
அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நீடிப்பாரா?
ஒரு அளவுக்கு மேல் மற்ற ஒருவர் எப்படிச் செயல்படுவார் என்பதை நமது அன்றாட வாழ்வில் கூட நாம் நூறு சதவிகிதம் சரியாகச் சொல்ல முடியாது. நாம் நாம்தான், அடுத்தவர் அடுத்தவர்தான்.
அரசியல் உலகில், ஒரு கட்சித் தலைவர் எடுக்கும் முடிவுகளைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை, நம் போன்ற பொது மக்களைப் பொறுத்தவரை, இன்னும் அதிகமாக இருக்கும்.
அடுத்தவர் முடிவைப் பற்றிய இந்த நிச்சயமற்ற தன்மை காரணமாக, யாரும் அதைப் பற்றி எந்த ஹேஷ்யமும் துணிந்து செய்யலாம். அதுவும் வேலையும் பொறுப்பும் இல்லாதவர்கள், பற்ற வைப்பவர்கள், கற்பனாவாதிகள், காக்கா, குருவி, கழுகு பட்சிகள் போன்றோர் குஷியாக ஒன்று செய்யலாம். அதாவது, பழனிசாமியுடனும் அண்ணாமலையுடனும் அமித் ஷா பேசும்போது காற்றோடு காற்றாகக் கலந்து யார் கண்ணிலும் படாமல் அவர்களுக்கு நடுவில் மிதந்தபடி அவர்களின் உரையாடல்களைக் குறித்துக் கொண்டு அவர்களின் முகபாவங்களையும் மனதில் பதித்து வைத்த மாதிரி, செய்திகள் உலவ விடலாம்.
அமித் ஷா என்ற மூன்றாம் மனிதர் அந்தக் கற்பனாவாதிகள் எழுதுகிற முடிவைத் தானே – மோடியைத் தவிர யாரிடமும் சொல்லாமல் – எடுக்கலாம். அமித் ஷா அப்படி ஒரு முடிவை – அதாவது, அண்ணாமலை பாஜக தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவது மாதிரியான முடிவை – தானாக, முன்கூட்டி வெளி உலகிற்குத் தன் முடிவைக் கசியவிடாமல், எடுத்துப் பின்னர் அறிவித்தால், “பார்த்தீர்களா, நாங்கள் முன்னமே இதைக் கரெக்டாக சொல்லிவிட்டோம்!” என்று ஹேஷ்ய எழுத்தாளர்கள் தம்மைத் தாமே மெச்சிக் கொள்ளலாம்.
ஒருவேளை, கற்பனாவாதிகள் எழுதியபடி ஒன்றும் நடக்கவில்லையா, அவர்கள் இன்னொரு திருப்பத்தை உடனே உண்டுபண்ணலாம். “கடைசி நேரத்தில் மோடி குறுக்கிட்டு அமித் ஷாவின் முடிவை மாற்றி விட்டார்!” என்று கற்பனாவாதிகள் ஒரு போடு போடலாம் – அதை நம்பவும் தமிழகத்தில் நிறைய மனிதர்கள் உண்டு!
நாம் இப்போது சரியாக செய்யத் தக்கது ஒன்றுதான். அரசியல் உலகில் என்ன நடக்கிறது, என்ன ஆகப் போகிறது, என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இப்போதைக்கு அவ்வளவுதான் நம்மால் செய்ய முடியும்.
— ஆர். வி. ஆர்