தொழில் தொடங்க சிறந்த நாடுகள்: இந்தியாவை பின்னுக்கு தள்ளி சீனா, இலங்கை முன்னேற்றம்

நியூயார்க்:

தொழில் தொடங்க சிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி, சீனா, இலங்கை நாடுகள் முன்னேறியுள்ளன. இந்தியாவுக்கு 97-ஆவது இடமே கிடைத்துள்ளது. அமெரிக்க இதழான ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் 144 நாடுகள் இடம் பிடித்துள்ளன.

தொழில் தொடங்க சுமுகமான சூழ்நிலை, ஊழல், வன்முறை போன்ற பிரச்னைகள் இல்லாதது போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ”ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை ஆண்டுதோறும் சிறந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் டென்மார்க் முதலிடம் பெற்றுள்ளது.

இந்தப் பட்டியலில் 97-வது இடம் பிடித்துள்ள இந்தியா குறித்து ”ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியா உலகமயமாதல் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளபோதிலும், தன்னிறைவு, பிற நாடுகளை அதிகம் சார்ந்திருக்கக் கூடாது என்ற கொள்கையையும் வைத்துள்ளது. அந்நாட்டில் இப்போது இளைஞர்கள் அதிகம் உள்ளனர். எனவே அங்கு நீண்டகால வளர்ச்சி சாத்தியமாக உள்ளது. எனினும், அங்கு வறுமை, ஊழல், வன்முறை, பெண்கள் மீதான பாலினப் பாகுபாடு, போதுமான மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத் திட்டமின்மை, போக்குவரத்து, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் பிரச்னைகள், அரசு நடைமுறைச் சிக்கல்கள், தரமான கல்வியின்மை என பல்வேறு பிரச்சனைகள் இப்போதும் உள்ளன.

இருப்பினும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது. புதிய கண்டுபிடிப்புகளில் 41-வது இடத்திலும், தனிநபர் பாதுகாப்பில் 57-வது இடத்திலும், அறிவுசார் சொந்துரிமைப் பாதுகாப்பில் 61-வது இடத்திலும் இந்தியா உள்ளது.வர்த்தக சுதந்திரத்தில் 125-வது இடத்திலும், நிதிப் பரிமாற்ற சுதந்திரத்தில் 120-வது இடத்திலும், ஊழலில் 77-வது இடத்திலும், அரசு நடைமுறைச் சிக்கல்களில் 123-வது இடத்திலும் இந்தியா உள்ளதாக அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

நியூஸிலாந்து, நார்வே, அயர்லாந்து, ஸ்வீடன் ஆகியவை முறையே 2 முதல் 5-வது இடம் வரை பிடித்துள்ளன. சிங்கப்பூர் 8-வது இடத்திலும், பிரிட்டன் 10-வது இடத்திலும் உள்ளன. அமெரிக்கா 4 இடங்கள் பின்தங்கி 22-வது இடத்தில் உள்ளது. இலங்கை, சீனா ஆகிய நாடுகள் முறையே 91 மற்றும் 94-ஆவது இடத்தைப் பிடித்துள்ளன. ரஷியா 81-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தானுக்கு 103-வது இடமும், வங்க தேசத்துக்கு 121-வது இடமும் கிடைத்துள்ளது.