
தெலுங்கில் முன்னணி நாயகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் பிரபாஸ். இவரும் நடிகை அனுஷ்காவும் பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் படத்தில் சேர்ந்து நடித்தனர். அப்படத்தில் அவர்களது கெமிஸ்ட்ரி பெரிதும் பேசப்பட்டது. அதோடு அப்படத்தின் போது இருவரும் காதலிக்கிறார்கள் என்றும், விரைவில் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தங்களுக்குள் இருப்பது காதல் அல்ல நட்பு தான் என இருவரும் கூறி வந்தனர். அவர்கள் அப்படிச் சொன்ன போதிலும் காதல் வதந்தி நின்றபாடில்லை.
அனுஷ்காவுடனான தனது உறவு குறித்து முதன்முறையாக மிகவும் விளக்கமாக பேட்டி கொடுத்துள்ளார் நடிகர் பிரபாஸ். அதில், “வதந்திகள் எப்போதுமே இருந்து கொண்டே தான் இருக்கும். சிறிதுகாலத்திற்கு முன்பு இந்த வதந்தி கொஞ்சம் அடங்கி இருந்தது. தற்போது மீண்டும் ஆரம்பித்து விட்டார்கள்.
நானும் அனுஷ்காவும் சில படங்களில் சேர்ந்து நடித்துள்ளோம். எங்கள் இருவருக்கும் இடையில் 11 ஆண்டுகள் நட்பு இருக்கிறது. மற்றவர்கள் நினைப்பது போல், நிஜமாகவே எங்களுக்குள் ஏதாவது ஒரு உறவு இருந்தால் அதனை நாங்கள் மறைக்க வேண்டிய கட்டாயம் இல்லை..
எங்கள் இருவரில் யாராவது ஒருவருக்காவது திருமணம் ஆகும் வரை இந்த வதந்தி நிற்காது. அனுஷ்கா மிகவும் அழகானவர். அதனால் தான் பாகுபலியில் தேவசேனை கதாபாத்திரத்தில் நடித்தார். அவரையும் என்னையும் திரையில் இருக்கும் ஒரு ஜோடியாகத் தான் மக்கள் பார்க்கிறார்கள்.
இந்த வதந்திகளை எப்படி நிறுத்துவது என எனக்குத் தெரியவில்லை. நிச்சயம் ஒருநாள் நான் திருமணம் செய்து கொள்வேன். எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருக்கிறது. சமீபத்தில் திருமணம் பற்றிய எண்ணம் எனக்கு வந்தது. ஆனால் அப்போது படவேலைகளில் பிசியாக இருந்ததால் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் சீக்கிரமே திருமணம் செய்து கொள்வேன் என நம்புகிறேன்” என பிரபாஸ் அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.