
திருவள்ளுவரும் திருக்குறளும் தங்களுக்கே சொந்தம் என்பது போன்ற மனோபாவம் திமுகவினரிடம் உள்ளது.
அதிலும், முதல்வர் எதைச் சொன்னாலும் யோசிக்காமல் கை தட்டும் ஒரு கூட்டம் இருப்பதால், மனம் போனபடி பேசுகிறார் அவர்.
‘ ஆரியத்தில் சொந்தம் கொண்டாட யாரும் இல்லாததால், வள்ளுவருக்கு காவியடித்து திருடப் பார்க்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள் ‘ என்பது அவரது இன்றைய பேச்சு. அதாவது, பாஜகவினர் திருவள்ளுவரை திராவிடத்திடமிருந்து அபகரிக்கிறார்கள் என்பது அவர் கருத்து.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த திருவள்ளுவர் என்ன உடை அணிந்தார் என்று யாருக்கும் தெரியாது.
ஆனால், திருக்குறள் முற்றிலுமாக அவரது ஆன்மீக சிந்தனையை பிரதிபலிக்கிறது. அதிலும் ஹிந்து மதக் கருத்துகளைப் பிரதிபலிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான திருக்குறள்கள் உள்ளன.
இவ்வுலகம், அவ்வுலகம், மண்ணுலகம், விண்ணுலகம் என்று பல குறள்களில் இடம் பெற்றுள்ளது. சனாதனத்தின் பெருமையையும் பல குறள்கள் உணர்த்துகின்றன.
துறவு மனப்பான்மை உடைய ஒரு ஹிந்து முனிவரைப் போன்ற தெய்வீக சிந்தனைகளை அவர் பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளதால், அவரை ஹிந்து துறவியாக நினைப்பதில் ஒரு தவறும் இல்லை.
திருக்குறளுக்கு மதம் இல்லை.திருவள்ளுவருக்கு மதம் உண்டு.
காவி என்பது பாஜகவின் நிறம் அல்ல. அது துறவு மனப்பான்மையை பிரதிபலிக்கும் நிறம். எனவே, காவி உடையை அவருக்கு அணிவித்து மகிழ்வது ஆன்மீகவாதிகளின் உரிமை. உடையின் நிறத்தால் அவரது பெருமை குறைந்து விடாது.
சொந்தம் கொண்டாட யாரும் இல்லாததால் திருவள்ளுவரை நாம் போற்றவில்லை . ஆன்மீகத்தை போதித்த ஆரியர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும், அவர்களில் திருவள்ளுவர் முன் வரிசையில் இருப்பவர் என்பதால்தான் அவர் அதிகம் போற்றப்படுகிறார்.
இதைத்தான்
‘ திருவள்ளுவரைத் திருடப் பார்க்கிறது ஆரியக் கூட்டம்’ என்கிறார் திமுக தலைவர்.
‘ திருவள்ளுவர் ஆரியக் கைக்கூலி. திருக்குறள் மூட நம்பிக்கைக் களஞ்சியம்’ என்று பிதற்றிய ஈ.வெ.ரா.வின் வழியில் நடக்கும் திமுகவினரை விட மற்றவர்களுக்கு திருக்குறளையும் திருவள்ளுவரையும் சொந்தம் கொண்டாட அதிக உரிமை இருக்கிறது.
திருவள்ளுவரும், திருக்குறளும் பொதுச் சொத்து. உரை எழுதியவர்கள் என்பதாலேயே சொத்தின் உரிமையாளராக முடியாது. யாரும் யாரிடமிருந்தும் இச்சொத்தைத் திருட முடியாது.
முதல்வரின் கருத்து பொருளற்றது.
- ‘துக்ளக்’ சத்யா





