில் தான் தக்கோலம் வருகிறது.
திருமுக்கூடலிலும் சயனத்திற்கும் பெருமாளே முதலில் இருந்திருக்கிறார். அவரே எழுந்து நின்ற கோலம் தான் அப்பன் வெங்கடேச பெருமாள் என்கிறார்கள். இதன் பின்னணியில் மிக நுட்பமான பொருள் உண்டு. தொண்டைமானுக்காக வரமருளிய திருக்கோலம்.
ஆகச் சிறந்த பித்ரு தோஷத்தை நிவர்த்தியாகும் இடம் இந்த திருமுக்கூடல். சொல்லி வைத்தார் போலே இவ்வாண்டில் செய்யாற்றில் வெள்ளம் வந்த படியால் ஜீவ நதியாக மாறி இருக்கிறது.
தில தர்ப்பணம் பிரதானம்.
திலம் என்பது எள்ளை குறிக்கும் சொல். அதுபோலவே மஹாலக்ஷ்மியையும் குறிக்கும்.
உள்ளங்கை அளவு எள்ளை எடுத்து தர்ப்பையின் நுணி கிழக்கு பார்த்து இருக்கும் படி பிடித்து இரண்டு கைகளாலும் நீரை ஏந்தி மார்புவரை உயரத்தி இதயப்பூர்வமாக வார்க்க பாவங்கள் தொலைந்து போகும். மந்திர உச்சாடனங்களை விட ஆத்மார்த்தமான அர்ப்பணத்தையே இது பிரதானமாக கொண்டிருக்கும்.
இவையெல்லாம் தான் நம்முடைய நதிக் கரை நாகரீகங்கள்.
நதி தீரத்தில் முடியாதவர்களுக்கு குளக்கரையில் சமர்ப்பிக்க ஏதுவான இடங்கள் ஆகும். குளக்கரையில் வடக்கு திக்கு நோக்கி இவ்விதம் செய்வது சாலச் சிறந்ததாகும்.
தொடர் போலும் எழுதி வருவதின் ஓர் அங்கம் இப்பதிவு. மூத்தோர் தவம் இன்னாநிலத்தில் அவதரித்தது .. அவர்களை கொண்டாட அவர்களுக்குண்டானதை வர்ஷிக்க நாளைய அமாவாசை தினம் பிரதானமான ஒன்று.
ஓர் கையளவு நீர்..
ஆத்மார்த்தமாக அழைத்ததற்காக தன் ஆசனம் விட்டு வந்தவன் அவன். அதற்கு சாட்சி ஓரிக்கை.
அப்படி பட்டவர்களை தந்தது இந்த மண். நாம் வாழும் இந்த மாநிலம்… அவர்களுக்காக ஓர் கையளவு நீர்.. அர்ப்பணிப்பிக்க முடியாதா என்ன.?
- ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்